(Reading time: 13 - 26 minutes)

'விசேஷம்??? அழகாய் சிரித்தான் விவேக். 'அது வந்து பா... இங்கே ஒரு ஸ்ரீனிவாசனை பார்த்தேனே...' சொன்னவனின் குரலில் இருந்த குழந்தைத்தனமான சந்தோஷத்தை உணர முடிந்தது அப்பாவால். ஒரு ஆழமான சுவாசத்துடன் புன்னகைத்துக்கொண்டார் அவர்.

'சரிப்பா... பிளைட்டுக்கு டைம் ஆச்சு. அடுத்து மும்பை போறேன். அப்புறம் பேசறேன்..' துண்டித்து விட்டு உற்சாகமாக  நடந்தான் விவேக்.

சில அடிகள் அவன் நடக்க. நேருக்கு நேராக எதிர்பட்டாள் அவள். ஹரிணி!!!  அவள் முகத்தில் அதிர்ச்சி!! அவனது முகத்தில் கொஞ்சம் மாற்றம்.

'நினைத்தவுடன் கண்ணெதிரே வந்து நிற்கிறது பார் இந்த பூதம்..' சொல்லிக்கொண்டாள் அவள். அவள் முகத்தில் நிறையவே கோப கோடுகள்.

சில நொடிகள் அவனை பார்த்தபடியே நின்றவள் என்ன தோன்றியதோ சற்றே நகர்ந்து சென்று கைப்பேசியை எடுத்தவள் அழைத்தது ரஞ்சனியை.

'ஹாய்... ரஞ்சனி..' காதில் விழுகிறது இவனுக்கு. இதையெல்லாம் கண்டுக்கொள்வதாக இல்லை அவன்..

சில நிமிடங்கள் கடக்க அடுத்த விமானம் கிளம்புவதற்கான ஆயத்த வேலைகள் துவங்க, அந்த விமானத்தில் அவனுடன் வரப்போகும் சக விமானிகளின் அறிமுக படலம். அங்கே அவனருகே நின்றிருந்தாள் ஹரிணி. அவள்தான் அவனுடன் வரப்போகிறாள் என புரிந்தது அவனுக்கு.

தனது தம்பியின் திருமணத்தில் நடந்தவைகளை மறந்து, வெகு இயல்பாக, சக விமானியாக  அவளை நோக்கி அவன் கையை நீட்ட, இதழோரம் தோன்றிய ஒரு அலட்சிய சிரிப்புடன் அங்கிருந்து நகர்ந்தாள் அவள்.  தலையை இடம் வலமாக அசைத்துக்கொண்டு நகர்ந்தான் இவன்.

விமானத்தில் ஏறி காக்பிட்டில் தேவையான பாதுகாப்பு சாதனங்களை சரி பார்த்துவிட்டு மும்பையின் தற்போதைய வானிலை, தட்பவெப்பம் என எல்லாவற்றையும் கணக்கெடுத்துக்கொண்டு, அவன் திரும்ப கைகளை கட்டிக்கொண்டு அவனையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள் ரஞ்சனி. இருவர் கண்களும் சந்தித்துக்கொள்ள பற்றி எரிந்தது அவளுக்குள்ளே!!!

ரஞ்சனியின் திருமணத்தில் இவனை அவள் சந்தித்த போது ரௌத்திர மூர்த்தியாக அல்லவா இருந்தான் இவன்!!! இவளது அத்தனை தோழிகளுக்கும் முன்னால் எப்படி வெடித்தான் இவன்!!

அன்று சரேலென வேகத்துடன் அவள் கன்னம் வரை வந்த அவனது கரம்... அவளை அடிக்காமல் கையை தாழ்த்திக்கொண்டு கண்களால் வெறுப்பை உமிழ்ந்து விட்டு அவன் நகர்ந்த விதம்.... இவை எல்லாம் இன்னமும் அவள் நினைவில் அப்படியே!!! 

இவற்றை எல்லாம் நினைக்கும் போதே கொஞ்சம் அவமானமாக இருந்தது ஹரிணிக்கு. அவளிடம் எதுவும் பேசும் மனநிலையில் இல்லாதவனாக அங்கிருந்து நகர்ந்தான் விவேக்.

யணிகள் விமானத்தில் ஏறி இருக்க. விமானம் கிளம்ப ஆயத்தமாக இருக்க யார் விமானத்தை இயக்குவது என அவர்களுக்குள் முடிவு செய்துக்கொள்ளும் தருணம் அது. இவன் அந்த விமானத்தின் கேப்டன் என்பதால் அதை முடிவு செய்யும் அதிகாரம் அவனுக்கே.

ஒரு முறை அவளை ஏற இறங்க பார்த்தவனுக்கு என்ன தோன்றியதோ...

'ப்ளீஸ்....' என்றான் கேப்டன் இருக்கையை நோக்கி அவளை அமருமாறு கை நீட்டியபடியே...

'தேவை இல்லை...' பட்டென அவளிடமிருந்து பதில். 'நீ சொல்லி நான் என்ன கேட்பது???' என்பதை போன்றதொரு பாவம் அவள் கண்களில். இது எல்லாம் அவனை பாதிக்கவே இல்லை!!!

'அவனுக்கென்ன விமானம் ஓட்டுவது கசக்கிறதாமா???' சந்தோஷமாக அமர்ந்தான் கேப்டன் இருக்கையில். சீட் பெல்ட்டுக்கான விளக்குகளை எரியவிட்டு..

'குட் ஆஃப்டர் நூன் லேடீஸ் அண்ட் ஜென்டில்மென்... திஸ் இஸ் யுவர் கேப்டன் 'விவேக் ஸ்ரீனிவாசன்'. ப்ளீஸ் ஃபாசென் யுவர் சீட் பெல்ட்ஸ் ..... இட்ஸ் டைம் ஃபார் டேக் ஆஃப்...' அவன் அறிவிக்க... இவள் அவனுக்கு ஆணை கொடுக்க நகரத்துவங்கியது விமானம்.

இந்த முறை விமானத்தின் எடை சற்று கூடுதலாக இருக்க மேகங்களை கடந்து மேலே எழும்ப கொஞ்சம் சிரமமாகவே இருந்தது. மெது மெதுவாக விமானம் மேலே எழும்ப எழும்ப இவன் முகத்தில் பரவிய சந்தோஷ ரேகைகள் அவளுக்குள்ளே நெருப்பை கிளப்பியது.

என்ன செய்யலாம் இவனை??? யோசித்தபடியே அவனை பார்த்திருந்தாள் அவள். அவன் இவள் பக்கம் திரும்பவதாகவே இல்லை. அவனை திரும்ப வைப்பதென்ன தடுமாற வைக்கும் ஆயுதமே அவளிடம் இருக்கிறதே.

விமானம் பறந்துக்கொண்டிருக்க, மும்பையில் தரை இறங்க இன்னும் அரை மணி நேரம் இருக்க... திடீரென  காக்பிட்டில் எப்போதும் பரவி இருக்கும் வழக்கமான எரிவாயுவின் வாசத்தையும் தாண்டி அவன் நாசியை தொட்டது அந்த வாசம்!!!

காக்பிட் அறை முழுவதும் பரவியது ரோஜாப்பூக்களின் மணம். அவனது உடலின் ஒவ்வொரு அணுவும் ஒரு முறை உதறி ஓய்ந்தது. சரேலென திரும்பினான் அவள் பக்கம். அங்கே இருந்த அவளது திறந்திருந்த அவளது கைப்பையில் இருந்தன கிட்டத்தட்ட ஐம்பது ரோஜாக்கள்.

அந்த பூக்களை பார்க்க பார்க்க அவன் உயிர் வரை பரவியது நடுக்கம். முகம் முழுவதும் வியர்வை முத்துக்கள். ரோஜாப்பூக்கள் என்னுடைய மிகப்பெரிய வலியின் சாட்சி ஆயிற்றே!!! அவனது நினைவு திரையில் ஏதேதோ வந்து போயின

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.