(Reading time: 23 - 45 minutes)

"அத்தோடு அண்ணாச்சி.. இன்னுமொரு சின்ன ரிக்வெஸ்ட்.."

'இன்னுமா.. இன்னும் என்ன சொல்லப்போகிறான்.. இந்த ஆளு.. காலங்கார்த்தால இப்படிக் கழுத்தறுக்கன்னு வந்து சேர்ந்திடறாங்கப்பா..' கடைக்காரன் நொந்து கொள்வது நன்றாகவே புரிந்தது சிங்காரவேலனுக்கு.. ஆனால் அப்படியெல்லாம் விஷயத்தை இலகுவாக விடுபவன் அல்லவே அவன்..

"அண்ணாச்சி.. இப்படி ப்ளாஸ்டிக் கப்பை யூஸ் பண்ணுவதை முதல்ல நீங்க நிறுத்துங்க.. உங்களுக்கே தெரியும்.. இப்படி ப்ளாஸ்டிக் கண்டெயினர்கள், டிஸ்போசபிள் கிளாசஸ்.. ப்ளேட்ஸ், ப்ளாஸ்டிக் பேக்ஸ்.. எல்லாமே நம்ம சுற்றுச்சுழலை மாசுபடுத்துகிறதென்று.. பாருங்க.. அந்தக் குப்பைத் தொட்டி முழுக்க ப்ளாஸ்டிக் பொருட்கள் பொங்கி வழிகின்றது.. அதெயெல்லாம் எடுக்க ஆள் இல்லை.. எத்தனை நாள் குப்பையோ.. இதில் மேலும் மேலும் நாமும் குப்பையைச் சேர்கிறோம்.. அப்படியே இதை கார்பரேஷன்காரர்கள் எடுத்தாலும் எல்லாவற்றையும் முறையாகக் கழித்துக் கட்டவும் முடிவதில்லை.. ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் விசியெறிந்து சென்றுவிடுகிறார்கள்.. இல்லை தண்ணீர் காணாத வற்றிய குளங்களோ, குட்டைகளோ?.. இவையெல்லாம் அழிய எத்தனை நாட்கள், வருடங்கள் எடுக்கும்?.. இதனால் நிலத்தடி நீரும் பாதிக்கப்படுகிறதே.."

"உங்களுக்கே தெரியும்.. போன வருடம் பெய்த மழையை நம்மால் சேமிக்கத்தான் முடிந்ததா?.. இல்லை குளம், குட்டைகளில் சரியாக மழைத்தண்ணீர் போய்ச் சேர்ந்ததா?.. பூமிக்குள் உறிஞ்ச வழியில்லாமல் நிலத்தடி நீரெல்லாம் கடலில் சென்று விணாகப் போய்.....இதற்கெல்லாம் காரணமென்ன?.. சரியாகத் தூர்வாரப்படாத நீர்நிலைகள், குளம், குட்டைகள் முழுவதும் இப்படிச் சேர்ந்த கழிவுப் பொருட்கள்.. அவை என்று மங்கி பூமிக்கடியில் சேரும்?.."

"இத்தகைய ப்ளாஸ்டிக் பொருட்கள் தான் இன்றைய சுற்றுப்புறசுழலின் எதிரிகள் இல்லையா?.. ஆங்காங்கே வீசப்படும் இக்கழிவுப் பொருட்கள் உருமாற எத்தனை கோடிக்கணக்கான ஆண்டுகள் எடுத்துக் கொள்கின்றன தெரியுமா?.. நாமே நம் அழிவை தேடிக் கொண்டு போய்க்கொண்டிருக்கிறோம்.. இயற்கைக்கு எதிராய் செய்யும் எந்தச் செயலும், நமக்கே தீங்கு விளைவிக்கும் என்று புரிந்து கொள்ளாமல் போனது தான் இங்கே அதிகம்.. இதோ இப்பொழுதே சூரியன் சுட்டெரிக்கத் தொடங்கிவிட்டான்.. இன்னும் வரும் கோடைக்காலத்தில் தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடப் போகிறது?.. இதற்கெல்லாம் காரணம் என்ன?.. யாராவது யோசிக்கிறார்களா?.."

தன்பாட்டிற்குச் சொல்லிக் கொண்டே போனவனை விநோதமாய்ப் பார்த்துக் கொண்டிருந்த கூட்டம்.. இந்த ஆள் அறிவுரையைக் கேட்டுக் கொண்டிருக்க நமக்கு நேரமில்லை.. வந்த வேலை முடிந்து, சுறுசுறுப்புப் பானம் அருந்திய திருப்தியில் மெல்ல நகரத் தொடங்க.. வேறு சிலரோ பக்கத்துக் கடைகளுக்குப் படையெடுக்கத் தொடங்கினர்.. இங்கே எதற்கு வீண்வம்பென்று..

சிங்காரவேலனுக்குத் தெரிந்துதான் இருந்தது.. எதிலும் சுத்தம் பார்ப்பவனுக்கு.. அப்படியே விஷயத்தை விட்டுச் செல்ல பிடிக்கவில்லை.. எடுத்ததை முடிக்க நினைப்பவன்..

"அண்ணாச்சி.. நீங்கள் ஏன் இந்த ப்ளாஸ்டிக் கப்புகளுக்குப் பதில் நம்மூர் மந்தார இலை கப்புகளில் பானத்தை ஊற்றி விற்கலாமே?.. இலை என்பதால் அதை அருந்தியவுடன் குப்பையில் வீசி எறிந்தாலும் விரைவில் மங்கி மண்ணில் உரமாகுமே?.. ஏன் நீங்கள் யோசிக்கக் கூடாது?.. மந்தாரை இலை தொன்னை என்று இல்லை.. எங்கள் ஊர் பக்கமெல்லாம் பனை ஓலையில் இப்படித் தொன்னைகள், கப்புகள். தட்டுகள், இன்னும் நிறையப் பொருட்களைச் செய்து விற்பனைச் செய்கிறார்கள்.. இங்கே பட்டிணத்தில் வேண்டுமானால் நமக்கு அதன் மதிப்புத் தெரிவதில்லை.. ஆனால் பாருங்கள் வெளிநாட்டுக்காரர்கள் அவற்றையெல்லாம் அள்ளிக் கொண்டு போகிறார்கள்.." என்றவன்..

"அண்ணாச்சி.. இப்படி இயற்கைப் பொருட்களால் தயாரிக்கப்பட்டவை உடலுக்கும் நல்லது, நம் சமுதாயத்திற்கும் கேடு விளைவிக்காது.. மரங்களின் இலைகள் என்பதால் அதுவே உரமாகுமே.." ஒரு இலவச ஆலோசனையை வழங்க..

வேறு வழியில்லாமல் தலையாட்டிய அண்ணாச்சி, "செய்வோம் தம்பி.. நீங்களே எங்கே, எப்படிக் கிடைக்கும்னு சொல்லிடுங்க.. வாங்கி வச்சிப்புடறேன்.. ஆனா தம்பி என் ஒருத்தன் செய்தால் போதுமா?.." என மெல்ல நக்கலாகக் கேட்க..

"ஒரு துளி மழை நீர்தான் போகப்போகப் பெருகி வெள்ளமாகும்.. தனி ஒருத்தர் நீங்க முதலில் தொடங்குங்கள் அண்ணாச்சி.. உங்களைப் பார்த்து பத்து பேர் முன்வருவார்கள்.. பத்து நூறாகும்.. நூறு ஆயிரமாகும்..பின் லட்சமாகும்.. முதலில் முயற்சி செய்து பாருங்களேன்.." எனப் பொறுமையாக எடுத்துச் சொன்னவன் பின்னர் வந்த வேலை முடிந்த திருப்தியில் தலையாட்டியபடி இடத்தைக் காலி செய்தான்.

"இப்படிச் சில பேர் புறப்பட்டு இருக்காங்கடா.. பசுமைப் புரட்சி என்ற பேரில் மொக்கைப்போட.. என்னவோ இவங்களாலத்தான் இந்த உலகமே நடக்குதுன்னு எண்ணம்.." இளக்காரமாய் யாரோ சொல்ல அதற்குக் கொள்ளெனச் சிரித்த கூட்டத்தை விரக்கிதியாய் பார்த்தவன்.. 'கடமையைச் செய்வோம்.. பலனை எதிர்பார்க்க வேண்டாம்.. நிச்சயம் புரிந்து கொள்பவர்கள் இருக்கத்தான் இருக்கிறார்கள்..' வேகமாகக் கடற்கரையை விட்டு நகர்ந்து தன் வண்டி நிறுத்தி வைத்திருந்த இடத்திற்கு விரைந்தான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.