(Reading time: 10 - 19 minutes)

38. மருவக் காதல் கொண்டேன்... - மீரா ராம்

Maruva kathal konden

நிலத்தில் தன்னை ஒப்படைத்தவளாய், களைப்பில் அயர்ந்து போய் உறங்கிக்கொண்டிருந்தாள் சதி… பாதமெங்கும் சிவந்து போய்….

அந்த ராஜ்ஜியத்தின் இளவரசி… பாதத்தில் முள் தைத்த அடையாளத்தோடு, தரையில் யாதொரு வஸ்திரத்தையும் விரித்திடாது வெறும் நிலத்தில், தன்னை மறந்து உறங்கிக்கொண்டிருக்க… அவளது பாதங்களோ கன்னி சிவந்து போய் இருந்தது அதிகமாய்….

மகளின் நிலையைக் கண்ட பிரசுதிக்கு அழுகை முட்டிக்கொண்டு வர, சற்றும் தாமதிக்காது மகளின் அறைக்குள் நுழைந்தார்…

அவளது பாதங்களின் அருகில் அமர்ந்தவர், மகளினைப் பார்த்து கண்ணீர் வடித்துக்கொண்டிருக்க, அங்கே அந்த நேரம் அவரைத் தேடி வந்த சதியின் சகோதரிகளும் அக்காட்சியைப் பார்த்துவிட்டு துடித்துப்போனவர்களாய் சதியின் அருகே வர,

“தாயே…. என்ன இது… சதியின் பாதங்களின் ஏன் இத்தனை காயங்கள்?....”

“காடு, மலை பாராது நடந்த்தின் விளைவு… வேறு என்னவென்று நான் சொல்லிட?....”

பிரசுதி சொல்லிவிட்டு அழ ஆரம்பிக்க, அவளைத தேற்றினார்கள் சதியின் சகோதரிகள்…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜான்சியின் "அமிழ்தினும் இனியவள் அவள்..." - அவனுக்கு அவள் கிடைப்பதற்கரிய அன்புச்சுரங்கம் அவளுக்கோ அவன்...?

படிக்க தவறாதீர்கள்..

“யாரங்கே… விரைந்து சென்று சதியின் காயத்திற்கான மருந்தை எடுத்து வாருங்கள்…”

சதியின் சகோதரிகள் பணிப்பெண்களுக்கு உத்தரவிட, அவர்களும் உடனேயே கட்டுப்பட்டு அங்கிருந்து நகன்றதும், பிரசுதி, சதியினைப் பார்த்துக்கொள்ளும்படி, சதியின் சகோதரிகளிடம் கூறிவிட்டு, பிரஜாபதியைத் தேடிச் சென்றார் வேகமாய்….

தனதறையில், தரையில் அமர்ந்து, ஸ்ரீமன் நாராயணின் பெயரை ஓலைகளில் மயிலிறகின் உதவியோடு எழுதி எழுதி போட்டுக்கொண்டிருந்தார் தட்ச பிரஜாபதி…

“சுவாமி……”

குரல் கேட்டும் தன் எழுதும் பணியை அவர் நிறுத்தவில்லை…

“இங்கே தாம் என் கணவரா?... இல்லை இந்நாட்டின் அரசரா?....”

“கூறு பிரசுதி……”

“சுவாமி… நம் சதியினை வந்து ஒருமுறை பாருங்கள்….”

“…………”

“அவளின் நிலை பெற்றவளாகிய எனக்கு வேதனையை தருகிறது சுவாமி….”

“…………….”

“அவளின் பாதங்கள் எங்கும் ரணங்கள்…. முட்கள் குத்தி கிழித்து நம் செல்ல மகளின் பாதமெங்கும் குருதியாக இருக்கிறது சுவாமி…..”

எழுதிக்கொண்டிருந்த பிரஜாபதியின் கரங்கள் பிரசுதி சொன்ன வார்த்தைகளில் தடைப்பட்டு நிற்க, அவர் சட்டென மனைவியை நிமிர்ந்து பார்த்தார்…

கண்கள் எங்கும் நீருடனும், முகமெங்கும் கலக்கத்துடனும் தன் முன்னே இருந்த மனைவியை பார்த்ததும், அவர் எழுந்தார்…

“நம் மகளுக்கு இப்படி ஒரு வேதனை எதற்காக சுவாமி?... நம் மகள் தாங்குவாளா?....”

“தாங்குவாள்… அனைத்துமே அவளாகவே ஏற்படுத்திக்கொண்டது தானே….”

“ஆயினும் அவள் நம் மகள் இல்லையா?...”

“………………………..”

“எப்போதிலிருந்து சுவாமி இப்படி கல்லாகி போனீர்கள்?...”

“………………………”

“தங்களுக்கு நினைவிருக்கிறதா?.... சதியின் சிறுவயதில் அவளுக்கு நேர்ந்திட்ட உடல்நலக்குறைவினால், தாம் எவ்வாறு துடித்தீர்கள்?... அந்த துடிப்பு இப்போது எங்கே போனது சுவாமி?....”

“…………………………..”

“அவளுக்கு சரியாகும் வரை, தாம் அவளை விட்டு அகலவே இல்லை… அவளைத் தங்கள் மார்பினை விட்டு அகற்றிடவில்லை… அணுக்ஷணமும் அவளைப் பிரியாது அவளுடனே இருந்தீர்கள்… அவள் குணமடையும் வரை, தாம் தண்ணீர் கூட அருந்தவில்லை….”

பிரசுதி சொல்ல, பிரஜாபதி திரும்பி கொண்டார்… அவருக்கு அந்த நாள் நினைவு வர, தன்னையும் அறியாது, மகளின் நினைவு அவரை வாட்டியது… இருந்தும் முகத்தில் எந்த வித சலனமும் இல்லாது இருந்தார் அவர்…

“இன்று நம் மகள், ஒரு வேளை மட்டுமே உணவருந்துகிறாள்… காடு மலை என அனைத்து இடத்திற்கும் வெறும் காலோடு நடந்து செல்கிறாள்… இவ்வளவு பெரிய அரண்மனையில் இருந்தும் நிலத்தில் உறங்குகிறாள்… இது போதாது என்று, இன்று நம் மகள் சோர்ந்து போய் கிடக்கிறாள்… அவளின் பாதங்களோ சிவந்து போய் இருக்கிறது…. என்னால் அதை கண் கொண்டு பார்க்கமுடியவில்லை சுவாமி… பார்க்க முடியவில்லை….”

பிரசுதி தன்னை மறந்து அழ ஆரம்பிக்க, ஒரு பெருமூச்சோடு அவரின் அருகில் வந்த பிரஜாபதி,

“நடப்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் பிரசுதி… அவளின் பாதங்களில் மருந்தினை இடு…”

என்றவர் அங்கு அடுத்த நிமிடம் நிற்கவில்லை…

கணவரா?... மகளா?... என்று இரு துருவங்களுக்கு மத்தியில் நிற்கும் நிலையினை உணர்ந்தார் பிரசுதி… இருந்தும் தற்போது அவர் மகளிடமே செல்ல நினைக்க, விரைந்து மகளின் அறைக்கு சென்றார்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.