(Reading time: 23 - 45 minutes)

"ம்.. எல்லாம் சரிதான்ப்பா.. நீ ஆரோக்கியபானம் கலந்து கொடுப்பது நல்ல செயல்தான்.. மக்கள் உடம்பைப் பேண நினைக்கிற நீ சுற்றுச்சூழலை ஆரோக்கியமாக வைத்திட்ட நினைக்கலையே?.." கொஞ்சம் அதிகாரமாகத் தன் குரலை உயர்த்தியவனைச் சுற்றி இருந்தவர்கள் விஷயமென்னவோ என்று ஆவலாய் பார்க்கத் தொடங்கினனர்.

காலையில் கையில் செய்தித்தாள் இல்லாமலேயே மெல்வதற்கு விஷயம் கிடைத்தால் சும்மா இருப்பார்களா நம் ஜனங்கள்.. சுறுசுறுப்பாய் நோட்டம் விடத் தொடங்கினார் மெல்லுவதற்கு அவல் கிடைக்குமா என்ற பாவனையில்..

"என்ன சார்.. காலங்கார்த்தால லெக்ச்சர் கொடுக்க வந்திருக்கிங்களா?.. இப்போ என்ன கெட்டுப் போச்சு சார் எங்க பானத்தைக் குடிச்சி.. மொதல்ல தள்ளுங்க சார்.. ஞாயிற்றுக்கிழமைதான் கொஞ்சம் கல்லா நல்லா களைகட்டும்.. அதையும் கெடுத்துட்டு.. நீங்க என்னவோ குடிக்கலை.. குடிக்க வரக் கூட்டத்தையும் கெடுக்க வந்து.. வேலையைப் பார்க்க விடுவீங்களா?.." கடுப்பாக முறைத்த கடைக்காரனை..

"ம்.. உன்னைக் குத்தம் சொல்லவில்லைப்பா?.. பாரு.. நீ நல்லது செய்ய நினைக்கிறே?.. சரி.. இந்தப் பானமெல்லாம் நல்ல சத்தானவைதான்.. அதை நான் குறை சொல்லவரவில்லை.." என அவரைச் சமாதானப் படுத்திய சிங்காரவேலன் என்றுமே வீண் சண்டைகளுக்கு அலைபவன் இல்லை.. எதுவாக இருந்தாலும் முதல் நிதானமாகத்தான் சொல்லிப் பார்ப்பான்.

"அப்புறம் என்னங்க சாரு.. நீயும் ஒரு டம்ளரை குடிச்சிட்டு இடத்தைக் காலி பண்ணுவியாம்.." கடைக்காரன் சலித்துக் கொள்ள..

"இங்கப்பாரு.. அதில்லை விஷயம்.. உன் சத்துபானத்தைப் பற்றி நான் குறைப் பேசவரலை.. அதை முதல்ல நீ புரிஞ்சிக்கோப்பா.. நீ அதை இந்த ப்ளாஸ்டிக் டிஸ்போசபில் கிளாசில் கொடுக்கிறீயே?.. அதான் அங்கே மேட்டர்.. பாரு யார் செய்தார்களோ எவரோ தெரியவில்லை.. உன்னிடம் பானத்தை வாங்கிக் குடித்து விட்டு பொது இடத்தில் தூக்கி எறிகிறார்களே அதைச் சொல்ல வந்தேன்.."

"சார்.. என்ன சார் நீங்க இந்தக் காலத்தில் கூட விஷயம் புரியாமல்.. பாருங்க அங்க டஸ்பின் வைச்சிருக்காங்க.. அதில்தான் சார் எல்லோரும் போடுகிறோம்.." யாரோ ஒரு அவசரக்கொடுக்கை தலையிட..

"எஸ் சார்.. அதுதான் பாயிண்ட்.. ஆங்காங்கே வைத்திருக்கும் குப்பைத்தொட்டியில் போட்டால் விஷயம் முடிந்துவிடும் சரிதான்.. ஆனால் அப்படிச் செய்யாததால் தான் பிரச்சனையே.. உங்களில் யாரோ எவரோ பாருங்கள்.. எத்தனை பேர் அந்தக் குப்பைத்தொட்டியில் போட்டு இருக்கிறார்கள்.. ஏன் இந்தக் கடைக்காரர் கடைப்பக்கம் வைத்திருக்கும் அந்த ப்ளாஸ்டிக் வாளியில் கூடப் போடாமல் பொது இடங்களில் வீசிவிட்டுச் செல்பவர்களைப் பற்றித்தான் இங்கே பேச்சு.." என்றான் கடுமையாகச் சிங்காரவேலன் அவரிடம் திரும்பி..

அவன் குரலில் அழுத்தத்திலும், கடுமையான தொனியிலும் சற்றே நிதானித்த அந்த அவசரக்கொடுக்கோ.. "உம்.. நீங்க சொல்வது பாயிண்ட்தான்.. ஆனாலும் யாரோ எவரோ செய்ததற்கு இங்கே வந்து சத்தம் போட்டால்.." சற்றே பம்மத் தொடங்க..

"இங்கப்பாருங்க.. நான் சத்தம் போடவோ.. இல்லை யார்மீதும் சண்டைப் பிடிக்கவோ வரவில்லை.. கொஞ்சமாவது விழிப்புணர்ச்சியுடன் இருக்க வேண்டும் என்றுதான் சொல்ல வந்தேன்.."

"சார்.. அதுக்கு நான் என்ன சார் செய்யமுடியும்?.. குப்பை போட வாளி வைக்கத்தான் முடியும்.. இல்லை அங்கே வைத்திருக்கும் பொதுக் குப்பைத்தொட்டியிலாவது குடிப்பவங்க போடணும்.." கடைக்காரர் அலுத்துக் கொண்டார் தன் வியாபாரம் வீண் பேச்சால் பாதிக்கப்படுவதைக் கண்டு..

"ம்.. அங்கேதான் அண்ணாச்சி நீங்க வர்றீங்க.. இனி உங்க கடையில் கொஞ்சம் சமுதாய விழிப்புணர்ச்சியைக் கொண்டு வரலாமே?.. சுற்றுப்புற சுழலை நீங்களே பாதுகாக்கலாம்.."

புரியாமல் விழித்த கடைக்கார அண்ணாச்சியோ தலையைப் பியித்துக் கொள்ளலாமா, இல்லை மற்றபிற தன் சக தோழமை கடைக்காரர்களுடன் அவசர ஆலோசனை பேச்சு வார்த்தை செய்யலாமா என யோசிக்க..

"அது ஒன்றுமில்ல அண்ணாச்சி.. சிம்பிள்.. இப்ப பாருங்க அரசாங்கம் ப்ளாஸ்டிக்கை உபயோகப்படுத்த தடை போட்டு இருக்காங்க.. இன்னும் முழுமூச்சா நடவடிக்கை எடுக்கலைன்னாலும், இதைப்பற்றி நிறைய விழிப்புணர்ச்சி வந்து கொண்டுதான் இருக்கு.. நம்ம ஊர் போல் இல்லாமல் சில மாநிலங்களில் மொத்தமாக இதற்குத் தடை உத்தரவும் போட்டு இருக்காங்க.. அரசாங்கம் செய்யும் என்று காத்திராமல் நாமும் கொஞ்சம் ஒத்துழைக்கலாமே?.."

"உதாரணத்திற்கு உங்க கடையில் பானம் அருந்துபவர்களைக் குடித்துவிட்டு அதற்குரியக் குப்பைத்தொட்டியில் போடுங்கள் என்று சொல்லலாம்.. உங்களுக்குச் சொல்லக் கஷ்டமாக இருக்கிறதா.. சரி.. அதோ பாருங்கள்.. உங்கள் கடையில் என்னென்ன பானங்கள் எல்லாம் கிடைக்குமென்று விலைபட்டியலோடு போட்டு உங்க வண்டியில போஸ்ட்டர் ஒட்டியிருக்கீங்க.. பாராட்டப்பட வேண்டிய விஷயம்தான்.. அப்படியே கீழே குடித்துவிட்டு, காலி கிளாசை குப்பைத் தொட்டியில் போடவும் என்று எழுதி வைத்துவிடுங்களேன்.. அதையும் பார்த்து, படித்து விட்டு செய்யலையா.. உடனே கூப்பிட்டு என்னை மாதிரி லெக்சர் கொடுங்க.. பிறகு என்ன?.. அவர்களே செய்ய முன்வருவார்கள்.."

"ம்.. ஐடியா நல்லாத்தான் இருக்கு.. தனக்கா தெரியாதவர்களுக்குச் சொல்லித்தான் தெரியப்படுத்தணும்.." அவசரகொடுக்கை மனுஷர் தலையாட்டியபடி நகர்ந்துவிட..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.