(Reading time: 23 - 45 minutes)

‘காசைக் கொடுத்து உடம்பைக் குறைக்கப் பயிற்சியாளர்களின் உதவியுடன் ஜிம்மில் பயிற்சி செய்யும் கூட்டம் டயட், மாத்திரை மருந்துகள் என்ற போர்வையில் தங்களை வருத்தி உடம்பைக் குறைப்பவர்கள் ஒருபக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் இயல்பான ஓட்டபப்யிற்சியோ, இல்லை நடைபயிற்சியோ செய்து களைத்தவர்கள் ஆங்காங்கே விற்றுக் கொண்டிருக்கும், அருகம்புல்சாறு, வாழைத்தண்டு ஜூஸ், மற்றும் மூலிகைகள் கலந்த பானங்கள் எனக் குடித்துப் புத்துணர்ச்சிப் பெற்று உடம்பை இயற்கையான முறையில் குறைப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இதையெல்லாம் கண்டவனுக்கு ஏனோ மனம் அலைப்புறலானது.. ‘இப்படிக் கடற்கரைக்கு வந்து உடற்பயிற்சி செய்து, வீட்டில் தயாரிக்கச் சோம்பல்பட்டு, காசைக் கொடுத்துப் பானங்களை அருந்தி.. ம்.. எல்லாம் காலத்தின் கொடுமை.. இயற்கையான காற்றைச் சுவாசிக்கக் கடற்கரை பக்கம் வரவேண்டியிருக்கிறது.. நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது.. இன்னும் போகப்போக.. கொஞ்சம் காலத்தில் காசு கொடுத்துக் காற்றை வாங்க நேரிடுமோ?..’

வீட்டைச் சுற்றி தோட்டம், துரவு இருந்தால் காலை வேளையில் தோட்டபயிற்சி செய்யலாம்.. மரங்களும், செடி கொடிகளும் நிறைந்திருக்கும் தோட்டத்தில் காற்றில் இயற்கையாகவே நமக்கு வேண்டிய ஆக்ஸிஜன் நம்மிடையே நிறைந்திருக்கும்.. எத்தனை பேருக்கு கடற்கரைக்கு வந்து காலைவேளை சுத்தமான காற்றை அனுபவிக்கக் கொடுத்து வைத்திருக்கிறது.. தனக்குப் பரவாயில்லை.. வண்டியை எடுத்துக் கொண்டு வரமுடிகிறது.. குறையாக நினைக்க முடியவில்லை..ஆனாலும் எல்லோராலும் முடியுமா?.. முதலில் பக்கத்தில், வீட்டருகே கடற்கரை இருக்கவேண்டும் அல்லவா?..

‘ஏன் தான் குடி இருக்கும் வீட்டை எடுத்துக் கொண்டாலே போதுமே.. கொஞ்சம்கூட மரமோ, செடிகளோ இல்லாமல்.. மொத்தமாகச் சிமெண்ட் தரை.. பின் எங்கே இயற்கையான காற்றை அனுபவிக்கமுடியும்.. ஊருக்கெல்லாம் மரம் நடுங்கள் என்று உபதேசம் செய்யமுடிபவனால் தன் வீட்டுச் சொந்தக்காரரான ரேணுகாவை ஒன்றும் சொல்ல முடியவில்லையே..’

இருக்கட்டும்.. காலம் வராமலா போகும்.. இப்பொழுது வாயை மூடிக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது.. வேறு வழியில்லை.. வசிக்க இடம் வேண்டுமே..

அப்படியொன்றும் அவன் வசிப்புடன் மாளிகை எல்லாம் இல்லைதான்.. பத்துக்குப் பணிரெண்டு என்ற படுக்கையறையும் அட்டாச்சுடு பாத்ரூம் என ஒட்டிய குளியலறையும், அதைத் தொடர்ந்து சின்னச் சமையலறையும், உள்ளே நுழையும் போதே சின்ன வராண்டாவும் என அவ்வளவுதான் அவன் சின்னக் குடியிருப்பு.. அதற்கே மாதவாடகை பத்தாயிரம்.. அவன் இருக்கும் இப்போதைய சூழ்நிலை அப்படி.. தோட்டமும், பண்ணை வீடுமாய் என்று அவன் எதிர்பார்க்க முடியுமா என்ன?..

மெல்லமெல்லத்தான் அவர்களைச் சுற்றுப்புற சூழ்நிலையால் ஏற்படும் நன்மைகளையும், தீமைகளையும் எடுத்துச் சொல்ல வேண்டும்..

‘பரவாயில்லை அவர்கள் மகள் மணிமேகலை.. மணி.. பெயருக்கேற்ப.. நல்ல தங்கமான பெண்.. அவளுக்கு இப்பொழுது நான் செய்யும் பசுமைப் புரட்சி திட்டத்தில் நல்ல ஈடுபாடு இருக்கிறது.. பெரியவர்களைக் கண்டு சின்னவர்கள் திருந்தும் காலம் போய், இனி சின்னவர்களைக் கொண்டு பெரியவர்களை மாற்றும் காலம் வரும் போல..’

தனக்குள் சிரித்துக் கொண்டவன், தன் அன்றாட உடற்பயிற்சிகளை வேகமாகச் செய்யத் தொடங்கினான்.

தன்பாட்டிற்குக் குனிந்து நிமிர்ந்து கொண்டிருந்தவன் கால்களில் ஏதோ விழுந்து இடற, தன் வேகமான உடற்பயிற்சியை நிறுத்திவிட்டுக் குனிந்து பார்த்தவன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

யாரோ அறுகம்புல் சாற்றை அருந்திவிட்டு, காலி ப்ளாஸ்டிக் கப்பை வீசியிருக்க, அவன் காலடியில் அது தடைப்பட்டதைக் கண்டவுக்கு அவ்வளவு ஆத்திரம் பொங்கி வந்தது.

‘அறிவு கெட்ட மனிதர்கள்.. எவ்வளவு எடுத்துச் சொன்னாலும், புரிந்து கொள்ளாத ஆட்டுமந்தைகள்.. இப்படி ஒவ்வொருவரும் குடித்துவிட்டு, பொறுப்பில்லாமல் தூக்கி எறிந்தால்..’

சட்டெனக் கையில் அந்த ப்ளாஸ்டிக் டம்ளரை எடுத்துக் கொண்டான் தன் வேக நடையுடன் அருகிலிருந்த அந்த நடைவண்டி கடையருகே அருகே விரைந்தான்.

"அண்ணாச்சி.. " என்று குரல் கொடுக்க..

"வாங்க சார்.. வாங்க.. உங்களுக்கு என்ன வேணும்?.. அறுகம்புல் ஜூசா?.. இல்லை நாவல் பழக் கொட்டையை அரைத்துச் சக்கரைக்கான மூலிகை தண்ணீரா.. இல்லை உடற்பயிற்சி முடிஞ்சிப் போச்சுன்னா நல்ல சத்தான ராகிக் கஞ்சியும் இருக்கு.. இல்லை சுகர்கேன் ஜூஸ் நல்லா இஞ்சியும், எலுமிச்சையும் போட்டு கலக்கட்டா.. எது வேண்டுமானாலும் சொல்லுங்க சார்.. விதவிதமான ஆரோக்கியப்பானம் தயாரா இருக்கு.."

"இல்லைப்பா.. எனக்கு இப்போது எதுவும் வேண்டாம்.."

"அப்போ கொஞ்சம் அந்தப்பக்கம் நகருகிறீர்களா?.. சாருக்கு சத்து மாவு கஞ்சி கலக்கச் சொன்னாரு.. அவரைக் கவனிக்கணும்.." சற்றே எரிச்சலுடன் தன் கடமையில் கண்ணானார் கடைக்காரர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.