(Reading time: 27 - 53 minutes)

கொதித்து பொங்கிப்போனவராக அபர்ணாவின் அறைக்குள் நுழைந்தார் அப்பா. அவரை பின்தொடர்ந்து பரத். அதே நேரத்தில். எதுவுமே புரியாதவனாக அறைக்குள் வந்தான் அவள் அண்ணன் அஷோக்.

'என்னமா??? உனக்கும் அருணுக்கும் ஏதாவது பிரச்சனையா??? யாருமே வரலையேமா??? அபர்ணாவை பார்த்து கேட்டார் அப்பா. தன்னையும் அறியாமல் ஒரு வித தவிப்புடன் அவள் அருகில் சென்று நின்றுவிட்டிருந்தான் பரத். 

'உடைந்து அழப்போகிறாளோ என்னவள்???' உடலின் ஒவ்வொரு அணுவும் நடுங்கும் உணர்வுடன் மெல்ல நிமிர்ந்து அபர்ணாவின் முகம் பார்த்தான் அவன்  

'கனவா??? எல்லாம் கானல் நீரா???' அதே கேள்வியை அலையடிக்கும் மனது திரும்ப திரும்ப அவளை கேட்டுக்கொண்டிருக்க, அப்போதும் அவசரமாக ஓடி வந்து முன்னால் நிற்கும் கண்ணீர் கூட உறைந்து போயிருக்க  கருங்கல்லில் செய்து வைத்த பொம்மையாய் நின்றிருந்தாள் பெண்.

'என்னாச்சுமா உன்னைதான் கேக்கறேன்...' அப்பா மறுபடியும் உலுக்கும் குரலில் கேட்க

'ம்...' என்று கலைந்தவள் மெல்ல விழி நிமிர்த்தி பரத்தை பார்த்தாள். அவளது ஒற்றை பார்வையிலேயே உயிர் வறண்டு போனது அவனுக்கு.  

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தேவியின் "பாயும் மழை நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

'எ.. எனக்கு எதுவும் தெரியலைப்பா...' குரல் தேய்ந்து ஒலிக்க சொன்னாள் அபர்ணா.

'வரவில்லையா நிஜமாகவே அருண் வரவில்லையா???' இப்போதும் உண்மையை நம்பவே இயலாமல் அந்த ஒரு கேள்வி மட்டுமே அவளை புரட்டிக்கொண்டிருந்தது.

'என்ன நினைச்சிட்டிருக்காங்க இவங்க. நான் சும்மா விட மாட்டேன். இப்படி கல்யாணம் வரைக்கும் கொண்டு வந்திட்டு வேண்டாம்னு சொன்னா என்ன அர்த்தம்??? நான் போலீஸ்க்கு போறேன். என்ன நடக்குதுன்னு பார்ப்போம்..' அப்பா படபடக்க

'அதெல்லாம் வேண்டாம்பா..' நிறையவே தளர்ந்து போய் இருந்தது அவள் குரலும் மனமும். அப்போது அறையினுள் நுழைந்தனர் விஷ்வாவின் அப்பாவும் அம்மாவும்.

'இல்ல அப்பூ ... அப்பா சொல்றது தான் கரெக்ட்  .. அவனுங்களை ....' அஷோக் கொதிக்கும் குரலில் எதேதோ சொல்லிக்கொண்டே போக  எதுவுமே அவள் காதில் விழவில்லை.

மனம் முழுவதும் பரவிக்கிடந்த அழுத்தத்தில் அவளுக்கு தலை சுற்ற துவங்க, கால்களின் கீழே பூமி நழுவ,

'வே.. ண்.. டாம்..பா.. ப்ளீஸ்...' என்று ஏதோ சொல்ல முயன்றவள் சொல்லவே முடியாமல்  அப்படியே மயங்கி சரிந்தாள். .

'க.....ண்......ண.....ம்.....மா..' பரத்தின் குரல் அங்கே எதிரொலிக்க அவளை மொத்தமாக  தாங்கிக்கொண்டான் அவன். எல்லாருமே பதறிப்போக

'டா..க்...டர்... ...வி... வி...ஷ்,,,வா.. எங்கே??? வந்தானா இல்லையா அவன். யாரவது விஷ்வாவை கூப்பிடுங்க.' பரத்தின் குரல் உச்சகட்ட பதற்றத்துடன் ஒலித்தது. அபர்ணாவை கைகளில் அள்ளிக்கொண்டான் அவன்.

'இதோ.. இதோ இருக்கேன்... வந்திட்டேன்..... .வந்திட்டேன்' என்றபடியே அறைக்குள் வந்தான் விஷ்வா.

மண்டபத்தில் இருந்த அவர்களது சொந்தங்கள் கிசுகிசுத்து கொண்டிருக்க உள்ளே வருவதற்குள் அங்கே இருக்கும் சூழ்நிலை புரிந்து விட்டிருந்தது விஷ்வாவுக்கு. பரத் அவளை அங்கே இருந்த கட்டிலில் படுக்க வைக்க, முதலுதவிகளை செய்தபடியே விஷ்வா அவளை பரிசோதிக்க துவங்க,

'ஒண்ணுமில்லைல விஷ்வா. அவளுக்கு ஒண்ணுமில்லைல..' திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டே இருந்தான் பதற்றத்தின் எல்லையில் நின்றிருந்த பரத்.  

'இரு இரு ஒண்ணுமிருக்காதுடா.... ஏன் இப்படி தவிக்கறே??? டென்ஷன்லே மயக்கம் போட்டிருப்பா...அவ்வளவுதான் .' விஷ்வா சொல்ல

'மத்தியானம் அவ சாப்பிடல..' இது ப்ரியா..

'சாப்பிடலையா ஏன் ஏன்???' அவன் குரல் தவிப்பின் உச்சியில் இருக்க இப்போது எல்லார் பார்வையும் பரத்தின் மீதே.

'இவன் ஏன் அவளுக்காக இப்படி பதறுகிறான்???' மெளனமாக அவனை பார்த்திருந்தார் அவள் அப்பா.

அவனது அந்த 'க.....ண்......ண.....ம்.....மா..' அவரை  கொஞ்சம் உலுக்கத்தான் செய்திருந்தது  பரத்தின் அம்மாவும் அப்பாவும் கூட அவனது தவிப்பை வியப்புடன் பார்த்திருந்தனர்.

அவளது அம்மாவும், அஷோக்கும் கூட யோசனையில் விழுந்தனர். இருவர் மனமும் ஒரே புள்ளியை நோக்கியே நகர்ந்தது. அவர்களது மனதிலிருந்து அருண் மொத்தமாக விலகி இருக்க அந்த இடத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டிருந்தான் பரத்.

கால் மணி நேரம் கடந்திருக்க மெல்ல கண்விழித்தாள் அபர்ணா. ஒரு நிம்மதியான மூச்சுடன் எழுந்தான் அதுவரை அவள் அருகிலேயே அமர்ந்திருந்த பரத். அவளிடம் எதுவும் பேசவில்லை அவன். பேசும் தைரியம் வரவில்லை.

மற்றவர்கள் அவளை சூழ்ந்துக்கொண்டு அவரவர்களுக்கு தோன்றிய ஆலோசனைகளையும், ஆறுதலையும் சொல்லிக்கொண்டிருக்க, அடுத்து என்ன செய்வது என்பதையும் பேசிக்கொண்டிருக்க  அங்கிருந்து மெல்ல விலகி அறையை விட்டு வெளியே வந்தான் பரத்.  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.