(Reading time: 10 - 19 minutes)

தியின் சகோதரிகள் அவள் பாதத்தில் ஏற்பட்ட காயத்தில் மருந்தினை இட்டுவிட்டு, அவளருகில் அமர்ந்திருக்க, அங்கே வந்த பிரசுதி, சற்று நேரம் மகளையே பார்த்திருந்துவிட்டு, பின்னர்,

“நீங்கள் உறங்கச்செல்லுங்கள்… நான் சதியை பார்த்துக்கொள்கிறேன்…” என்றார்…

“இல்லை அன்னையே… நாங்கள் கவனித்துக்கொள்கிறோம்… நீங்கள் உறங்குங்கள்…”

மகள்கள் பிரசுதியை உறங்கும்படி வேண்ட, அவரோ மறுத்தார்…

“அன்னையே… தாம் பயப்பட வேண்டாம்… சதி அயர்ந்து உறங்குகிறாள்… இடையில் எழுந்து கொள்ள மாட்டாள்… விடியலில் தான் அவள் உறக்கம் கலையும்… அதனால் தைரியமாக தாம் செல்லுங்கள்…”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தமிழ் தென்றலின் "என் சிப்பிக்குள் நீ முத்து..." - காதலும் நட்பும் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

“இல்லை மகளே… அது முறையாகாது… நான் எங்கும் செல்வதாய் இல்லை… நீங்கள் செல்லுங்கள்…” என்ற பிரசுதி, சதியின் சகோதரிகளை அவர்களின் அறைக்கு அனுப்பி வைத்துவிட்டு, சதியின் அருகில் அமர்ந்து அவளையேப் பார்த்துக்கொண்டிருந்தார்…

திடீரென, தன்னையும் மறந்து மகளின் அருகிலேயே, அவரும் சற்றே கண் அயர்ந்து விட,

அந்த நேரத்தில் அந்த அறைக்குள் நுழைந்தார் தட்ச பிரஜாபதி…

நிலத்தில் அயர்ந்து உறங்கும் மகளையும், அவளது முகத்தில் தென்பட்ட சோர்வையும் கவனித்தவருக்கு இதயம் வலித்தது….

மெல்ல அவளின் தலையினை வருடியவர், “சதி… என் மகளே…” என சத்தம் வராது தன் அதரங்களை அசைக்க, அவளோ ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள்…

மகளின் பாதங்களின் அருகே வந்தவர், அவளது பாதத்தினை பார்த்துவிட்டு, சட்டென்று நிலத்தில் தன்னையும் மறந்து அவர் அமர, சதியின் பாதத்தில் இருந்த காயங்கள் அவரைக் கொன்றது அதிகமாய்…

மகளின் பாதத்தினை பிடித்து தன் மடியில் வைத்தவர், மகளின் முகத்தினைப் பார்த்த போது, அவரையும் அறியாமல் அவர் விழி கலங்கியது வேகமாய்…

அவரின் கண்ணீர்த்துளிகள் அவளின் பாதத்தில் விழ, தன் கண்களை வேகமாய் துடைத்துக்கொண்டவர், தான் கையோடு கொண்டு வந்திருந்த, ஔஷதத்தை மகளின் காயம் பட்ட பாதத்தில் இட்டார்…..

“என் மகளின் பாதங்கள்!!!!!!!!!!!!...... தரையில் பட்டால் நோகிடுமோ என்று மலர் பரப்பி என் மகளை நடக்க வைத்து அழகு பார்த்தேனே… இன்று நானே என் மகளின் பாதத்தில் ரணத்தை ஏற்படுத்த காரணமாகி விட்டேனே…. எத்தனை கற்கள் என் மகளுக்கு வேதனையை கொடுத்ததோ!!!???... எத்தனை முட்கள் என் மகளை காயப்படுத்தியதோ!!!???….. நாராயணா….. என் மகள் மட்டும் நேற்று அந்த அனர்த்தம் நிகழ்த்தாமல் இருந்திருந்தால், இன்று எந்த கவலையும் நேர்ந்திருக்காதே… என் மனமும் தூள் தூளாய் சிதறி வெடித்திருக்காதே…”

வேதனையுடன் நொந்து போனவராய் மனதினுள் அவர் புலம்ப, சதியோ உறக்கம் தெளியாமல் இருந்தாள்…

சற்று நேரம் அங்கேயே இருந்து மகளையேப் பார்த்துக்கொண்டிருந்தவர், பின் மனதினை தேற்றிக்கொண்டு, தன் மடியில் வைத்திருந்த மகளின் பாதத்தினைப் பிடித்து மெல்ல நிலத்தில் வைத்தவர், அறையை விட்டு வெளியேறினார் விருட்டென…

மறுநாள் விடியலில், கண் விழித்தாள் சதி…

எழுந்து கொள்ள முயற்சித்தவளால், ஏனோ முடியவில்லை… சமாளித்து மெல்ல மெல்ல எழுந்து அமர்ந்தவள், நிலத்தில் இருந்து எழுந்து நிற்க, அவளது பாதங்கள் சுருக் சுருக் என்று வலி கொடுத்தது…

விழி மூடி, வேதனையை தனக்குள் உள்வாங்கிக்கொண்டவள், சில அடிகள் எடுத்து வைத்த போது, அரவம் உணர்ந்து கண் விழித்தார் பிரசுதி…

“மகளே… சதி… என்னம்மா?... எங்கே செல்கிறாய்?...”

“அன்னையே…. நான் சற்று நடந்துவிட்டு வருகிறேன்….”

“ஒன்றும் வேண்டாம் மகளே…. படுத்துக்கொள்… உன் காயங்கள் இன்னும் ஆறவில்லை…”

“படுத்துக்கொண்டால், யார் சென்று மலரினைக் கொண்டு வருவார்கள்?...”

“அந்த கவலை உனக்கு வேண்டாம்… பணிப்பெண்கள் இருவரும் இன்னும் சற்று நேரத்தில் கிளம்பிவிடுவார்கள்….”

“நான் தங்கள் மகள் என்பதால் என் வேதனை தங்களின் கண்களுக்கு தெரிகின்றது… சரி… ஆனால் அவர்களின் வேதனை?... அவர்களும் என்னைப்போல் தானே காயம் கொண்டிருப்பார்கள்…. எனில் அவர்களுக்கு ஓய்வு அவசியம் இல்லையா?...”

சதி கேட்ட கேள்வியில் சற்றே திகைத்து நின்றார் பிரசுதி…

உண்மைதானே அவள் கூறுவதும்…. இல்லை என்று மறுத்திட முடியாது தானே சதியின் கூற்றினை….

“என் தவறுக்கு நான் யாரையும் பொறுப்பாக்க விரும்பவில்லை தாயே… தந்தைக்கு கொடுத்த வாக்கினை எந்த குறையும் இல்லாது நான் நிறைவேற்றியே தீருவேன்…. இந்த காயங்களும், உடல் சோர்வும் அதனை தடுத்திட நான் ஒருபோதும் அனுமதியேன்…”

மகளின் குரலில் தெரிந்த உறுதி பிரசுதியை மலைக்க வைக்க, அவர் அமைதியாக இருந்தார்…

“என்னைப் பற்றிய கவலை வேண்டாம் அன்னையே… தந்தையின் வாக்கினை நிறைவேற்றும் வரை எனக்கு எதுவும் நேர்ந்திடாது… ஆகையால் தாம் கவலை கொள்ளாதீர்கள்…”

சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றவளை, திகைப்புடன் பார்த்திருந்தார் பிரசுதி…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.