(Reading time: 11 - 22 minutes)

“உனக்காக சொன்னது தான்.. ஆனால் நீ மட்டும் வந்தால் மற்றவர்கள் தவறாக நினைக்க இடம் இருக்கு.. நாம மாணவர்களுக்கு தவறான முன்னுதாரணம் ஆக கூடாது இல்லயா ?”

“எஸ்.. எனக்கும் அதுதான் ரொம்ப யோசனையா இருந்தது. காலேஜ்லே வச்சு நம்மள பத்தி பேசறதுக்கு.. “

“நானும் யோசிச்சேன்மா.. ஆனால் நீ நிச்சயம் வேறு எங்கும் கூப்பிட்டால் வர மாட்டாய்.. அப்படி கூப்பிடுவதும் தவறு.. அதனால் இன்னிக்கு ஒருநாள் மட்டும் நாம் கல்லூரியில் வைத்து பேசிக் கொள்வோம்.. இனிமேல் இப்படி நடக்காது..”

அவனின் பேச்சுக்கு அவள் சம்மதம் தெரிவித்து கொண்டிருக்கும் போதே வளர்மதியும் வந்துவிடவே, இருவருமே அவரை வரவேற்று விட்டு காலேஜ் சம்பந்தமாக பேச ஆரம்பித்தார்கள்.

முதலில் அடுத்து வருகிற செமஸ்டர் பாடங்களை பற்றியும், அதை யார் யார் எந்த பிரிவிற்கு நடத்துவது என்பது முதலில் அட்டவணை போட்டார்கள்.

பொதுவாக இது எல்லாம் துறை தலைவர் வேலை தான்.. இப்போதும் அவருடைய வழிகாட்டுதலின் படி தான் செய்தார்கள்..  ஆனால் அவர் உத்தரவுகளை அட்டவணை படி பிரிக்கும் வேலை செழியனிடம் ஒப்படைக்கபட்டது.

மற்ற எல்லோருமே ஏன் மலர் கூட நேரடியாக பேராசிரியாரக அங்கே சேர்ந்தவர்கள். செழியன் மட்டுமே மாணவனாக படித்து, அந்த கல்லூரிக்கே வேலை பார்க்க வந்தது.. அதனால் எல்லோருக்குமே அவனிடம் ஒரு உரிமை உணர்வு இருந்தது. அவனும் சற்று ஆர்வ கோளாறு.. படிக்கும் போது இருந்த அதே உற்சாகம் இப்பொழுதும் இருக்கவே.. இந்த மாதிரி விஷயங்களை அவனின் பொறுப்பில் விட்டார்கள்.

அவற்றை பேசி முடித்தவர்கள்,

“அவ்ளோதானே செழியா.. இதை நம்ம தல கிட்டே காட்டி ஒப்புதல் வாங்கி விடு..” என்று முடிக்க,

அப்போது வாட்ச்மன் ஜூசோடு வரவும், அவரிடமிருந்து வாங்கி கொண்டவன் அவரை அனுப்பி வைத்தான். இருவருக்கும் எடுத்து கொடுத்தவன், தனக்கும் எடுத்துக் கொண்டான்.

“வளர் மேடம்.. இன்னொரு முக்கியமான விஷயமும் பேசணும் .. இந்த வருஷம் நம்ம காலேஜ் ஆரம்பிச்சு நூறாவது வருஷம் .. அதனால்  நிர்வாகம் வரும் ஆண்டு விழாவ ரொம்ப சிறப்பா நடத்தனும்னு முடிவு பண்ணிருக்காங்க..”

“ஹேய்.. அதுக்கு இன்னும் நிறைய நாள் இருக்கே.. இப்போவே ஆரம்பிச்சுட்டீங்களா?”

“இல்லை மேடம்.. அவங்க அனேகமா முக்கியமான மூணு சீப் கெஸ்ட் டேட்ஸ் கேட்டு இருக்காங்க.. அதுனாலே ஒருவேளை முன்னாடியே நடந்தாலும் நடக்கலாம்.. அதோட வெறும் கலை நிகழ்ச்சிகள் மட்டும் இல்லாமல், நம்ம மாணவர்களோட திறமைய வெளி கொண்டு வருகிற மாதிரி நிகழ்சிகள் ஏற்பாடு செய்ய சொல்லிருக்காங்க.. நாம ஓரளவு நிகழ்ச்சிகள் பற்றிய லிஸ்ட் தயார் செய்தால் தான், காலேஜ் திறந்தவுடன் அதை ஆரம்பிக்க சரியா இருக்கும்...”

செழியன் பேசிக் கொண்டே போக, அவனையே பார்த்து இருந்தாள் மலர். அவன் நிறுத்தவும்,

“சார் .. நான் கேக்கறேனே என்று தவறா நினைக்காதீங்க.. இந்த விஷயம் எல்லாம் நம்ம பிரின்சிபால் , நிர்வாகம் தானே பொதுவா ஏற்பாடு செய்வாங்க.. உங்க கிட்டே எப்படி சொல்றாங்க.. “

வளர்மதி “ஹேய்.. என்ன இப்படி கேட்டுட்ட.. செழியன் சார் இங்கே அவ்ளோ பெரிய ஆள். “

“மேடம் நீங்க வேற... அப்புறம் மலர் பயந்து விடுவார்கள்..” என்று சிரித்துக் கொண்டே சொல்ல,

வளர்மதி அறியாமல் மலர் அவனுக்கு பழிப்பு காட்டினாள்.

“உண்மை தான் மலர். படிக்கும் போதே இந்திய அளவில் நிறைய செமினார் எல்லாம் கலந்துகிட்டு, நம்ம காலேஜ் பற்றி தெரியறதுக்கு அவனின் பங்கு மிகவும் அதிகம்.. அதுக்கு அப்புறம் அவரோட ஆராய்ச்சி எல்லாம் வித்தியாசமா , அதே சமயம் அரசாங்கத்துக்கே அதிகம் உபயோகபடுற மாதிரி இருப்பதால் இந்த ஜியலாஜி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரும் அவனுக்கு பழக்கம்.. அதனால் நம்ம காலேஜ் நிர்வாகத்துக்கிடே சார்க்கு செல்வாக்கு அதிகம்..

இப்போ நம்ம கிட்டே பச்சை புள்ள மாதிரி பேசறவன், இந்த ஐடியா எல்லாம் கொடுத்ததே இவனாத்தான் இருக்கும் “ என்று வார,

செழியன் சிரித்தான்.. இப்போது மலர் அவனை பிரமிப்போடு பார்த்தாள்.

“அக்கா.. நல்லா கும்மியடிச்சுடீங்க.. வாங்க விஷயதுக்குள்ளே போகலாம்..” என

வளர்மதி .. “செழியன், முதலில் என்ன என்ன மாதிரியான போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் என்று லிஸ்ட் செய்து கொள்வோம். காலேஜ் திறந்த உடன் முதலில் ஸ்டாப் எல்லோரும் ஒரு மீட்டிங் போட்டு அவர்களின் கருத்தை கேட்போம்.. அதற்கு பின் மாணவர்கள் கருத்தையும் கேட்போம். அதில் திருத்தங்கள் செய்த பிறகு போட்டிகளை நடத்த ஆரம்பிக்கலாம்.”

“சரிதான் வளர் மேடம்.. இப்போதைக்கு என்னுடைய சிந்தனையில் தோன்றியது எல்லாம் இதில் எழுதி இருக்கிறேன்.. நீங்களும் , மலரும் பார்த்து விட்டு எதாவது சேர்க்கவோ, மாற்றவோ வேண்டும் என்றால் சொல்லுங்க. “ என்று ஒரு பேப்பர் கொடுக்க,

அதை வாங்கி பார்த்த இருவரும், அவர்களுக்கு தோன்றியதையும் சொல்ல அதையும் குறித்து வைத்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.