(Reading time: 23 - 45 minutes)

தொடர்கதை - சண்முகசுந்தரியும்... சிங்காரவேலனும்... - 07 - ஸ்ரீலக்ஷ்மி

SS

'எந்த போராட்டமும் இல்லையென்றால்.. எந்த முன்னேற்றமும் இல்லை!!'

திகாலை சில்லென்றக் காற்று முகத்தில் இதமாய் வீச டிராக் பேண்ட்டும், கையில்லா பசுமைப்புரட்சியைக் குறிக்கும் வெள்ளை டி-ஷர்ட்டுமாய் வியர்க்க விறுவிறுக்க ஓடிக் கொண்டிருந்தான் சிங்காரவேலன்.

விடியற்காலை ஞாயிறு விடுமுறை தினத்திலும் சென்னை எலியட்ஸ் பீச்சில் கூட்டம் மிதமாய் இருக்கத்தான் செய்தது.. இயற்கையை ரசிக்கும் மனிதர்கள் இருக்கும் வரை இயற்கையும் வாழும்தான் என்பதற்கு எடுத்துக் காட்டே விடுமுறை தினத்தை காலையிலேயே ரசிக்கவந்த மக்கள் கூட்டம்.

ஒருசிலர் காலை சூரியோதயத்தின் அழகை ரசிக்க அலைகடல் அருகே நின்று கொண்டு கால்களை நனைத்து இதமாய் மகிழ்ந்து கொண்டிருக்க, ஒரு சிலரோ கடற்கரையை ஒட்டிய நடைபாதையில் வேக நடைப்பயிற்சி செய்து, தங்கள் ஊளைச் சதைகளையும், வேண்டாத கொழுப்புக்களையும் குறைக்க அரும் பாடுபட்டுக் கொண்டிருந்தனர்.. மற்ற சிலரோ, சிங்காரவேலனைப் போல வேகமாக ஓட்டப்பயிற்சி செய்து கொண்டிருந்தனர்.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டே ஓடிக்கொண்டிருந்த சிங்காரவேலனுக்கு லேசான சிரிப்பு எட்டிப்பார்த்தது.. நடைப்பயிற்சியோ, இல்லை ஜாகிங்க் எனப்படும் ஓட்டப்பயிற்சியோ எதுவுமே முறைப்படி, அதற்குரிய பயிற்சியாளரின் அறிவுரைப்படியோ, இல்லை மருத்துவரின் பரிந்துரைப்பேரிலோ செய்யப்பட வேண்டும்.. எதைப் பற்றியும் லட்சியம் இல்லாமல் தானே மேதாவியென நினைப்பில் தங்கள் இஷ்டத்திற்கும், உடலுக்கும் பொருந்தாத வகையில் உடற்பயிற்சி செய்து கொண்டிருப்பவர்களைக் கண்டுதான் அவனுக்குச் சிரிப்பு வந்தது.

என்ன செய்வது யாராவது எடுத்துச் சொன்னாலும் புரிந்து கொள்ள விரும்பாமல் அகம்பாவச் சுபாவம் கொண்டவர்களை எதுவும் செய்வதிற்கில்லை.. தன் முன்னே அளவுக்கதிகமான எடையுடன் கூடிய நடுத்தர வயதினர் ஒருவர் ஓட முடியாமல் மூச்சிறைக்க ஓடியதைப் பார்த்தே சிரிப்பு வந்தது.

சட்டெனப் பொங்கி வந்த சிரிப்பை நிறுத்திக் கொண்டவன், மற்றவர்கள் வாழ்முறையை இகழ்வாக எண்ணுவதும் தவறல்லவா என்று தோன்ற தான் சற்றுமுன் சிரித்ததை நொந்து கொண்டான்.. தான் அடுத்தவரின் குறைகளைக் கண்டு சிரிக்கும் அளவு அப்படிப்பட்ட இழிவானவன் இல்லையே சட்டென தன்னையே நிந்தித்தும் கொண்டான்.. அதனால் சிறு கவலையும் தோன்ற அக்கறையுடன் சிந்திக்கத் தொடங்கினான்.

'ம்.. எடுத்துச் சொல்லாம் என்று நினைத்தாலும், இங்கே வந்த புதிதில் இப்படி ஒருவருக்கு அறிவுரைச் சொல்லி வாங்கிக் கட்டிக் கொண்டது நினைவில் வந்தது.. கூடவே ‘உடற்பயிற்சியாளரை வைத்துக் கொண்டு பயிற்சி செய்ய நீ துட்டு கொடுப்பாயா’ என அவர் இகழ்ந்ததும் ஞாபகத்தில் வர..'

இந்தச் சென்னை மாநகரைப் பொருந்தவரை முடிந்தவரை அடுத்தவர் விஷயத்தில் தேவையில்லாமல் தலையிடாமல் இருப்பது நல்லதே என்று அவனுக்குத் தோன்ற.. இங்கே வந்து வாழ வேண்டிய தன் விதியை எண்ணித் தன்னையே நொந்துக்கொள்ளத் தொடங்கினான்.

‘யாருக்காக இங்கே வந்திருக்கிறேன்.. என் மனதிற்கினிய பணியைச் செய்ய முடியாமல்.. தன்னை இங்கே தள்ளிய விதியின் சதியை அவனால் நிந்திக்கவா முடியும்.. தன் வாழ்வாதாரமாய் இருந்த உயிரின் மேலான விவசாயமே அவனுக்கு இல்லை என்று ஆனபிறகு.. அவனும் தான் வேறு என்ன செய்ய முடியும்..

படித்துப்படித்து விவசாயம் அவனுக்கு வேண்டாம், ஏமாற்றம் தான் கிட்டும் என்று எடுத்துச் சொன்ன தந்தையே இன்று உலகில் இல்லாத பொழுது அவனும் தான் என்ன செய்ய முடியும்.. அவனையே நம்பியிருக்கும் தங்கை.. தந்தையை இழந்த தாய்..

தங்கையை நினைக்கும் பொழுதே வயிற்றுக்குள் என்னவோ செய்கிறதே.. நெஞ்செல்லாம் அடைக்கிறதே.. அண்ணா என்று ஆசையாய் அழைத்து ஓடிவருபவள்.. இன்றிருக்கும் நிலை.. மற்றவர்கள் மனநிலையைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்றாலும் பரவாயில்லையே.. அவள் தன்னையல்லவா மறந்திருக்கிறாள்..

என்ன காரணம்.. காரண, காரியங்களை ஆராய்ந்து கொண்டிருப்பவன் முட்டாள்.. அதை நேர் செய்பவன் அல்லவா புத்திசாலி.. ஆனால்?.. எதையும் ஏற்க மறுப்பவளை நிந்தித்து என்ன பயன்?..

ம்.. அதற்காகத்தானே எனக்குப் பிடிக்காத இடத்தில், பிடிக்காத மனிதர்களுடன்.. நான்?.. ம்.. இனி யாரை நொந்து என்னதான் பயன்?.. நடந்தது இல்லை என்று மாறிவிடுமா என்ன?..’

தன் போக்கில் சிந்தித்துக் கொண்டிருந்த சிங்காரவேலன், சட்டென மெல்ல தன் ஓட்டப் பயிச்சியைக் குறைத்துக்கொண்டு மெல்ல கடற்கரையில் ஓரிடத்தில் நின்று கொண்டவன் தன் அன்றாட உடற்பயிற்சியைச் செய்ய முதலில் சற்றுத் தன்னைச் சமன்படுத்தி, மனதை நிதானப்படுத்திக் கொண்டான்.

ஆழ்மூச்செடுத்துத் தன்னைச் சரிப்படுத்தி மூச்சைச் சீராக்கி, தன் வழக்கமான உடற்பயிற்சிகளைச் செய்யத் தொடங்கியவன் பார்வையில்.., சற்றுத் தொலைவில் அந்தக் காலை வேளையிலும் சில நடைவண்டி கடைகள் சுறுசுறுப்பாகத் தங்கள் வியாபாரத்தில் மூழ்கி இருப்பதைக் கண்ணுற்றவனுக்குத் திருப்தியாகவே இருந்தது..

பரவாயில்லை மக்களுக்கு மூலிகை மருத்துவத்தில் சற்று நம்பிக்கை வந்திருக்கிறது எனத் தோன்ற..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.