(Reading time: 9 - 17 minutes)

18. மனதோர மழைச்சாரல் நீயாகினாய் - சகிManathora mazhaichaaral neeyaaginaai

இது என்னுயிரே உனக்காக கதையின் மூன்றாவது பாகம்.

முதல் பாகம் 'என்னுயிரே உனக்காக' படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

இரண்டாம் பாகம் 'சதி என்று சரணடைந்தேன்' படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

நீண்ட நேரமாய் அந்த இல்லத்தின் தொலைப்பேசி அடித்துக் கொண்டே இருந்தது.கண்டுக்கொள்ள தான் ஒருவருமில்லை.கீதா என்றுமில்லாமல் அன்று மனமுருகி இறைவழிப்பாட்டில் தன்னை தொலைத்திருக்க,சிவாவோ இன்னும் உறக்கம் கலைக்கவே இல்லை.ஒருமுறை ஆடி அடங்கி மீண்டும் ஒலித்தது அந்த தொலைப்பேசி!!

இறுதியாக அதன் அலறலுக்கு ஓய்வு அளிக்கும்படி அதை எடுத்து தன் காதில் வைத்தார் லூஸி.

"ஹலோ!சிவ கார்த்திகேயன் வில்லா!"-தனயன் தந்தையின் நாமத்தை ஒன்று திரட்டி உருவான அவ்வில்லத்தின் பெயரை கூறினார் அவர்.

"நான் நல்லா இருக்கேன்!நீ,பாரதி எல்லாம் எப்படி இருக்கீங்க?"-பேசிக் கொண்டிருந்தவரிடம் நலம் விசாரிக்கையில்,வழிபாடு முடித்து எழுந்து வந்தாள் கீதா.

"யாரு?"என்பது போல கேள்வியாய் பார்த்தாள் அவள்.

"கார்த்திக்!"-இதழ்களை மட்டும் அசைத்து பதில் அளித்தார் அவர்.

அவளது முகத்தில் மெல்லிய புன்னகை தவழ்ந்தது.

"கீதா!என் போனை பார்த்தியா?"-கொட்டாவி விட்டப்படி படி இறங்கி வந்தான் சிவா.பெண்கள் இருவர் முகத்திலும் இருந்த குதூகலம் அவனது புருவத்தை சுருக்கி சிந்திக்க வைத்தது.

"இதோ இப்போ தான் எழுந்தான்!கொடுக்கிறேன்!"-என்று தொலைப்பேசியை சிவாவிடம் நீட்டினார் லூஸி.

"யாரு?"

"கார்த்திக்!"

"ஓ...!"-உறக்க கலக்கத்தில் ஒன்றும் புரியாதவன் இரு நொடிகள் மௌனம் காத்தான்.பின்,

"ஐயோ அப்பா!"-என்று பதறியப்படி தொலைப்பேசியை வாங்கினான்.

"அப்பா!"-பாவமாய் ஒலித்தது அவன் குரல்!!

"ஏன்டா?நீ எல்லாம் எதுக்குடா போன் வைத்திருக்க?எவ்வளவு நேரா ட்ரை பண்றேன்!கால் போகவே இல்லை!"

"சார்ஜ் இல்லாம ஆப் ஆகி இருக்கும்பா!"

"பேசாம அதை வெட்டி ஊறுகாய் போட்டுவிடு!முக்கியமான விஷயம் பேசலாம்னு போன் பண்ணா,ரெஸ்பான்சே இல்லை!"

"என்ன விஷயம்பா?"

"எப்போ இரண்டு பேரும் ஊருக்கு வரப் போறீங்க?"

"அது..வந்துப்பா...நான்..."

"கீதாவுக்கு அதிகமா டென்ஷன் கொடுக்காதே!நைட் சீக்கிரம் வீட்டுக்கு வரீயா?இல்லையா?"

"ஆ..வந்துடுறேன்பா!"

"நான் இருக்கும் போதே ராத்திரி 2 மணிக்கு வந்து கதவை தட்டுவ!அது மாதிரி எல்லாம் பண்றது இல்லையே!"

"ஆ..இல்லைப்பா!அப்படி எல்லாம் இல்லை."

"சரி...சீக்கிரமா இந்தியா வருகிற வழியை பாரு!புரியுதா?"

"ம்...சரிங்கப்பா!"-இணைப்பைத் துண்டித்தான் அவன்.

"சிவா?"

"ம்??"

"அப்பா என்ன சொன்னாரு?"

"அது...வந்து..ஊருக்கு எப்போ வர போறோம்னு கேட்டார்!"-அவள் முகத்தில் கொள்ளை ஆனந்தம்.

"ம்...தாத்தாவை எல்லாம் பார்க்கணும்!ரொம்ப நாள் ஆச்சு!"-அவனது முகம் வாடியது.

"சீக்கிரமா போகலாம் கவலைப்படாதே!"

"சரி...நீங்க குளித்துவிட்டு வாங்க!டிபன் எடுத்து வைக்கிறேன்!"

"ம்..."-துள்ளிக்கொண்டு சென்றாள் கீதா.

கரம் சேர்ந்த காதல்,கை நழுவி செல்லும் வலியை உணர்ந்தான் அவன்.எந்தக் காதல் தன் வாழ்வினை பிரகாசமாக்கும் என்று நம்பிக்கை கொண்டானோ,அது ஒட்டுமொத்தமாய் அவன் நம்பிக்கையை உடைத்து அவனை நீங்க துணிந்ததாய் ஒரு எண்ணம் அவனுக்கு!!பொதுவாக,பலரது வாழ்வினில் முதல் காதலானது,எவ்வாறு காதலிக்க வேண்டும் என்பதை கூறிவிட்டு மடிந்துப் போய்விடுகிறது!!

ஆனால்,உண்மையில் நிகழ்வது தான் என்ன?கீதா அவனை மனப்பூர்வமாக விரும்ப ஆரம்பித்தாள்.அவனுடன் தனது வாழ்க்கை பயணத்தை தொடங்க சித்தமாகிவிட்டாள்.ஆனால்,அவன் அதை புரிந்துக்கொள்ள முனையவில்லை.அவன் அளித்த வாக்கானது,அவள் காதலை அவன் புரிந்துக்கொள்ள தடையாய் அமைந்தது என்பதே உண்மை!!!

"பார்வதியை வர சொல்லுங்க!"-உத்தரவிட்டான் ருத்ரா.

"சார்!பார்வதி மேடம் ஆபிஸ் வரலை!"

"ஏன் வரலை?எவ்வளவு வேலை அப்படியே இருக்கு?யாரை கேட்டு லீவு போட்டா?"

"ச்சீப்..."-மனோவின் அழைப்பு அவன் கவனத்தை திருப்ப இணைப்பைத் துண்டித்தான்.

"என்ன?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.