(Reading time: 27 - 53 minutes)

'ணமேடையா??? நானா???' புரியாதவனாக பரத் கேட்க 

'பின்னே உன்னை விட்டா வேறே யாரு??? வா வா...' அவனை தள்ளிக்கொண்டு நடந்தான் தம்பி.

காருக்குள் இருவரும் அமர ஜன்னல் வழியே சாலையையே வெறித்துக்கொண்டிருந்தான் பரத். காரை கிளப்பவில்லை விஷ்வா. அவனே பேச்சை தொடங்கினான்  

'நீயும் அஸ்வினியும் சேர்ந்து ஏதோ செய்யறீங்கனு மட்டும் எனக்கு புரிஞ்சது. சரி நடக்கறது நடக்கட்டும்ன்னு இத்தனை நாள் சும்மா இருந்தேன்.. நீ என் அண்ணன்டா. நீ தப்பு பண்ண மாட்டேன்னு எனக்கு தெரியும். இப்பவும் நீ என்ன பண்ணேன்னு கேட்கலை. அருண் என்ன தப்பு பண்ணான்ன்னு தெரிஞ்சுக்க கேட்கறேன். சொல்லு என்ன நடந்தது???'

சில்லென்ற கடற்காற்று ஜன்னலை தாண்டி ஊசி போட மெதுவாய் விஷ்வாவை நோக்கி திரும்பினான் பரத். அடுத்த சில நிமிடங்களில் நடந்ததை எல்லாம் அவனிடம் கொட்டி இருந்தான்.

'நான் அவளை கல்யாணம் பண்றேனோ இல்லையோ அது வேறே விஷயம்.. ஆனா எந்த நிலையிலும் அவளை அவனோட அனுப்ப எனக்கு கொஞ்சம் கூட இஷ்டம் இல்லை...' என்றான் பரத் ஒரு பெருமூச்சோடு

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "தமிழுக்கு புகழ் என்று பேர்..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

'குட் டிசிஷன். இந்த விஷயம் முதலிலேயே தெரிஞ்சு இருந்தா அவளோட அப்பா, அம்மா, அஷோக், நான் எல்லாரும் இப்படிதானே யோசிச்சு இருப்போம்' என்றான் விஷ்வா சட்டென.

'யார் யோசிச்சாலும் அவ ஒத்துக்கணும் இல்லையா??? அது நடக்காதுன்னு எனக்கு தோணிச்சு.. .அதனாலேதான் அப்படி பண்ணேன்..' என்றான் பரத் இரு கைகளையும் தேய்த்துவிட்டுக்கொண்டபடியே.

சில நொடி யோசனை விஷ்வாவிடம். 'எல்லாமே நல்லதுக்குத்தான். நாளைக்கு உனக்கும் அப்புவுக்கும் கல்யாணம். நான் எல்லார்கிட்டேயும் பேசுற விதத்திலே பேசிக்கறேன். நீ இனிமே யார்கிட்டேயும் நடந்தது எதையும் சொல்ல வேண்டாம்..'

'டேய்.. அவசர படாதே. அபர்ணா என்ன நினைக்குறான்னு தெரியலை. அவ மனசார சம்மதிக்க வேண்டாமா???

'அதெல்லாம் சம்மதிப்பா.. நான் பார்த்துக்கறேன்..'

'விஷ்வா.. அவளை யாரும் கட்டாய படுத்தாதீங்க.. ப்ளீஸ்..' கெஞ்சலாக சொன்னான் பரத்.

'ஏலேய்.. எனக்கு தெரியும்டா நீ ஃப்ரீயா விடு.' பரத்தை அதற்கு மேல் பேச விடாமல் காரை கிளப்பிக்கொண்டு பறந்தான் விஷ்வா.

நேரம் இரவு பத்தை நெருங்கிக்கொண்டிருந்தது. மழை இன்னமும் விட்டிருக்கவில்லை

மண்டபம் அமைதியாகவே இருந்தது. இவர்கள் வீட்டு சொந்தங்கள் மட்டுமே இருந்தனர் அங்கே. அந்த அறையில் பரத் மட்டுமே அமர்ந்திருந்தான். சாப்பிடக்கூட  தோன்றவில்லை அவனுக்கு.

'என்ன செய்துக்கொண்டிருக்கிறாளோ அபர்ணா???' அவளையே சுற்றிக்கொண்டிருந்தன அவனது எண்ணங்கள்.

திடீரென அறைக்கதவு தட்டப்பட இவன் திறக்க அங்கே நின்றிருந்தனர். அபர்ணாவின் பெற்றோர். அவர்களுடன் அஷோக்கும் இவனது அப்பா, அம்மாவும் கூட!!!

எல்லாரும் எதற்காக வந்திருக்கிறார்கள் எனும் காரணத்தை பெரிதாக யோசிக்க வேண்டிய தேவை இருக்கவில்லை அவனுக்கு.

'உன்கிட்டே கொஞ்சம் பேசணுமேபா...' இது அபர்ணாவின் அப்பா.

'தாராளமா. உள்ளே வாங்க..' பரத் சொல்ல எல்லாரும் உள்ளே வந்து அமர, அறை வாசலுக்கு வந்து கதவில் சாய்ந்து நின்றுக்கொண்டான் விஷ்வா.

யார் துவங்குவது, எப்படி துவங்குவது எனும் யோசனையுடன் கலந்த ஒரு தயக்கமான மௌனம் அங்கே ஓடிக்கொண்டிருந்தது. யாருக்கும் நடந்தது எதுவும் தெரியவில்லை என்று மட்டும் புரிந்தது பரத்துக்கு.

எங்கேயோ தூரத்தில் இடி சத்தம். அந்த ஒலி பரத்தையும் அபர்ணாவின் அம்மாவையும் பழைய புள்ளியில் கொண்டு நிறுத்தியது.

'அப்படி இன்னைக்கு சாயந்திரம் ஆறு மணிக்குள்ளே மழை வந்திட்டா என்ன தருவீங்க? உங்க பொண்ணை எனக்கு கல்யாணம் பண்ணி தருவீங்களா???'

'அன்னைக்கும் மழை. இன்னைக்கும் மழை. ' அவளது அம்மா மெல்ல சொல்ல சட்டென விழி நிமிர்த்தினான் பரத். ' அன்னைக்கு எல்லாத்தையும் பார்த்திட்டு இருந்த ஆண்டவன் என்னை இன்னைக்கு உங்க முன்னாடி கொண்டு வந்து உட்கார வெச்சிட்டான்...' அம்மா சொல்லிக்கொண்டிருக்க மற்றவர்கள் யாருக்கும் எதுவும் புரியவில்லை.

இப்போ என் பொண்ணை தர தயாரா இருக்கேன். உங்களுக்கு சம்மதமா..' அம்மா கேட்க 

'சம்மதமா???' என்ன கேள்வியாம் இது. இதற்காகத்தானே இத்தனை ஆண்டுகளாக தவம் இருக்கிறேன் நான்???' பதில் மொழி பேச இயலாத பரத்தின் இதழ்களில் அழகான புன்னகை.

'உனக்கு அவளை பிடிச்சிருக்குன்னு எங்களுக்கும் தோணிச்சு. விஷ்வாவும் சொன்னான். அவளை கல்யாணம் பண்ணிக்கறியாபா..' இது அவள் அப்பா. 'யோசிக்காம அவசரபட்டு ஒரு தப்பான முடிவும் எடுத்திட்டோம் நாங்க எல்லாரும். இனிமே அதை பத்தி யோசிச்சு ஒண்ணும் ஆக போறதில்லை. இப்போ அவளும் காயப்பட்டு போயிருக்கா. நீ நம்ம வீட்டு பையன். இந்த நேரத்திலே உன்னை தவிர அவளை சரியா புரிஞ்சுக்க வேறே யாரும் இல்லைன்னு தோணுதுபா...'

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.