(Reading time: 14 - 27 minutes)

சூப்பர் தாத்தா... பரமு தாத்தா எந்தக் கோவிலுக்கு போறார்.......”

“அவன் அடையார் அஷ்டலக்ஷ்மி கோவிலுக்கு போறான்.... அப்படியே மகாலிங்கபுரம் ஐயப்பன் கோவில்......”

“ஹ்ம்ம் செம்ம போங்கோ...... என்கிட்ட ஹெல்ப் கேட்டேளே.... என்ன அது.....”

“அது நீ என்னை டாக்ஸில நாரத கான சபால கொண்டு போய் விடறியா..... வரும்போது நான் பரமுவோட வந்துடுவேன்......”

“எனக்கு எத்தனை பெரிய ஹெல்ப் பண்றேள்.... உங்களுக்கு இதுக்கூட பண்ண மாட்டேனா....  சரி சீக்கிரம் கிளம்புங்கோ.... உங்களை விட்டுட்டு அப்படியே பக்கத்து மால்ல நானும், ஸ்வேதாவும் சுத்திண்டு இருக்கோம்... டிராமா முடிஞ்ச  உடனே நானே வந்து உங்களை கூட்டிண்டு போறேன்.....”

“சரிடா.... நான் பரமுக்கு போன் பண்ணி அவனைக் கிளம்ப சொல்றேன்”, யாரடி நீ மோகினி..... என்ற பாட்டை விசில் அடித்தபடியே கிளம்பச்சென்றார் அனந்து தாத்தா.

இங்கு ஷாப்பிங் வந்தவர்கள் திருப்பதி தேவஸ்தானத்திற்கு சென்று  பெருமாளை தரிசித்து விட்டு நல்லியை நோக்கி சென்றார்கள்.

“அம்மங்கா நாங்க வாங்கின புடவை கலர் உங்களுக்குப் பிடிக்கலைன்னு சொன்னேளே.... அதையும் இன்னைக்கு மாத்திடலாம்.... நீங்க உங்களுக்குப் பிடிச்சா மாதிரி வாங்கிக்கோங்க.....”, ராமன் சொல்ல அம்புஜம் சரியென்று தலையாட்டினார்.  பத்துவும் பங்கஜத்தை அவருக்குப் பிடித்த புடவையை வாங்கிக் கொள்ள சொன்னார்.

எல்லாருமாக நல்லிக்குள் நுழைய அம்புஜம் மற்றும் பங்கஜத்தின் தோரணையைப் பார்த்த சேல்ஸ்மேன் நேராக பட்டு செக்ஷனிற்கு அழைத்து சென்றான்.  கூடவே கூல்ட்ரிங்க்ஸ் உபசரணை வேறு.

முதலில் ஸ்வேதாவிற்கு  வாங்கி விடலாம் என்று கூரைப்புடவை பார்க்க ஆரம்பித்தனர்.  அவர்கள் காட்ட காட்ட கௌரி ஃபோட்டோ எடுத்து அதை watsapp-ல் ஸ்வேதாவிற்கு அனுப்பினாள்.   அவர்கள் காட்டியதில் மாந்துளிர் கலரில் அரக்கு பார்டர் புடவை பிடித்திருப்பதாக ஸ்வேதா கூற, அதை கௌரி ராமனிடம் கூறினாள்.

“பத்து உங்கக்கிட்ட ஒரு சின்ன விண்ணப்பம்.....”

“என்ன இது விண்ணப்பம் அது இதுன்னு....... என்ன சொல்லணுமோ பளிச்சுன்னு சொல்லுங்கோ ராமன்.....”, பத்து கூற அனைவரும் ராமனைப் பார்த்தனர்.

“அது இந்த கல்யாணம் நிச்சயம் ஆன உடனே எங்க அம்மா கனவுல வந்தா......”, என்று ஆரம்பிக்க இது எப்போ என்பது போல் பார்த்தார் ஜானகி.

“அந்தக் கனவுல இப்படித்தான் எல்லாருமா புடவை எடுக்க வரோம்.... அதுல எங்கம்மா இந்த மாந்துளிர் கலர் புடவைதான் செலக்ட் பண்றா..... நாம இதையே வாங்குவோமா.... எனக்கு என்னவோ சென்டிமென்ட்டா எங்கம்மா செலக்ட் பண்றா மாதிரி ஒரு ஃபீலிங்”, ராமன் கூற ராமனின் நடிப்பைப் பார்த்து கௌரி அசந்து விட்டாள்.  சிவாஜி கணேசன் விட்ட இடத்தை நம்ம அப்பா பிடிச்சுடுவா போலயே, சூப்பர்ப்பா என்று கையால் அபிநயம்  காண்பித்தாள்.  ராமன் செண்டிமெண்ட் என்று கூறியதால் வேறு பிரச்சனை இல்லாமல் ஸ்வேதாவிற்கு பிடித்த புடவையே வாங்கியாயிற்று.

“அப்பா கலக்கிட்டேள்..... எப்படிப்பா இப்படி இன்ஸ்டன்ட்டா அடிச்சு விட்டேள்..... ஆனாலும் ரொம்ப ஜானகி புருஷனா மாறிண்டு வரேள் சொல்லிட்டேன்”, கௌரி கலாய்க்க ராமன் சிரித்தபடியே அனைவரையும் அம்புஜத்திற்கும், பங்கஜதிற்கும் புடவை வாங்க அழைத்து சென்றார்.

“ஏண்டாப்பா அந்த ரெண்டாவது ராக்ல மூணாவது வரிசைல எட்டாவதா இருக்கற புடவையை எடு....”, அம்புஜம் சொல்ல.....

“போன தீபாவளிக்கு எங்காத்து வேலைக்காரிக்கு அந்தக் கலர்லதான் நான் புடவை வாங்கிக்கொடுத்தேன்”,என்று பங்கஜம் சொல்ல லேசாக புகைய ஆரம்பித்தது.

பங்கஜம் மூன்றாவது ராக்கில் நான்காவது வரிசையில் ஆறாவது சேலையை எடுத்துப் போட சொல்ல, அம்புஜம் எங்க வேலைக்காரி கூட இந்த கலர் கட்ட மாட்டா என்று நொடிக்க, கடைப்பையன்தான் நாம இப்போ புடவையைக் காட்ட வேண்டுமா, வேண்டாமா என்று குழம்பிப் போனான்.

ஏகப்பட்ட பெர்முட்டேஷன், காம்பினேஷன் போட்டு அத்தனை புடவையையும் எடுத்துப் போட்டும் ஒருவர் எடுத்ததை மற்றவர் கொடுத்த கமெண்ட்டில் பிடிக்காமல் போய்விட்டது.  

“என்ன அத்தங்கா இது பாவம் அந்தப் பையன் எத்தனை புடவை எடுத்துக் காமிக்கறான்.... இதுல ஒண்ணு கூடவா உங்களுக்குப் பிடிக்கலை.....”

“இங்க பாருடா பத்து..... புடவையெல்லாம் அப்படி சடார்ன்னு எடுத்துடப்படாது.....  குறைஞ்சது ஒரு நூறு புடையானும் அலசி ஆராயணும்”, என்று கூற கௌரி ஐயோ இந்தப் பாட்டி அடுத்து இங்க தோய்க்க உட்க்கார்ந்து விடுவாளோ என்று பயந்துவிட்டாள்.

“ஏண்டாப்பா..... தில்லானா மோகனாம்பாள் படம் பார்த்திருக்கியோ.... அதுல பத்மினி சேப்பும் இல்லாம..... ரோஸும் இல்லாம ஒரு கலர்ல புடவை கட்டிண்டு வருவாளே..... அது இருந்தா எடுத்துப் போடு”, என்று அம்புஜம் கூற.....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.