(Reading time: 15 - 30 minutes)

ட்டோவில் கங்கா தான் உட்கார்ந்திருந்தாள்... பூ வாங்கிக் கொண்டிருந்ததில் ஆட்டோவில் ஆள் ஏறியதை நர்மதா கவனிக்கவில்லை..

"சாரி ஆள் ஏறினதை நான் கவனிக்கல.. நீங்க போங்கண்ணா.." என்றாள் அவள்..

அவளைப் பார்க்கும் போதே ஏதோ அவசரத்தில் இருப்பதை கங்கா உணர்ந்தாள்... "உங்களுக்கு எந்த ப்ராப்ளமும் இல்லன்னா... நீங்க இந்த ஆட்டோவை ஷேர் பண்ணிக்கலாமே.. ஏன்னா நான் அந்த ரூட் பக்கமா தான் போறேன்.." என்ற போது நர்மதா தயங்கினாள்...

"உங்களுக்கு இஷ்டமில்லனா வேண்டாம்.."

"அப்படியில்ல... நான் மட்டும்னா பரவாயில்ல... வழியில என்னோட ப்ரண்ட் ஒருத்தியும் ஜாயின் ஆயிப்பா... அதான் யோசிச்சேன்.."

"பரவாயில்ல அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்... எனக்கு அதால ஒன்னும் ப்ராப்ளம் இல்லை.." என்றவள், ஆட்டோ ட்ரைவரை பார்த்து, "அண்ணா உங்களுக்கு எதுவும் பிரச்சனை இல்லல்ல.." என்றுக் கேட்டாள்...

"எனக்கு ஒன்னும் பிரச்சனையில்லம்மா... இந்த பக்கம் ஆட்டோ கம்மியா தான் வரும் அதனால ஏறிக்கோங்கம்மா..." என்றார் அவர்...

"ரொம்ப தேங்கஸ்.." என்று சொல்லியப்படியே நர்மதாவும் ஆட்டோவில் ஏறினாள்..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மதுவின் "துடிக்கும் இதயம் உனதே உனது!!!" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

"நீங்க எங்க போகனும்.." ஆட்டோ கிளம்பியிருக்க, நர்மதா கங்காவிடம் கேட்டாள்..

"தேனாம்பேட்டை.." என்று கங்கா சொன்னதும், "ஓ.. அப்போ நீங்க முன்னாடியே இறங்கிடுவீங்க.." என்றவள், அவசரமாக பூக்கார பெண்மணியிடம் வாங்கியிருந்த பூவை கையில் எடுத்தாள்... யமுனாவிற்கும் அவளுக்கும் சேர்த்து வாங்கியிருந்ததால், அதை இரண்டு பாகமாக பூக்கார பெண்மணியிடமே கத்தரித்து தரச் சொல்லலாம் என்று நினைத்தாள்... அதற்குள் ஆட்டோ வரவே அப்படியே வாங்கிக் கொண்டு வந்துவிட்டாள்... அதனால் தன் கைப்பையை திறந்து அவள் கத்தரி எடுக்க... அந்த பையில் கத்தரி, செல்லோ டேப், கம் பாட்டில், கத்தி, ஸ்டாப்ளர் பின் இவையெல்லாம் இருந்தது... அதை கங்கா ஆச்சர்யமாக பார்க்க... தன்னை அவள் பார்ப்பதை உணர்ந்த நர்மதா... இரண்டாக பிரிக்க நினைத்த பூவை மூன்றாக பிரித்து, ஒரு பகுதியை கங்காவிடம் கொடுத்தாள்...

"அய்யோ வேண்டாங்க.."

"பரவாயில்ல வச்சுக்கங்க.."

"இல்லை நான் பூவெல்லாம் வைப்பதில்லை.." என்று கங்கா சொன்னதும், நெற்றியில் குங்குமமும், கழுத்தில் மஞ்சள் கயிறும் இருக்க, ஏன் பூவை வேண்டாம் என்கிறார்.. என்று நர்மதா சிந்தித்தாள்...

"இங்கப் பாருங்க சுமங்கலி பொண்ணுங்க யாராவது பூ கொடுத்தா வேண்டான்னு சொல்லக் கூடாதுன்னு என்னோட அம்மா சொல்வாங்க... அது புருஷனுக்கு நல்லதில்லையாம்... எனக்கே தோனும், சின்ன வயசுல இருந்து பூ, பொட்டுல்லாம் வைக்கிறோம்... ஏன் அதை கல்யாணத்துக்குப் பிறகு புருஷன் கூட சம்பந்தப்படுத்திப் பேசறாங்கன்னு... அதெல்லாம் மூடநம்பிக்கை தான், இருந்தாலும் மனசுக்கு பிடிச்சவங்களுக்காக சிலதை ஏத்துக்கறதும், இல்லை இழக்கறதும் கூட சில சமயங்களில் சந்தோஷம் தானே... அப்படி எடுத்துப்போமேன்னு நான் நினைச்சுப்பேன்... இந்தாங்க வச்சுக்கோங்க.." என்று நர்மதா அந்த பூவை கொடுக்கும்போது கங்காவின் கைகள் அவளை அறியாமலேயே அதை வாங்கப் போனது...

"இருங்க நானே வச்சு விட்றேன்.." என்று நர்மதா சொன்னபோதும், கங்காவின் தலை அனிச்சையாக அவள் பக்கம் திரும்பியது... யமுனாவிற்கும், இவளுக்கும் கொஞ்சம் அதிகமாக எடுத்துக் கொண்டு, கங்காவிற்காக கொஞ்சமாக தான் பூவை கத்தரித்து வைத்திருந்தாள் நர்மதா... இருந்தும் கங்கா பூ வைக்கமாட்டேன் என்று சொன்னதால், இவங்க நீளமான கூந்தலுக்கு நிறைய பூ வச்சா அழகா இருக்கும் என்று தோன்றியதால், யமுனாவிற்காக வைத்திருந்த பூவை கங்காவிற்கு சூட்டினாள்...

"இப்போ தான் ரொம்ப அழகா இருக்கீங்க..." என்றவள் தன் தலையிலும் பூவை சூடிக் கொண்டாள்...

"ஆமா... உங்க பேக்ல என்னென்னமோ வச்சிருக்கீங்க.. அதைத் தான் நான் பார்த்துக்கிட்டு இருந்தேன்.." எங்கே தான் பார்த்ததை தவறாகப் புரிந்துக் கொண்டிருப்பாளோ என்று கங்கா தான் பார்த்ததிற்கான விளக்கத்தை கொடுத்தாள்...

"ஓ அதுவா.. நான் ஒரு ஸ்கூல் டீச்சர்... அடிக்கடி பசங்களுக்கு ப்ராஜக்ட் வொர்க் கொடுப்பேன்... பசங்க அதை கிளாஸ்ல வச்சு செய்யறப்போ நானும் அவங்களுக்கு ஹெல்ப் பண்ணுவேன்... கூட ஸ்கூல் சம்பந்தமா எனக்கும் சில வேலைகள் இருக்கும்... அதான் இதெல்லாம் என் கைல எப்பவும் இருக்கும்..."

"ம்ம் பரவாயில்லையே நல்ல டீச்சர் தான் நீங்க... ஆமாம் எந்த ஸ்கூல்ல வொர்க் பண்றீங்க.." என்றுக் கேட்டதும்.. நர்மதாவும் அவள் வேலை செய்யும் பள்ளியின் பெயரைக் கூறினாள்...

"ஓ அந்த ஸ்கூல்லயா வொர்க் பண்றீங்க... எனக்கு தெரிஞ்ச 2 பேர்க் கூட அந்த ஸ்கூல்ல தான் வொர்க் பண்றாங்க.."

"அப்படியா... அவங்க பேர் என்ன..??" என்று நர்மதா கேட்டதும், "உளரிட்டோம் போலயே.." என்று கங்கா மனதுக்குள் நினைத்தப்படி..

"அது அவங்கப் பேர் எனக்குத் தெரியாது... அவங்க என்னோட ப்ரண்டோட ப்ரண்ட்ஸ்..."

"சரி பரவாயில்ல... யாரோ ரெண்டு பேரோட பேரை பத்தி கேக்கறேன்...  என்னைப் பத்தி சொன்னேனா பாருங்க... என்னோட பேரு நர்மதா.. நான் அந்த ஸ்கூல்ல மேத்ஸ் டீச்சரா இருக்கேன்..." என்ற போது, ஓ இவள் தான் நர்மதாவா..?? என்று மனதில் நினைத்தாள் கங்கா.. இளங்கோ மூலமாக நர்மதாவை பற்றி கங்காவிற்கு தெரியும்... இருந்தாலும் அவள் புகைப்படத்தை கங்கா பார்த்ததில்லை... இளங்கோவிடம் நர்மதாவின் புகைப்படம் இருந்ததில்லை... ஏன் இவளின் புகைப்படத்தைக் கூட அவன் அலைபேசியில் வைத்துக் கொள்வதில்லை அதனால் இவளுக்கு நர்மதா எப்படியிருப்பாள் என்று தெரியாது... இப்போது அந்த பள்ளியின் பேர் சொல்லி, தன்னை நர்மதா என்று அவள் அறிமுகப்படுத்திக் கொண்டதால், கங்காவிற்கு இவள் தான் நர்மதா என்று தெரிந்தது...

"உங்கப் பேர் என்ன..?? நீங்க என்ன பண்றீங்க..??" நர்மதா கேட்ட கேள்வியில் கங்கா நடப்பிற்கு வந்தாள்...

"என்னோட பேர் கங்கா.. நான் ஒரு டெய்லரிங் இன்ஸ்ட்டியூட் வச்சு நடத்துறேன்.."

"வாவ் சூப்பர்... இப்போ இன்ஸ்ட்டியூட்க்கு தான் போறீங்களா..??"

"இல்ல... ஒரு ஃப்ரண்டோட பங்க்‌ஷன்க்கு போறேன்... ஆமாம் நீங்களும் எங்கேயோ அவசரமா போறீங்கப் போல... அதைப் பார்த்து தான் ஆட்டோவை ஷேர் பண்ணிக்க நினைச்சேன்..."

"ஆமாம்... என்னோட கல்யாணத்துக்கு சாரி எடுக்கப் போறோம்... ஆல்ரெடி எல்லாரும் அங்க வெய்ட் பண்ணுவாங்க.. அதான்.." என்று அவள் கூறும்போது, என்னோட கல்யாணத்துக்கு என்பதை அவள் சுரத்தே இல்லாமல் சொன்னது போல் தெரிந்தது கங்காவிற்கு...

ஏன் என்ன காரணம்..?? இந்த திருமணத்தில் இவளுக்கு சம்மதம் இல்லையோ..?? இவ்வளவு நேரம் நன்றாக தானே பேசிக் கொண்டிருந்தாள்... திருமணப் பேச்சை ஆரம்பித்ததும் அவள் முகம் மாறிவிட்டதே... கங்காவிற்கு காரணம் புரியவில்லை... இவள் திருமணம் நடந்தது இக்கட்டான சூழ்நிலை என்றாலும் அந்த திருமணத்தில் கூட இவளுக்கு ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.. ஆனால் நர்மதாவிற்கு என்ன பிரச்சனை..??

இளங்கோ மூலமாக நர்மதாவை தெரிந்தாலும், அவளுக்கு இவளை தெரியாததால் வெளிப்படையாகவும் எதுவும் கேட்க முடியாது... ஒருவேளை இளங்கோவிற்கு ஏதாவது தெரிந்திருக்குமோ... ஆனால் நர்மதாவிற்கு கல்யாணம் என்று அவன் சொல்லவில்லையே..??

"இந்த டைம்ல வேற ஆட்டோ எப்போ வருமோ..?? கூட என்னோட ப்ரண்ட் யமுனாவை வேற பிக்அப் பண்ணனும்.. அதான் நீங்க சொன்னதும் நானும் ஆட்டோல ஏறிக்கிட்டேன்.." என்றபோது கொஞ்சம் அதிர்ந்து தான் போனாள் கங்கா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.