(Reading time: 9 - 18 minutes)

17. உன் நேசமதே.. என் சுவாசமாய்..!! - சித்ரா. வெ

love

மாலை முடிந்து இருள் சூழும் நேரம், அந்த திருமண வீட்டின் பரப்பரப்பு அடங்கியிருந்தது… திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் எல்லாம் சென்றுவிட, நர்மதாவின் குடும்பத்தார் மட்டுமே இருந்தனர்…

இளங்கோவும், வாணியும் திருமணம் முடிந்த உடனேயே கிளம்பிவிட்டனர்…  யமுனா நர்மதாவிற்காக இன்னும் சிறிது நேரம் இருக்க முடிவு செய்து அங்கேயே இருக்கிறாள்… என்னத் தான் புது மாப்பிள்ளையாக இருந்தாலும், செல்வா திடீர் மாப்பிள்ளையாய் ஆகியதால், ஆரம்பத்திலிருந்தே திருமண ஏற்பாடெல்லாம் இவனே பார்த்ததால், இப்போதும் கட்டியிருந்த பட்டு வேட்டி சட்டையோடு அந்த வேலைகளோடு நடமாடிக் கொண்டிருந்தான்…

“செல்வா… நீ புது மாப்பிள்ளை டா… என்னென்ன செய்யனுமோ, அதெல்லாம் வேற யார் பொறுப்பிலாவது விட்டிட்டு போய் நர்மதா கூட இரு..” அவனிடம் வந்து கோமதி கூறினார்…

“ஓரளவுக்கு எல்லாம் வேலையும் முடிஞ்சுடுச்சும்மா…. சில பேருக்கு பணம் மட்டும் தான் செட்டில் பண்ணனும், ஆமா அண்ணன் எங்க ரொம்ப நேரமா காணோம்..”

“அவன், அவனோட ரூம்ல இருக்கான்..” என்று கோமதி சொன்னதும், இருவரும் துஷ்யந்தை காண அறைக்குச் சென்றனர்…

அங்கே துஷ்யந்தோ, ட்ராவல் பேக்கில் துணிகளை வைத்துக் கொண்டிருந்தான்… இவர்களைப் பார்த்ததும், “வாங்க ரெண்டுப்பேரும்…. கொஞ்ச நேரத்துல நானே உங்களைப் பார்க்கனும்னு நினைச்சேன்… அதுக்குள்ள நீங்களே வந்துட்டீங்க..” என்றுக் கூறினான்…

“ராஜா எங்க கிளம்பிட்டப்பா..” கோமதிக் கேட்டார்…

“அம்மா.. கொஞ்ச நாள் நான் குன்னூர்க்கு போலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்… கொஞ்ச நாள் அங்க தான் இருக்கப் போறேன்…” என்று அவன் சொன்னதும், குன்னூருக்கா என்று மனதில் கேள்வியோடு, செல்வாவும் கோமதியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்…

“அண்ணா… உன்னோட கல்யாணத்துக்கு முன்னாடி நான் கல்யாணம் செஞ்சுக்க, எனக்கு துளிக்கூட விருப்பமில்லை… இருந்தும் அந்த சூழ்நிலையில நீயோ, அம்மாவோ அவமான படக் கூடாதுன்னு தான் நான் இந்த கல்யாணம் செஞ்சுக்கவே ஒத்துக்கிட்டேன்…. நீ கூடிய சீக்கிரம் மனசு மாறனும், சீக்கிரம் உனக்குன்னு ஒரு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்திக்கனும்னு தான் நாங்க விரும்புறோம்… ஆனா நீ குன்னூர் போறேன்னு சொல்ற, நீ பழசையெல்லாம் மறக்கனும்னு நாங்க நினைக்கிறோம்… ஆனா நீ இன்னும் அதையெல்லாம் மறக்காம இருக்கறது நல்லது இல்லண்ணா..”

“உனக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலையை உருவாக்கிட்டேன்னு எனக்கு தெரியும் செல்வா… உன்னோட கல்யாண விஷயத்துல நீ முடிவெடுக்க, உனக்கு ரொம்ப டைம் இல்லன்னும் தெரியும், அம்மாக்காகவும், நான் சொன்னேங்கிறதுக்காகவும் தான் நீ இந்த கல்யாணத்துக்காக ஒத்துக்கிட்டேன்னும் தெரியும்… ஆனா இனி இன்னொரு முறை அப்படி சொல்லாத… நர்மதாவோ இல்ல அவளோட அப்பா, அம்மாவோ கேட்டா, அவங்களுக்கு இது கஷ்டத்தைக் கொடுக்கும்..” என்று சொன்னான்..

அதற்கு செல்வாவும் “சரிண்ணா… இனி சொல்லமாட்டேன்..” என்று பதில் சொல்லிக் கொண்டிருக்க, அங்கே எதேச்சையாக செல்வாவை தேடி வந்த நர்மதா இதை கேக்கும்படி ஆனது…

யமுனாவை பூஜை அறையில் வேலை செய்ய உதவிக்காக மல்லிகா அழைத்துச் சென்றிட, அங்கே நர்மதா தனியாக உட்காரும்படி ஆயிற்று.. சற்று நேரம் கழித்து அங்கு வந்த மல்லிகா… “நர்மதா… முகூர்த்த தேங்காயை உடைச்சு பூஜை செய்யனும்… மாப்பிள்ளை எங்க..?? அவரையும் அழைச்சுக்கிட்டு வா..” என்றார்…

தாலிக்கட்டி சடங்குகள் முடிந்து, போட்டோ பிடிக்கும் வரை தான் அவன் அவளோடு இருந்தான்… பின் அவன் இங்கும், அங்கும் தானே நடமாடிக் கொண்டிருந்தான்… இவளிடம் கேட்டால் என்ன தெரியும்..?? திருதிருவென்று விழித்தப்படி அவள் நிற்க, அதற்குள் அங்கு வந்த விஜியோ…

“செல்வா அவனோட ரூம்ல இருப்பான்ம்மா.. மேல தான் அவன் ரூம் இருக்கு..” என்று சொல்ல, இவள் தயங்கியப்படி நின்றாள்…

“ஏம்மா தயங்குற… இனி அது உன்னோட ரூமும் தான், போ.. போய் செல்வாவ கூட்டிக்கிட்டு வா..” என்றவர், கீழிருந்தப்படியே அவனுடைய  அறை இருக்கும் திசையைக் காட்ட, தயக்கம் காட்டியப்படியே சென்றவள், அங்கு அவனை காணவில்லை என்றதும், எங்கிருப்பானோ.?? என்று சிந்தித்தப்படி வந்தவள், துஷ்யந்த் இருக்கும் அறைப்பக்கம் பேச்சு சத்தம் கேட்டு, அங்கு சென்று பார்த்த போதுதான் செல்வா பேசியதைக் கேட்டாள்… பின் அங்கு வந்ததை அவர்கள் அறியும் முன்னரே அங்கிருந்து அகன்றுவிட்டாள்…

“செல்வா… சில விஷயங்களை ஞாபகம் வச்சிருக்கறதால மனசுக்கு கஷ்டம் தான், ஆனா சில விஷயங்களை அடிக்கடி ஞாபகப்படுத்தி பார்க்கறது தான் சந்தோஷத்தையே கொடுக்கும்… நான் குன்னூர்க்கு போகும்போது நடந்த கசப்பான சம்பவத்தால, நான் அப்போ நடந்த எல்லாத்தையும் மறக்கனும்னு நீ நினைக்கிற, ஆனா அங்கப் போய் தான் என்னோட வாழ்க்கையில மாற்றம் வந்துச்சு… அதனால நான் அதை ஞாபகப்படுத்தி சந்தோஷப்பட நினைக்கிறேன்… அதனால நான் குன்னூர் போறதால, எனக்கு எந்தப் பிரச்சனையுமில்ல..” என்று துஷ்யந்த் கூறினான்…

அவன் கூறிய விஷயம் செல்வாவுக்கு சுத்தமாக புரியவில்லை… ஆனால் அண்ணன் பழசை நினைச்சு கவலையாக இல்லை.. என்பது மட்டும் தெரிந்தது… சீக்கிரம் அண்ணனோட வாழ்க்கை சரியாகும் என்ற நம்பிக்கை இருந்ததால், சரி என்று தலையாட்டினான்…

கோமதிக்கோ துஷ்யந்த் என்ன சொல்கிறான் என்பது நன்றாக புரிந்தது… தன்னோட மகனுக்கு அந்த இடம் சந்தோஷத்தை கொடுக்கும்னா போய் கொஞ்ச நாள் அங்கே இருக்கட்டும் என்று அவர் நினைத்தார்…

“ராஜா… கார்லயா போகப் போற..??”

“இல்லம்மா… ஃப்ளைட்ல தான்… கோயம்புத்தூர்ல அஃபிஷியலா கொஞ்ச வேலை இருக்கு… இன்னைக்கு அந்த வேலையை முடிச்சுட்டு, நாளைக்கு குன்னூர்ல இருப்பேன்…

அப்புறம் நீங்க உங்க உடம்பை பார்த்துக்கோங்க… தேவையில்லாம எதையாவது நினைச்சு மனசைப் போட்டு குழப்பிக்காதீங்க… அப்புறம் செல்வா.. நான் இல்லன்னு நீ ஆஃபிஸே கெதின்னு இருக்காத… நான் அங்க இருந்தே எல்லாம் பார்த்துக்கிறேன்… நீ நர்மதாக் கூட டைம் ஸ்பெண்ட் பண்ணு… முடிஞ்சா எங்கேயாச்சும் ஹனிமூன் போங்க…. நீங்க மனசுவிட்டு பேச ஒரு நல்ல வாய்ப்பா இருக்கும்… சரியா..??”

“சரிண்ணா..”

“சரி சாமி கும்பிடனும்… ரெண்டுப்பேரும் கீழ வாங்க…” கோமதி சொல்ல..

“இன்னும் கொஞ்சம் பேக் செய்ய வேண்டியிருக்கும்மா… நீங்க ரெண்டுப்பேரும் போங்க… கொஞ்ச நேரத்துல நானும் வந்துட்றேன்…” என்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.