(Reading time: 25 - 50 minutes)

சுசீலாவும் கிருஷ்ணமூர்த்தியும் உண்மையில் வியந்து தான் போனார்கள். விஜயகுமார் குழந்தைகளின் மனநிலையை நன்றாக புரிந்து அதற்கேற்ப அவர்களை அணுகும் முறையை கண்டு சிலாகித்தனர்.

ஆனால் சித்தார்த் வந்ததுமே எதற்கு ஜெய் ஹிந்த் சொன்னான் என்ற அவர்கள் சந்தேகத்தை விஜயகுமார் தெளிவு படுத்தினார்.

“என்னோட வொர்க் பத்தி அபிக்கு எல்லாமே தெரியும். இந்த ரிபப்ளிக் டே பரேட்டுக்கு அபியை கூட்டிட்டு போறதா சொல்லிருந்தேன். சித்துவும் வரானான்னு கேளுன்னு அபிகிட்ட சொல்லி விட்டேன். சித்துகிட்ட அதான் டீல் பேசினேன்” விஜயகுமார் சொல்லவும் அங்கு அவனைவரின் முகத்திலும் புன்னகை.

“நாளைக்கு வந்து ஸ்டோரி சொல்றேன் சித்து” அபூர்வா சித்தார்த்திடம் விடை பெற அவனும் சந்தோஷமாக கை அசைத்தான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "யார் மீட்டிடும் வீணை இது..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

குளிர் கால விடுமுறை இன்னும் இரு வாரங்களுக்கு நீடித்தது. தினமும் மதிய வேளையில் சற்று வெயில் வரும் சமயமாக அருகில் இருந்த ஒரு பூங்காவில் குழந்தைகளை விளையாட விடலாம் என சுசீலா கூற  ரத்னாவதியும் அதை ஏற்றுக் கொண்டார்.

"அப்புறம் டாடி போய் அந்த கெட்டவங்கள வானத்துல இருந்து ஷூட் பண்ணிட்டார்" சித்துவிடம் நேற்று விட்டுப் போன கதையை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தாள் அபூர்வா.

"அபிக்கு இப்போ தான் அஞ்சு வயசு முடிஞ்சு ரெண்டு மாசம் ஆகுதுன்னு சொல்றீங்க. இந்த வயசுலேயே இவ்ளோ கூர்ந்து கவனிச்சு அத யோசிச்சு அதுக்கு தீர்வு வேற கண்டுபிடிச்சு...எப்படி ரத்னா. சித்துவுக்கு  ஆறு வயசு முடிஞ்சிருச்சு. இன்னமும் என்கிட்டே டான்ஸ் படிக்க வர பெரிய குழந்தைகளையும் பார்த்திருக்கேன். அபிக்கு அவள் வயசுக்கு மீறின அறிவும் முதிர்ச்சியும் இருக்குன்னு தான் எனக்கு தோணுது"

அபூர்வா நிலாவை அள்ளிக் கொண்டு வந்து சித்தார்த்தின் கையில் திணித்து சொன்னதை சுசீலா இன்னும் வியந்து கொண்டே தான் இருந்தார்.

ரத்னாவதி தான் கர்ப்பமாக இருந்த பொழுதில் இருந்தே விஜயகுமார் மகளுக்கு போதித்ததை விவரித்தார் .

"அபிமன்யு கதை கேக்குற மாதிரில இருக்கு"

"இத மட்டும் உன் அண்ணா கிட்ட சொல்லிடாதே சுசி. அவ்ளோ தான் என் பொண்ணு அபிமன்யுவை விட எல்லாம் ஒசத்தின்னு சண்டைக்கு வந்திருவார்" ரத்னாவதியும் சுசீலாவும் நட்பாய் உறவாய் ஒருமையில் பேர் சொல்லி அழைக்கும்படி நெருங்கி விட்டிருந்தனர்.

பொங்கலுக்கு இரண்டு நாட்கள் முன் தன் மாமியார் நாத்தனார் குடும்பம் வருகிறார்கள் என சுசீலா தெரிவித்து பொங்கல் அன்றே அபிக்கும் டான்ஸ் ஆரம்பிக்கலாம் என்று சொல்லியிருந்தார்.

"அம்மா காவ்யாக்கும் கார்த்திக்கும் கிபிட் குடுக்கனும்மா" சித்துவின் சொந்தங்களை தன் சொந்தங்களாகவே மனதில் பதித்து விட்டிருந்தாள் அபூர்வா.

சென்னையில் இருந்த போது அக்கம் பக்கம் இருந்த குழந்தைகள் பிறந்த நாள் விழாவிற்குப் பரிசுப் பொருள் கொடுக்கவென மொத்தமாக பொம்மைகள் விளையாட்டு சாமான்கள் சிறு பிள்ளைகளுக்கான கதை புத்தகங்கள் என ரத்னாவதி வாங்கி வைத்திருந்தார். அதில் இருந்து ஒரு கதை புத்தகத்தையும் மிக்கி பொம்மையையும் தேர்வு செய்தாள் அபூர்வா.

"காவ்யா இது உனக்கு" சித்தார்த்தின் அத்தை மகளிடம் அபூர்வா தான் கொண்டு வந்திருந்த பரிசைக் கொடுக்க காவ்யா முகத்தைத் திருப்பிக் கொண்டு ஓடிவிட்டிருந்தாள்.

"காவ்யா...இங்கே வா என்ன பழக்கம் இது" பத்மா அதட்ட விடுங்க குழந்தை தானே என்று ரத்னாவதி சமாதானம் செய்தார்.

முன்னதாக லலிதாம்பிகை பத்மா மற்றும் குழந்தைகளுடன் தில்லி வந்து சேர்ந்ததுமே சுசீலா நடந்தவை அனைத்தையும் ஒன்று விடாமல் ஒப்பித்து முடித்தார்.

"சுசி. இவ்வளவு நடந்திருக்கு, ஒரு வார்த்தை கூட என்கிட்டே சொல்லல நீ"

"இல்லமா. பத்மா மனசு சங்கடப்படும், அங்கே இருந்து கொண்டு நீங்களும் எதுவும் செய்ய முடியாம போச்சேன்னு தவிப்பீங்க"  மருமகள் சொல்லவும் லலிதாம்பிகை உண்மையில் சுசீலாவை எண்ணி பெருமிதம் கொண்டார்.

"அண்ணி. என்ன மன்னிச்சிடுங்க. அந்த குழந்தையை பார்க்கணும் அண்ணி. சாபம் கிடைக்கிறதுக்கு முன்னாடியே சாபவிமோசனம் தந்துட்டாளே" அபூர்வாவை பார்க்க பத்மா மிகுந்த ஆவல் கொண்டார்.

"பத்மா என்ன பேச்சு இது. சாபம் அது இதுன்னு. யார் மேலேயும் தப்பில்ல. இதெல்லாம் நடக்கும்னு விதிக்கப் பட்டிருக்கு. இல்லைனா அபூர்வா குடும்பம் அறிமுகமும் நெருக்கமும் கிடைச்சிருக்குமா" அவ்வளவு வேதனையை அனுபவித்த போதிலும் அதிலேயும் நன்மையை பார்த்த சுசீலாவை லலிதாம்பிகை மெச்சினார்.

"என்னமா நீங்க... இதெல்லாம் நீங்க கொடுத்த படிப்பினை தானே. மருமகளையும் மகளாகவே பாவிச்சு கொண்டாடும் மாமியார் எத்தனை பேர் இருக்காங்க"

"சுயமா சிந்திக்கவும் செயல்பட சுதந்திரமும் உள்ள ஒரு பெண் எந்த உறவிலும் அவள் தனித்தன்மை மாறாமல் இருப்பா. மாமியார், நாத்தனார் சண்டை சச்சரவு இதெல்லாம் அறியாமையில் வர்றது. இத தாண்டிய தன் அடையாளத்தை தேடுபவள் இந்த வட்டத்துக்குள் சிக்கிக்கவே மாட்டா" லலிதாம்பிகை மகளையும் மருமகளையும் வாஞ்சையோடு அணைத்துக் கொண்டு சொன்னார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.