“ஏய், அழுமூஞ்சி, இதுக்காகவா, இப்படி எல்லா வேலையும் விட்டுட்டு இங்க தவம் கிடக்கிறேன்!”
“சாரிங்க!”
இப்போது இன்னும் சத்தமாய் சிரித்தான்.
“அப்பா இன்னிக்கு உங்க கிட்டேயும் அம்மா கிட்டேயும் நடந்தத வச்சு தப்பா நினைச்சுடாதீங்க, அவரு இப்படி மோசமா பிகேவ் பன்றவரு இல்ல!”
“தர்ஷூ, அதலாம் நான் அங்கேயே மறந்துட்டேன்! உன்ன இப்படி பார்க்க கஷ்டமா இருக்கு, இப்படி உன் முகத்த பார்த்துட்டு அப்புறம் எப்படி என்னால நிம்மதியா வேலை செய்ய முடியும் சொல்லு!” அவன் கண்கள் சிமிட்டி சொல்ல, இப்போது பெண் முகத்தில் மென் புன்னகை.
“டீச்சரம்மா, ஸ்கூலுக்குள்ள போகலையா?”
“போகனும்.. அம்மா வருத்தப்பட்டாங்களா?”
இந்த கேள்விக்கு அவன் பதில் சொல்லாது வெளியேபார்த்தான், உண்மையில் நடந்த நிகழ்வுகள் அவனை காயப்படுத்தியிருக்கும் என்கிற எண்ணமே இவளைக் கொன்றது. இத்தனை வார்த்தைகளையும் பெற்றுக்கொண்டு இவள் வருந்த கூடாதென நினைக்கும் அவனுக்கு இவள் என்ன கொடுக்கப்போகிறாள்? இந்த சிந்தனை வர, அவன் இடக்கரத்தை தொட்டாள்,
“தர்ஷினி நீ கிளம்பு, உன்ன ஃபாலோ பன்னி மாமா இங்க வந்தாருனா, இன்னும் பிரச்சனை ஆயிடும், கொஞ்ச நாளைக்கு விஷ்ணு உன் வீட்டுக்கு வரமாட்டா, நீயும் கொஞ்ச அமைதியா இரு, நேரம் வரும்போது மாமாகிட்ட பேசலாம், இப்ப கிளம்பு!”
அவன் வார்த்தைகளுக்கு அப்படி என்ன சக்தி இருந்ததோ, அதை கட்டளையாய் ஏற்று, இவனிடம் விடைபெற்று அவள் புதிதாக பணியாற்றும் பள்ளியின் உள் சென்றாள். ஒரு எண்ணம் தின்னமாக அவள் மனதில் நின்றது, இத்தனை அவமானங்களிலும் அவன் பொறுமைகாத்தது, இவளுக்காகத்தான், இவர்களிடையே அரும்பி மலர்ந்திருந்த அந்தக் காதலுக்காகத்தான் என்பதை உணரும்போது மனம் அவனை நாடியது. அப்பாவின் வார்த்தைகள் மீண்டும் காற்றில் கரைந்தது.
விஸ்வம் குழுமத்தின் மிக முக்கிய கூட்டத்தின் பிராதன உரையை நிகழ்த்த இளமாறன் முனைப்போடு அமர்ந்திருந்தான். நேரம் மிக கடினப்பட்டு கரைவதாக அவனுக்கு தோன்றியிருக்கலாம், நிமிடத்திற்கொரு முறை அவன் கைக்கடிகாரத்தைப் பார்த்தான். ரிஷியின் அறிவுரைப்படி, சில குறிப்புகள் அவன் நினைவில் நின்றாலும், இது முழுமையாக அவனது திறமைக்கு கிடைத்த வாய்ப்பு. நேரடியாக விஸ்வத்தையே சந்திக்கப்போகிறோம் அவர் முன் ரிஷியின் பிரதிநிதியாகவும், அவனது குழுமத்தின் உயர் மேலாளராகவும், தனது ஆராய்ச்சிகளின் வெற்றியாக அவன் நினைத்திருக்கும் திட்டங்களை அனைவருக்கும் அவன் பகிரகபோகும் மிக உன்னத நாள். எனவே அந்த அறை, அப்போது அவனுள் பல எண்ண அலைகளை எழுப்பிக்கொண்டிருந்தது. அறையின் சலசலப்பு திடீரென்று நின்றுபோனது. அந்த திடீர் அமைதியின் தாக்கத்தால், தன் தலையை நிமிர்ந்து அவன் பார்க்கும்போது, ஒரு உதவியாளர், ஒரு கோப்பை சேர்மேனுக்கான இருக்கையின் முன் மேசையில் வைத்துவிட்டு நகர, அங்கே இருந்த அசாத்திய அமைதி, இளமாறனை இன்னும் ஆர்வம் கொள்ள செய்தது. அடுத்த ஐந்து நிமிடங்களில், விரைவாக உள்ளே வந்த விக்னேஷ், அனைவரிடமும், “மேம் வந்துட்டாங்க, இன்னும் ஐஞ்சு நிமிஷத்துல இங்க இருப்பாங்க!” என்றவாரே, ஒரு பெருமூச்சுடன் இளமாறனின் அருகே உள்ள இருக்கையை இழுத்துபோட்டு அமர்ந்தான். அவனுக்கும் சேர்த்து ஒரு பொதுவாக புன்னகையை உதிர்த்துவிட்டு அவனும் கோப்புக்குள் மூழ்கிப்போனான்.
விஸ்வம் குழுமத்தின் மொத்த பங்கு தாரார்களும் பங்கேற்கும் அந்த சந்திப்பில் இளமாறன், விஸ்வத்தை சந்திக்கும் எண்ணத்துடன் இருந்தானே தவிர, அவர் மகளை அல்ல. “குட்மார்னிங்க்” என்ற கனீர் குரல் வந்த திசையில் அவன் நிமிரவும், அங்கே அந்த அறையின் உள்ளே கீர்த்தனா நுழையவும் சரியாக இருந்தது. அங்கிருந்த ஒருவர் தவராது அவளுக்கு வணக்கம் தெரிவித்தனர், அவர்கள் கீர்த்தனாவின் கையில் கொடுத்த பூங்கொத்துகளை புன்னகையுடன் வாங்கிக்கொண்டாள், அவள் அருகே பணிவாக நின்ற அவளது உதவியாளர், அனைத்தையும் அவள் கைகளிலிருந்து பணிவுடன் வாங்கிக்கொண்டார். அவள் திரும்பி ஒரு நொடி விக்னேஷை பார்வையிட, அவன் கையிலிருந்த கோப்புகளை கொண்டுவந்து அவளிடம் நீட்டினான். இளமாறன் இருக்கையிலிருந்து எழுவதற்கு கூட மறந்துபோனான். “கீர்த்தனா” அவன் உள் மனது அதிர்ச்சியில் உரைந்துபோனது. வெளீர் பச்சைவண்ண புடவை, கழுத்தை மறைத்து அவள் அணிந்திருந்த கரும்பச்சை ப்ளவுஸ், இப்போது இவன் கண்களில் பட்டது, “நீ எதை அவளிடம் தேடுகிறாய்” என உள்ளம் அவனுக்கு கட்டளையிட, கூலிங்கிளாசை களட்டியப்பின் பளிச்சென்று மின்னிய அவள் முகத்தில் நிலைத்தது, கண்கள்.
ஒருமுறையேனும் இளமாறனை அவள் பார்த்ததாய் அவனுக்கு தோன்றவில்லை, அவள் கண்ணும் கருத்தும் தன் கைகளில் உள்ள கோப்புகளைத்தவிர வேறு எதிலும் இல்லை. அவள் வேண்டுமென்றே இவனை அவமானப்படுத்துவதாக கூட உள்ளம் சொன்னது. கீர்த்தனா, நிச்சயம் ஒரு பணக்கார வீட்டுபெண் தன்னைப்போன்ற நடுத்தரக் குடும்பம் கிடையாது என அவன் யூகித்ததை விட, பெரும் தொழில் சாம்ராஜ்ஜியத்திற்கு சொந்தக்காரரான விஸ்வத்தின் மகளாய் இருப்பாள் என அவன் கனவிலும் நினைக்கவில்லை. அது அவனுக்கு அப்போது வேதனையை தந்தது. வேண்டுமென்றே இதை மறைத்திருப்பாள் அன அவனுக்கு தோன்றியது. சாட்டை அடியாய் அவளின் வாயைப் பிடுங்கி மனதில் தோன்றும் அத்தனையையும் கேட்க வேண்டும் போலிருந்தது அவனுக்கு. அதற்கு நேரமில்லாது சந்திப்பு தொடங்கியது.