(Reading time: 22 - 43 minutes)

13. இவள் எந்தன் இளங்கொடி - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்

Love

மாணிக்கம் தன் இல்லத்தின் வராண்டா மூங்கில் நாற்காலியில் காலை செய்தித்தாளோடு அமர்ந்தவர், வெகு நேரம் ஆகியும் எங்கும் நகரவில்லை, கண்கள் செய்திதாளில் பதிந்திருந்தாலும் காதும் அவர் உணர்வுகளும் காலையில் இருந்து தர்ஷினியின் நடவடிக்கையின் மீது தான் இருந்தது, மாணிக்கத்தின் காலை உணவை மேசைமீது வைத்துவிட்டு ஒரு சிறிய சாப்பாடு டப்பாவுடன் வெளியே வந்த மகளை கேள்வியாகப் பார்த்தவர், “எங்கம்மா போற, கிளம்பிட்டீயா?” என்றார்.

“இல்லப்பா, இது இட்லி, விஷ்ணுவுக்கு, அவ ஸ்கூலுக்கு கிளம்பீட்டு இருப்பா, இத குடுத்துட்டு, இன்னும் கொஞ்ச நேரத்தில நான் கிளம்பும்போது அவளையும் கூட்டீட்டு போவேன்” அவர் பதிலுக்கு காத்திராது ஒரு நொடியில் மறைந்துவிட்டாள், மறுபடியும் முயன்றவரை மாணிக்கத்தின் கண்களுக்கு சிக்காது விஷ்ணுவுக்காக அவள் செய்கின்றவற்றை அவர் கவனித்து கொண்டிருந்தார் தான். இவள் கிளம்பிவெளியே வரும்போது, கைபேசி சிணுங்கியது, அழைப்பைத்துண்டித்தாள். இரண்டாவது முறையாக இவள் அழைப்பைத் துண்டிக்கும்போது, “என்னம்மா, யாரு இத்தன தடவ கூப்பிடுறாங்க, நின்னு பொறுமையா பேசிட்டு போ!”

“இல்லப்பா, லேட் ஆயிடும், என்னோட கலிக் தான் கூப்பிடுறாங்க, நான் கிளம்புறேன்ப்பா” என்றபடி இவள் வாசலைத்தாண்டும் முன், வாசலின் அருகே சிவாவின் கார் வந்து நின்றது, முன் கதவைத்திறந்து கொண்டு, விஷ்ணு ஓடி வந்தாள், அவ்வளவு நேரம் மனதில் தோன்றியிருந்த பயம் இப்போது, வேறுவிதமான எண்ணங்களைத் தோற்றுவித்தது. சின்னஞ்சிறியவள் இவளை ஓடி வந்து கட்டிக்கொண்டாள், சிறிய பாவாடை சட்டையில் கற்றைமுடியை குடுமிப்போட்டு, கன்னத்தில் சிறிய திருஷ்டிப்பொட்டுடன், மின்னலாய் இவளிடம் வந்தவளை, தாமதிக்காது தூக்கிக்கொண்டாள் தர்ஷினி, மாணிக்கம் நிற்பதை உணர்ந்ததும், சிவா, காரிலிருந்து இறங்கிவந்தான், இவர்கள் கிளம்பியவுடன், கோவிலுக்கு செல்ல கிளம்பிய செண்பகமும் வீட்டின் வெளியே வர சிவாகாரைவிட்டு இறங்குவதை பார்த்துவிட்டு  தர்ஷினியின் வீட்டை நோக்கி வந்தார்,

“எப்படியிருக்கீங்க மாமா? ஊர்லயிருந்து எப்ப வந்தீங்க?” – சிவா

மாணிக்கம் ஒரு நொடி வியந்துபோனார், ஏதோ பக்கத்து வீட்டில் புதிதாக குடிவந்திருக்கும் வீட்டின் சிறுமிக்கு மகள் உதவுகிறாள், என்று நினைத்திருந்தவர், இப்போது, நடந்தவைகளையும், தர்ஷினியின் நடவடிக்கைகளையும் ஒன்றோடுடொன்று இனைத்துப்பார்க்க, அவருக்கு ஆத்திரமும் வேதனையும் வந்தது, அவர் முக மாற்றத்தை நன்றாக புரிந்துகொண்ட சிவா தொடர்ந்தான்.

“என்னமாமா, அப்படி பார்க்கிறீங்க, மறந்துட்டீங்களா?”

மாணிக்கம் அதிர்ச்சியில் உரைந்து போனார், “இவன் எப்படி இங்கே? தனக்கு தெரியாது ஏதேதோ நடக்கிறதென அவருக்கு தோன்றியது. “ஓ சிவாவா ஞாபகம் இருக்கு, நீ எங்க இந்தப்பக்கம்?”

“அப்பா, அவங்க நம்ம பக்கத்து வீட்டில தான் இப்ப இருக்காங்க!”

ஆவடியில கோட்டை மாதிரி வீடு இருக்கும்போது, இவன் எந்த காரணத்தின் பொருட்டு இந்த வீட்டை வாங்கியிருப்பான் என நினைக்கும்போது அவருக்கு நெஞ்சம் கனத்தது. “உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை, புத்திசாலித்தனமா பிளைக்க தெரிஞ்சவன் எவனும் இந்த வீட்டை வாங்க மாட்டான், இதில ஏகப்பட்ட வில்லங்கம், இந்த வீட்டில இருந்தவன் எவனும் நல்லா வாழல..” இன்னும் அவர் ஏதோ சொல்லப்போக..

அவர் பேச்சின் தொனி மாறுவதை தர்ஷினியால் உணர முடிந்தது. அவள் அவசரமாய், “அப்பா, அவர, உள்ள கூப்பிடுங்க!” என மென்மையாய் சொன்னாள். இவருக்கு ஆத்திரம் முற்றிக்கொண்டு வந்தது.

“ஐயோ, தர்ஷினிமா, அவரு ரொம்ப, பெரிய ஆளு, ரொம்ப பிஸியா இருப்பான், இன்னொரு நாள் சாவகாசமா கூப்பிடலாம், இப்ப அவருக்கு நிறைய வேலை இருக்கும்!”

“அப்டிலாம் ஒன்னும் இல்ல மாமா, உங்களையும் தர்ஷினியையும் விட எனக்கு முக்கியமானது ஒன்னுமில்ல!” இதை சொல்லும்போது தர்ஷினி அவருக்கு எத்தனை முக்கியமானவள் என்பது அவன் கண்களில் தெரிந்தது, அவன் வார்த்தைகளில் அத்தனை உண்மையிருந்தது. தர்ஷினியைத் தவிர அவன் மனதில் வேறு எந்த எண்ணமும் அப்போது இல்லை. செண்பகம் அவர்கள் வீட்டு வாசலை நெருங்க, தர்ஷினி வாசலை நோக்கி நடந்தாள், “வாங்கம்மா, கோவிலுக்கு கிளம்புறீங்களா?”  சூழ்நிலை கடினமாகாது இயல்பு நிலைக்கு மாற்ற அவள் தடுமாறுகிறாள் என்பது சிவாவுக்கு புரிந்தது. தர்ஷினியின் அந்த சின்ன மனவருத்தத்தை கூட அவனால் தாங்கிக்கொள்ள முடியாது தவிப்பாய் அவளைப்பார்த்தான்.  

செண்பகத்தை பார்த்ததும் மாணிக்கம் இறங்கி அவர் அருகே வந்தார், “என்னம்மா உங்க பையன் பெரிய லாயர், பிழைக்க தெரிந்தவனு நினைச்சேன்! ஆனா இப்படி பொருப்பில்லாத ஊதாரியா வளத்துத்திருக்கீங்களே!” மாணிக்கத்தின் வார்த்தைகளில் அப்படி ஒரு ஏழனம். செண்பகம் முகம் வாடிப்போனது, தர்ஷினி அனலில் விழுந்த புழுபோலானாள்.  இத்தனைக்கும் சிவாவின் முகத்தில் எந்த மாற்றமும்மில்லை. செண்பகத்திற்கு உள்ளே கொதித்தது. அவர் மாணிக்கத்திடம், “என் பிள்ளையை பத்தி எனக்கு நல்லா தெரியும் மாணிக்கம், அவன் இதுவரை வாதாடி தோத்ததா ஒரு கேஸ் கிடையாது, அவன் சம்பாத்தியம், அவன் விருப்பப்படி வீட்ட வாங்குவான் இல்லன காட்ட வாங்குவான், இதுவரைக்கும் எப்படியோ, அவன் தொட்டது எதுவும் சோடைபோனதில்ல, இந்த வீடும் அப்படிதான்!”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.