(Reading time: 10 - 20 minutes)

சில இதழ்கள் மீதமிருக்க, இருள் முற்றிலும் மறைய துவங்கியிருந்தது….

வலியை பொறுத்துக்கொண்டு தன் எழுதும் பணியை சற்றே அவள் துரிதப்படுத்த, அவளால் ஏனோ அது முடியாமல் போனது…

மனதினை ஒருநிலைப்படுத்தியவள், சில நொடிகள் கண் மூடி திறந்திட,

அவள் விரல்கள் அவளையும் அறியாமல், இறைவனின் நாமத்தினை எழுதியது நேரத்தை கணக்கில் கொண்டு….

அந்த நீல வானில் ஆதவன் உதித்த வேளை, அவளின் கரங்களும் சற்றே தளர்ந்தது தன் பணியை நிறைவேற்றிவிட்ட நிம்மதியில்….

அப்படியே சில கணங்கள் அங்கேயே அமர்ந்திருந்தவள், பின் எழுந்து பிரஜாபதியைக் காணச் சென்றாள் ஓடியபடி…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

அன்னா ஸ்வீட்டியின் "அதில் நாயகன் பேர் எழுது..." - காதல் கலந்த சரித்திர + குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

ஆளுயர விஷ்ணு சிலைக்கு பூஜைகள் செய்து முடித்து விட்டு அவர் திரும்பிய வேளை, அவரின் முன்னே போய் நின்றாள் சதி மூச்சு வாங்கியபடி…

அவளைப் பார்த்ததும், எதுவும் பேசாமல் நின்றவரின் முன்,

“தந்தையே… தமக்கு நான் கொடுத்த வாக்கினை நிறைவேற்றிவிட்டேன் தந்தையே…. ஒரு இலட்சம் தாமரை மலர்களில் பகவான் ஸ்ரீவிஷ்ணுவின் நாமத்தினை நான் எழுதிவிட்டேன்… இனியாவது தாம் என்னுடன் எப்போதும் போல் உரையாடுவீர்களா தந்தையே?...” என கண்கள் கலங்க அவள் கேட்க,

அவரது முகத்திலோ பெரும் நிறைவு…

“கூறுங்கள் தந்தையே… என்னிடம் உரையாடுவீர்கள் தானே?... இனியும் என்னால் தங்களது பாராமுகத்தை காண முடியாது தந்தையே… தயவுசெய்து என்னை மன்னித்து என்னுடன் பேசுங்கள் தந்தையே…”

அவள் கைகூப்பி வேண்ட, அவளின் கரங்களைப் பிடித்துக்கொண்டார் பிரஜாபதி…

“தந்தையே…..”

அவள் விழி விரிய அவரைப் பார்த்திட,

“மகளே…. சதி… என் மகளே….. நான் கொடுத்த தண்டனையை ஏற்று அதை இன்று நிறைவேற்றி, நீ எனக்கு புகழை சேர்த்துவிட்டாய் மகளே… பெருமை அளித்துவிட்டாய்….”

முகம் எங்கும் பூரிப்புடன் அவர் கூற, அவளது முகத்திலோ நிம்மதி..

“நான் செய்த தவறினை மன்னித்துவிட்டீர்கள் தானே தந்தையே….”

“ஆம் மகளே நீ உன் தவறுக்கு பிராயசித்தம் செய்துவிட்டாய்…. எனினும் அதுபோல் இனியொரு தவறை என்றும் நீ செய்யமாட்டாய் என்றும் யாம் நம்புகிறோம்…”

அவர் மனமார கூற, அவளோ, “நிச்சயமாய் தந்தையே…. தம் சொற்படியே யாம் நடப்போம்…” என்றாள் அவளும் புன்னகையுடன்…

பின், தனதறைக்கு வந்தவளை அன்று முழுவதும் ஓய்வெடுக்கும்படி பிரசுதி கூறி, அவளருகிலேயே அமர்ந்து அவளது கரங்களுக்கு மருந்திடுவதும், மகளின் தலையினை வருடிவிடுவதுமாய் இருக்க, சதிக்கு தனது அன்னையின் பாசம் புரிந்தது…

மகள் நன்கு உறங்குகிறாள் என்று அறிந்ததும், அறைக் கதவை சாத்திவிட்டு அவர் வெளியேற, அவளும் அத்தனை நாள் செய்த பணியின் அசதியில், அயர்ந்து உறங்கினாள்…

வெள்ளைப் பனித்திரைக்கு மத்தியில், பாதம் ஒன்று தென்பட, அந்த பாதத்தில் கவனம் பதித்தாள் சதி…

வெள்ளைப் பனி விலக விலக, அந்த பாதம் கொண்ட உடல் தெரிய ஆரம்பிக்க, அவள் பார்வை மெல்ல மெல்ல முகத்தை நோக்கி உயர்ந்தது…

ஆணின் பாதமும், பெண்ணின் பாதமும், ஒருங்கே தெரிய, ஆணின் உடலும் பெண்ணின் உடலும் ஒரே உருவத்தில் தெரிந்தது அவளுக்கு…

ஆண் பாதி, பெண் பாதியுமாய், இருந்த அந்த தேகம், தன் கரங்கள், மற்றும் பாதத்தினை அசைத்து பரதத்தினை நிகழ்த்த,

காற்றும் வழிவிட்டு இடையூறு புரியாது, அந்நடனத்தை வரவேற்றது அழகாய்…

நிலாவின் மிக அருகில், வானத்தில், வெள்ளை மேகங்கள் சற்றே சூழ்ந்திருக்க, அந்த நடனம் சதியினை மெய் சிலிர்க்க வைத்திருந்தது…..

என்ன ஒரு நடனம்?... அற்புதம்… பிரமிப்பு….. என அனைத்தும் கலந்த கலவை அவள் விழிகளில் தென்பட்ட வேளை, அந்த முகத்தினைக் காண விழைந்தது அவள் விழிகள்…

கைகளை தன் முகத்தருகே கொண்டு வந்து முகம் மறைத்து ஆடிய அந்த கரங்கள் மெல்ல விலக, நீண்ட கூந்தலும், அது கொண்ட நெற்றியும், சாந்தத்தினையும், ருத்ரத்தினையும் ஒருங்கே கொண்ட காந்த விழிகள் அவள் பார்வைக்கு தென்பட,

சட்டென உறக்கத்திலிருந்து விழித்து எழுந்து அமர்ந்தாள் சதி வேகமாய்…

அவள் தேகமெங்கும் வியர்வையில் நனைய, அவளது அறைக்கதவினை திறந்து கையில் ஆரத்தி தட்டுடன் வந்து அறைக்குள் நுழைந்தாள் அவளது சகோதரி…

அறையெங்கும் ஆரத்தி காண்பித்தவள், கலக்கத்துடன் எழுந்து அமர்ந்திருந்த சதியினை கவனித்து, அவளருகில் விரைந்து செல்ல,

“அக்கா….. நான்…..” என்று திணறினாள் சதி….

“என்னாயிற்று சதி… ஏன் உன் முகம் வெளிறிப் போய் காட்சியளிக்கிறது?... என்ன நடந்தது சதி?...”

அவள் பதறியபடி வினவ,

சதி தான் கண்ட காட்சியினை விவரித்தாள் தனது சகோதரியிடம்….

“நான் இதுவரை அப்படி ஓர் நடனத்தைக் கண்ட்தே இல்லை அக்கா… அற்புதமான பிரமிக்க வைக்கும் நடனத்தில், ஆணும் பெண்ணும் ஓருசேரக் கண்டேன் அக்கா… எனினும் அந்த முகம் பார்க்கும் முன் நான் விழித்துக்கொண்டேன்… இருந்த போதும் அந்த விழிகள் எனக்கு எதுவோ உணர்த்துவது போலேயே உள்ளது அக்கா…”

“இத்தனை நாள் உறக்கமின்றி இருந்தாய் அல்லவா… அதன் விளைவு தான் இது… மனதை அலட்டிக்கொள்ளாமல் இரு சதி… அது அனைத்தும் வெறும் கனவே… வீணாக மனதை போட்டு குழப்பிக்கொள்ளாதே… பூஜைக்கு நேரமாயிற்று…. விரைந்து கிளம்பி வா…”

என்றவள் சதியின் அறையை விட்டு வெளியேற, சதி சாளரத்தின் அருகே சென்று நின்றாள்…

விடிந்தும் விடியாத அந்த அதிகாலைப் பொழுது ரம்யமாக இருந்தது… எனினும் அதை ரசித்திடும் மன நிலையில் சதி இல்லை…

வானில் மேகக்கூட்டங்களின் நடுவில் மறைந்து கொண்டிருந்த சந்திரனைக் கண்டவளுக்கு அந்த நடனமும், விழியுமே நினைவு வர, அவள் ஒரு கணம் கண் மூடிட, அவளின் மனதில் வந்து நின்றது மகாதேவனின் முகம்…

Episode 38

Episode 40

{kunena_discuss:1001}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.