(Reading time: 10 - 20 minutes)

தொடர்கதை - சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 09 - ஜெய்

Saathiram pesugiraai kanamma

வாங்க மேடம்... அம்மா உங்களுக்காகத்தான் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க....”, கதவைத் திறந்த ராஜா,  பாரதியை வரவேற்று உள்ளே சென்று அமர வைத்தான்.

“வாம்மா பாரதி.... எப்படி இருக்கேம்மா....”

“நல்லா இருக்கேன் ஆன்ட்டி..... உங்க கால் இப்போ எப்படி இருக்கு....”

“வலி இருக்கு.... மத்தபடி பரவாயில்லை.... ஆனா வலியைவிட கொடுமையா இருக்கறது, ஒண்ணுமே செய்யாம சும்மா இருக்கறதுதான்..... இந்த சோஃபா , அதை விட்டா கட்டில் இந்த ரெண்டு இடத்துல மாட்டும்தான் இருக்க விடறான்.....  அதுக்கூட நான் ஊன்றுகோல் வச்சுட்டு நடக்கறேன்னா கேக்கறதே இல்லை... என்னை தூக்கிட்டே சுத்தறான்.... சமையலறை வாசல் வரை கூட விடறதில்லை.... லீவ் போட்டுட்டு என்னைக் கவனிச்சுக்கறான்.....”, ராஜாவைப் பெருமையாக பார்த்தபடியே அலுத்துக்கொண்டார் சுகுணா.

“அம்மா என்னைப் பத்தி சொல்லி போர் அடிக்காதீங்க.... மேடம் உங்களுக்கு குடிக்க ஏதாவது எடுத்துட்டு வரவா....”

“சார் ப்ளீஸ் என்னோட பேர் சொல்லியே கூபிடுங்க... நீங்க இந்த மேடம்... மேடம் அப்படின்னு சொல்லும்போதெல்லாம் அப்படியே கொண்டை  போட்டுட்டு குடை பிடிச்சுட்டு போற ஃபீலிங் வருது....”,பாரதி சொன்ன மாடுலேஷனில் ராஜாவும்,  சுகுணாவும் வாய்விட்டு சிரித்தார்கள்...  சாதாரணமாகவே ராஜா பார்ப்பதற்கு நன்றாக இருப்பான்.... இதில் சிரிக்கும்போது இன்னும் படு கிளாமராக இருக்க, வெளிப்படையாகவே அவனை சைட் அடித்தாள் பாரதி...

“ராஜா நீ பாரதிக்கு காப்பியும், ஸ்நாக்ஸும்   எடுத்துட்டு வா... பாவம் வேலை இடத்துல இருந்து நேரா இங்கதான் வந்து இருக்கா... கண்டிப்பா பசிக்கும் ....”, பாரதி வீட்டில்  நன்றாக மொக்கிவிட்டு மதியத்திற்கு மேல் அலுவலகம் சென்று, அதிலும் சந்திரனிடம் வழக்கடித்து, ஒரு வேலையும் செய்யாமல் ஓபி அடித்து, ஒரு மணி நேரம் மட்டுமே இருந்துவிட்டு  கிளம்பி இங்கு வந்தது தெரியாத சுகுணா அவளுக்காக பரிதாபப்பட்டாள்.  

ராஜா சென்று அவளுக்கு காப்பியும், கொறிப்பதற்கு முறுக்கும் எடுத்துக்கொண்டு வந்து கொடுத்தான்.  

“காஃபி  மட்டும்தான் நான் போட்டது மிஸ். பாரதி.  முறுக்கு கடைல வாங்கினதுதான்.... அதனால தைரியமா சாப்பிடுங்க”, என்று ராஜா கூற, அவன் சொன்னதில் பின் பாதியை விட்டுவிட்டு ‘மிஸ். பாரதியா’, என்று   முகத்தை அஷ்டகோணலாக்கினாள்.  பிறகு மேடம்க்கு மிஸ் பரவாயில்லை என்று தன்னைத்தானே தேற்றிக்கொண்டாள்.

“மிஸ். பாரதி நீங்க அம்மாக்கூட பேசிட்டு இருங்க... எனக்கு பசங்க டியுஷன் வர்ற டைம் ஆகிடுச்சு.... நான் மாடிக்கு போறேன்...  அம்மா உங்க செல் பக்கத்துலையே வச்சுருக்கேன்... ஏதானும் வேணும்னா கூப்பிடுங்க....”

“நீங்க பாருங்க ராஜா.....  நான் ஆன்ட்டியை பார்த்துக்கறேன்....”, பாரதி சொல்ல அவளுக்கு நன்றி சொல்லி மாடிக்கு சென்றான் ராஜா.  அவன் வெளியில் சென்று மாடிப்படி ஏறும்வரை பாரதியின் பார்வை ராஜாவைத் தொடர்ந்தது.

ராஜா கண்ணிலிருந்து மறையும்வரை அவனைப் பார்த்த பாரதி அதன் பிறகே சுகுணாவின் புறம் திரும்பினாள்.... சுகுணா என்ன இது என்பது போல் பார்க்க பாரதி அசடு வழிந்த படியே பேச்சை மாற்றினாள்.

“ஆன்ட்டி காலேஜ்லயும் பாடம் நடத்திட்டு வந்து, வீட்டுலையும் டியூஷன் எடுக்கணும் அப்படின்னா கஷ்டமா இருக்குமே... வீட்டுக்கு வந்த பிறகு ஓய்வா இருக்கலாமே ஆன்ட்டி...”

“இது பக்கத்துல இருக்கற கஷ்டப்படற குடும்பங்கள்ல இருக்கற குழந்தைங்களுக்காக இலவசமா எடுக்கறது பாரதி.... வார நாள்ல சில நேரம் அவன் வர லேட் ஆகிடும்... அவன் சனி, ஞாயிறு மட்டும்தான் எடுப்பான்... ஸோ  நான்தான் எடுப்பேன்... இப்போ எனக்கு ரெஸ்ட் வேணுமேன்னு அவன் எடுக்கறான்....”

“சூப்பர் ஆன்ட்டி .... நிஜமாவே கேக்க சந்தோஷமா இருக்கு.... படிச்ச நிறைய பேர் இதை பண்ணலாம்... பெருசா சமூக சேவை செய்யறேன்னு, சேரிக்கு போய் துடைப்பத்தோட போஸ் கொடுக்காம.... வாரத்துல ஒரு நாள் இந்த மாதிரி இருக்கற குழந்தைகளுக்கு பாடம் சொல்லித்தரலாம்”

“சரியா சொன்னம்மா... இதை சமூக சேவை அப்படினெல்லாம் நான் சொல்ல மாட்டேன்... ஏதோ எங்களால முடிஞ்சது கல்வி கொடுக்கறது... அதை செய்யறோம்....”

“ஆன்ட்டி இப்போ சமூக சேவை அப்படிங்கற பேருல இங்க நிறைய பேர் தனக்கு விளம்பரம் தேடிக்கதான் விரும்பறாங்க.... நிஜ சேவகிகள் கொஞ்சம்தான்.... போலிகள்தான் அதிகம்....”

“ஹ்ம்ம் கரெக்ட்தான்.... அப்பறம் உன்னோட வேலை எப்படி போயிட்டு இருக்கு.... அன்னைக்கு நீ அவனுங்களை அடிச்சதைப் பார்த்து நான் அப்படியே அசந்து போய்ட்டேன் பாரதி... அவனுங்களால உனக்கு ஒண்ணும் பிரச்சனை வரலையே.....”

“அதெல்லாம் ஒண்ணும் இல்லை ஆன்ட்டி.... அந்தப் பையனோட அப்பாதான் சீனியர்க்கு ஃபோன் பண்ணி போட்டுக் கொடுத்துட்டாரு.... ஸோ அவர் கிட்ட இருந்துதான் செம்ம திட்டு விழுந்துது.....”

“ரொம்ப சாரிம்மா... என்னால நீ திட்டு வாங்கறா மாதிரி ஆகிடுச்சு....”

“ச்சே ச்சே ரொம்ப வருத்தப்படாதீங்க ஆன்ட்டி.... அதெல்லாம் எனக்கும், சாரங்கனுக்கும் ரொம்ப சகஜமான விஷயம்... இன்ஃபாக்ட்  என்னிக்கானும் திட்டு விழலை  அப்படின்னாதான் சீனியர்க்கு உடம்பு ஏதானும் சரியில்லையோன்னு கவலை  வரும்....”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.