(Reading time: 10 - 20 minutes)

விழி திறந்த மகாதேவனின் பார்வையில் சிற்பிகள் அனைவரும் தென்பட,

“வாருங்கள் சிற்பிகளே…. வாருங்கள்…”

அவன் மனமார வரவேற்க,

அவனை கையெடுத்து கும்பிட்டு வணங்கியவர்கள்,

“மகாதேவா….. எங்களுக்கு தங்களது நாட்டில் வாழ்வதற்கு இடமளிப்பீர்களா?...” என கேட்க, அவனோ சிரித்தான்…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

நிஷாலக்ஷ்மியின் "வானவிழியழகே..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

பின், “எனது என்று எதுவுமில்லை இங்கே… தாராளமாக இங்கே தாம் அனைவரும் தங்கிக்கொள்ளலாம்…” என்றதும்,

“நாடே தங்களது தான் என்ற போதும், தங்களின் தன்னடக்கம் எங்களை வியக்க வைக்கிறது… அனைத்திற்கும் மேல் தாம் அந்த எம்பெருமானின் அம்சம் என்பதை பலரின் வாயால், கேட்டதுண்டு… ஆனால் இன்றுதான் நேரில் காண்கிறோம்.. பெரும் பாக்கியசாலிகள் நாங்கள்…”

“உலகில் மனிதராய் பிறந்ததே பாக்கியம் தான்… அதை எண்ணி பெருமை கொள்ளுங்கள்… அம்மனிதப் பிறவியில், பிறருக்கு உதவி செய்வதை பாக்கியம் என்று கருதுங்கள்… வேறு எதற்காகவும் பாக்கியம் செய்தவர் என்று கருதாதீர்கள்…”

என்றவன் தான் அமர்ந்திருந்த இடத்தை விட்டு விட்டு அகல, அவர்கள் அனைவரும் அவன் போவதையேப் பார்த்துக்கொண்டிருந்தனர் மனம் எங்கும் நிறைவுடன்…

மன்னன் கயிலாதநாதனை சந்தித்து அவர்கள் விவரம் கூற, அவரோ அவர்களை கயிலாயபுரத்தினையே இனி தங்களது நாடாக எண்ணிக்கொள்ளுங்கள் என்று கூற, அவர்களும் மனம் மகிழ்ந்து போயினர் இனிதே….

மலரை சேகரித்த சதி, அரண்மனை திரும்ப, அங்கே அவளுக்காக காத்திருந்தார் பிரசுதி…

அவரிடம், தான் நலமாக இருப்பதாக கூறியவள், தனதறைக்குச் சென்று சாளரத்தின் வழி தெரிந்த நிலாவினைப் பார்த்துக்கொண்டிருந்தாள்…

அவள் மனதில் ஏதோ ஒரு இதம் பரவ, மெல்ல உறங்கியும் போனாள்… அடுத்து வந்த இரண்டு நாட்களும், அதே போலவே கழிய, தேவையான மலர்களை சேகரித்துவிட்டு, அதில் ஸ்ரீமன் நாராயணனின் பெயரை எழுத துவங்கினாள் அவள்…

எழுதி எழுதி விரல்களே வீங்கிப் போய்விட, எனினும் அவள் தன் பணியைத் தொடர்ந்தாள் செவ்வனே…

ஒரு இலட்சம் மலர்களில் இறைவனது நாமத்தை எழுதுவது அவ்வளவு எளிதான காரியமா என்ன?...

இரவு பகல் பாராது எழுதிக்கொண்டே இருந்தாள் சதி, தன் கைகள் உணர்ச்சியின்றி போன தருவாயிலும்….

வலியும், வேதனையும் அவள் உணரும் ஒவ்வொரு தருணத்திலும், பிரஜாபதியின் பாராமுகம் ஒன்றே அவளின் கண் முன் தோன்ற,

அவள் தன் கடமையே கண்ணாக இருந்தாள்…

ஏழாவது நாளின் இறுதியில், இன்னும் சில மலர்கள் நாராயணனின் பெயரை தாங்க மீதமிருக்க, அயர்வின் தாக்கத்தில் சற்றே கண் அயர்ந்தாள் சதி….

அந்நேரம் அவளைக் காண வந்த பிரசுதி, மகளின் நிலையை எண்ணி வருந்தியவர், அவளது வேலையை செய்ய முனைய, சட்டென அரவம் உணர்ந்து விழித்த சதி, தனது அன்னை செய்யப்போகும் காரியத்தை அறிந்து,

அவரிடமிருந்து மலர்களை வேகமாகப் பிடுங்கினாள் சதி வேகமாய்…

“சதி… மகளே… நான் உனக்கு….”

“வேண்டாம் அன்னையே…. என் கடமையை நானே முடித்தாக வேண்டும்… இதில் தங்களை நான் ஈடுபடுத்துவது முறையாகாது….”

“எனினும் மகளே… உன் விரல்கள்….”

“என் கரமே போனாலும் அதைப் பற்றி நான் கவலை கொள்ளத் தயாராயில்லை அன்னையே…”

“என்ன வார்த்தை கூறுகிறாய் மகளே?...”

“நெருப்பு என்று சொன்னால் நா நெருப்புக்கு இரையாகிடாது அன்னையே…”

“எனினும் மகளே….”

“தாம் எந்தவொரு சமாதானமும் எனக்கு கூற வேண்டாம்… என் பணியை நான் செய்ய எனக்கு அனுமதி மட்டும் அளியுங்கள்… அதுவே போதும் அன்னையே….”

சதி பிரசுதியை தன் வார்த்தைகளினால் கட்டிப்போட்டுவிட, அவரால் அதற்கு மேலும் அவளோடு வாதாட முடிந்திடவில்லை…

“பரந்தாமா…. என் மகளுக்கு திறனை அளித்து, இந்த சோதனையில் அவளை வெற்றியடைய செய்யுங்கள்….”

மனமார அவர் வேண்டிக்கொண்டிருக்க, அவரின் அருகில் அமர்ந்த சதி, தன் பணியைத் தொடர ஆரம்பித்தாள் மீண்டும்….

இரவில் வலம் வந்த சந்திரன், வானில் இருளை மறைய வைத்து தன்னுடன் அழைத்துச் செல்ல முயன்ற நேரம்,

கண்களில் தூக்கத்துடன், விரல்களில் நடுக்கத்துடன், கடைசி மலரில் பரந்தாமனின் பெயரை எழுதிக்கொண்டிருந்தாள் சதி மிக மெதுவாக…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.