(Reading time: 15 - 29 minutes)

"தி.. பார்த்தியா என் பொண்ண... என் ராஜாத்தி. என் தங்கக்கட்டி" மனைவியைப் பார்த்து பெருமையாய் புருவம் உயர்த்தினார்.

டாடி சொல்லிவிட்டால் மகள் எப்படியும் அதை செய்து விடுவதை பார்த்துக் கொண்டிருப்பவர் தானே...ஆனால் அதெல்லாம் சிறு சிறு அன்புச் செயல்களாக தான் இதுவரை இருந்து வந்தன. இன்று தன் மகள் தலையில் பெரிய சுமையை ஏற்றி விட்டாரோ கணவர் என்று ரத்னாவதி ஆதங்கப்பட்டார். பின் வரவிருக்கும் நிகழ்வுகளுக்கு அன்று ஓர் முன்னோட்டமா!!!

"பூர்வா யு ஹாவ் டோப்ட் தி ஹோல் கிளாஸ். வெரி குட்" ஒன்றாம் வகுப்பு "பி" பிரிவு ஆசிரியையும் அன்று தேர்வு முடிவுகளை விநியோகம் செய்து கொண்டிருந்தார்.

அபூர்வா புன்னகைத்துக் கொண்டாள். டாடி சொன்னதை செய்து விட்டோம் என்ற மகிழ்ச்சி, நிறைவு.

அவள் புதிதாக சேர்ந்தபடியால் அவளது வகுப்பில் யாரும் அவளிடம் தோழமை பாராட்டவில்லை. அவளுக்கு ஹிந்தி பேச தெரியாமல் இருந்ததும் ஒரு காரணம். எனினும் அமைதியாக சிரித்த முகமாகவே இருந்தாள். ஐந்தே வயது என்ற போதிலும் சில குணங்கள் பிறவியிலேயே அமைந்து விடுகிறது போலும்.

"து சித் கோ ஹரா தியா" (நீ சித்தை தோற்கடிச்சிட்டியா)

"சித் ஹமேஷா பர்ஸ்ட் ஆத்தா" (சித் தான் எப்போவும் பர்ஸ்ட் வருவான்)

அவளை சூழ்ந்த அவள் வகுப்பு மாணவர்கள் “சித்” “சித்” என்று இவளைப் பார்த்து முறைத்தபடியே ஏதோ சொல்ல பாவம் அந்த பிஞ்சுக்கு விளங்கவில்லை.

அவள் சென்னையில் படித்தது மத்திய பாடத்திட்ட பள்ளி ஆதலால் ஹிந்தி அக்ஷரங்கள் மற்றும் எளிய சொற்கள் எழுத படிக்க மட்டுமே  தெரிந்திருந்தது. அதனாலேயே அரையாண்டு தேர்வில் ஹிந்தியிலும் நல்ல மதிப்பெண்கள் வாங்கியிருந்தாள்.

இப்போது அவள் வகுப்பு மாணவர்கள் நீண்ட தொடரில் ஏதோ கூறவும் அவளுக்கு விளங்கவில்லை.. ஆனாலும் அவர்கள் முகபாவம் வைத்து அவர்கள் தன்னிடம் கோபமாக ஏதோ சொல்கிறார்கள் என்று புரிந்து கொண்டாள்.

."சித் ..வா உனக்கு அவள காட்றேன் " சந்தோஷ் வலுக்கட்டாயமாக  சித்துவை  இழுத்துச் சென்றான்.

அங்கு தனது வகுப்பின் உள்ளேயே ஜன்னலின் ஓரமாக இருந்த இருக்கையில் அமர்ந்திருந்தாள் அபூர்வா. மற்ற பிள்ளைகள் எல்லாம் கூட்டமாய் அமர்ந்து உணவு அருந்திக்  கொண்டிருக்க இவள் மட்டும் தனியே அமர்ந்து ஜன்னலின் வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டே உணவை முடித்துக் கொண்டு அம்மா கொடுத்திருந்த பாதாம் பாலைக் குடித்துக் கொண்டிருந்தாள்.

அந்த டிசம்பர் மாதக் குளிரும் அவளுக்குப் புதிதே.. முழுக்கை ஸ்வட்டர், கால் முழுதும் மறைத்திருக்கும் படி வுல்லன் சாக்ஸ் மற்றும் தலையில் மங்கி குல்லா வேறு.

மற்றக் குழந்தைகள் யாருமே அவ்வாறு  தலைக்கு குல்லா அணிந்திருக்கவில்லை. விஜயகுமார் ஏற்கனவே  ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கியிருந்தார். அவளுக்கு குளிர் பழகும் வரை உடம்புக்கு ஏதும் வந்துவிட கூடாது என காரணம் கூற பிரின்சிபால் சரி என்று சம்மதித்திருந்தார்.

ப்போது சித்தார்த் உடன் அங்கு வந்த  சந்தோஷ் அவளைக் காட்டி , "சித் அவ தான்" என்று சற்று சத்தமாகவே கூறிவிட்டிருந்தான்.

“சித்” என்ற வார்த்தை மட்டுமே அபூர்வாவின் காதில் தெளிவாகக் கேட்டது.

சட்டென நிமிர்ந்து ஜன்னல் வழியே பார்க்க அங்கு சித்தார்த் சந்தோஷ் இருவரும் நின்று கொண்டிருந்தனர்.

அவள் எழுந்து வெளியே ஓடி வந்தாள். சித் என்றால் என்ன என்று அவளுக்குத் தெரிய வேண்டி இருந்தது.

"சித் அவ நம்மகிட்ட தான் வர்றா..வா ஓடி போயிரலாம்" சந்தோஷ் சித்து காதில் ரகசியமாய் சொல்லி அவனை இழுக்க சித்தார்த் அசையாமல் அங்கேயே நின்றான்.

"வாட் இஸ் சித் "

அபூர்வா இரு கைகளையும் இடுப்பில் வைத்துக் கொண்டு அவர்கள் இருவரையும் பார்த்துக் கேட்க அவளைப் பார்த்ததும் சித்தார்த் அடக்க மாட்டாமல் சிரித்தான். அவனைப் பார்த்த சந்தோஷும் சிரிக்க ஆரம்பித்தான்.. ஏன் சிரிக்கிறார்கள் என்று தெரியாமலே அபூர்வாவும் சிரித்தாள்.

"பில்லி தேக்கோ பில்லி ( பூனை பாரு பூனை) " என்று கூறிக் கொண்டே சிரித்தான்.

இயல்பில் குறும்புக்காரன் சித்தார்த். அவனது இந்த இறுக்கம் அமைதி எல்லாமே ஒரு நிகழ்வுக்குப்  பின் தொற்றிக் கொண்டது தான். இப்போது அபூர்வாவைப் பார்த்ததும் அவனது இயல்பு குணம் தலைதூக்கி விட்டிருந்தது.

"வாட் பில்லி” கேட்டுக் கொண்டே அவளும் சேர்ந்து சிரித்தாள்.

முதன் முறையாக அந்தப் பள்ளியில் தன்னோடு சிரித்து ஒருவன் பேசிக் கொண்டிருக்கவும் அவளுக்கு ஆனந்தம்.

"மீசை இன் யுவர் யுவர் பேஸ். ம்ம்ம்  மீசைக்கு இங்கிலீஷிலே என்னடா சொல்றது" சந்தோஷிடம் கேட்டான் சித்தார்த்.

அபூர்வா ஆயிரம் வாட்ஸ் பல்ப் போல் பிரகாசமாக," மீசையா எங்க என் மூஞ்சிலேயா. மீசைக்கு “மஸ்டாஷ்” ன்னு சொல்லணும் இங்கிலீஷிலே” தமிழ் தேனாக தன் காதில் பாய அவளுக்கு கொள்ளை ஆனந்தம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.