(Reading time: 21 - 41 minutes)

“புரியது சரயூ! என்னடா இப்படி திடீரென வந்து மன்னிப்பு கேட்குறானேனு யோசிக்கிற.  ஜெய் பேசினதை நான் கேட்டேன்.  இப்பவும் பழசையே பிடிச்சிட்டு தொங்கறதுல ஒரு பலனுமில்லை.  அதான்.....” என்று இழுத்தவன் இவள் முகத்தையே பார்த்தபடி நிற்கவும், தன் பதிலுக்காக அவன் காத்திருப்பதை உணர்ந்து,

“பரவாயில்ல கிரண்... எனக்கு எப்பவுமே அந்த மாதிரி எண்ணம் இருந்ததில்ல.  சரி! இப்போ எதுக்கு தேவையில்லாததை பேசிக்கிட்டு” புன்னகையோடு ஜெய்யும் மற்றவர்களுமிருந்த இடத்தை நோக்கி நடந்தாள்.

கிரணும் ஜெய்யும் ஒருவருக்கொருவர் மன்னிப்பு சொல்லி சேர்ந்து கொண்டனர்.  கிரணின் மாற்றம் மற்றவர்களிடத்திலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியது.   தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டது அவனின் உயர்ந்த குணத்தை காட்டியது.

அதன் பிறகு எல்லோருமுமாக சேர்ந்து செயல்பட்டு அந்த பிரியா விடை நிகழ்ச்சியை மாணவர்களுக்கே உண்டான உற்சாகமும் குதூகலுமும் கேலி, கிண்டல்களுமுமென மிகவும் சந்தோஷமாக முடித்திருந்தனர்.

அந்த நாள் எல்லோருக்கும் மறக்க முடியா நாளானது.  கிரண், கௌதம், வேதிக், ரூபின், சௌம்யா, சரயூ மற்றும் ஜெய் நல்ல நண்பர்களாக மாறியிருந்தனர்.  வீடு செல்ல மனமே இல்லாமல் விடை பெற்று சென்றனர்.

முன் தின பிரியா விடை நிகழ்ச்சி தந்த களைப்பில் அயர்ந்து தூங்கியிருந்தான் ஜெய்.

சிறிது நேரமாக அலறிக் கொண்டிருந்தது அவன் கைபேசி.  ஆழ்ந்த நித்திரையில் மூழ்கியிருந்தவனை எழுப்ப முடியாது இம்முறையும் தோற்றது.

அலறி அலறி அயர்ந்து போனது போலும் அது! அதன் பிறகு அவனை எழுப்பும் முயற்சியை கைவிட்டது.

மைத்ரீ, எதையோ அவனிடத்தில் சொல்லி ஆனந்தமாக சிரிக்கிறாள்.  என்ன அது? எதற்கு இத்தனை சந்தோஷமென கேள்விகள் மனதிலெழவும் ஜெய்யின் தூக்கம் கலைந்தது.  

குழப்பத்தில் கண் விழித்த போதும், தோழியின் சிரிப்பு அவன் உதட்டோடு ஒட்டிக்கொண்டது.

“மைதி! வர வர, உன் தொல்லை தாங்கலை! தூக்கத்தில் கூட சேட்டை செய்யுற! ஆனா எதுக்கு சிரிச்சனுதா தெரியலை” அங்கில்லாத தோழியிடம் பேசியபடி எழுந்தமர்ந்தான்.

‘என்னவா இருக்கும்?’ என்று மைத்ரீயின் சிரிப்புக்கானக் காரணத்தை ஆராய்ந்தவனின் கண்களில், கைபேசியில் மினுக்கிய சிவப்பு ஒளி பட்டது.

ஏதாவது மெஸ்ஸெஜ் வந்திருக்குமென சாதரணமாக அதை எடுத்தவனுக்கு, மைத்ரீயின் 18 தவறிய அழைப்புகள் அதிர்ச்சியாக இருந்தது.

‘என்ன விஷயாமா இருக்கும்? சும்மால்லா இத்தனை முறை கூப்பிடமாட்டாளே?’ அவசரமாக அவளை அழைத்தான்.

முதல் ரிங்கிலேயே அழைப்பை ஏற்றவள், “ஒரு அவசர ஆத்திரம்னா கூட ஃபோனை எடுக்க மாட்டியா எரும? உடனே வீட்டுக்கு வந்து, அம்மாவ என்னனு கேளுடா! நான் என்ன சொன்னாலும், யாருமே காதுல கூட போட்டுக்க மாட்டிங்கிறாங்க.  எனக்கு இது சுத்தமா பிடிக்கல!” ஆத்திரமும் ஆவேசமுமாக பேசிக்கொண்டிருந்தவளின் குரல் திடீரென கம்மவும்

‘என்ன விஷயம்னே சொல்லாம, நீளமா பேசிட்டு, எதுக்கிப்போ குரல் இப்படி மாறுது?!’

“சாரி மைதி! நல்லா தூங்கிட்டிருந்ததுல, ஃபோன் சத்தமே கேட்கலை.  எழுந்ததுமே உங்கிட்டதா பேசிட்டிருக்க. இப்போவே நான் கிளம்பி வரேன்.  நீ எதுக்கும் கவலை படாம இரு மைதி! அம்மாகிட்ட நான் பேசுற”

“சீக்கிரம் வந்திடு ஜெய்!” கெஞ்சியது அவள் வார்த்தைகள்.

‘என்ன விஷயமோ?’

“இதோ குளிச்சிட்டு கிளம்பிடுவ, மைதி!”

அடித்து பிடித்து, அடுத்த அரை மணி நேரத்தில் வடிவின் முன் அமர்ந்திருந்தான் ஜெய்.

வடிவின் கண்கள், ஜெய்யருகில் கவலையாக நின்றிருந்த மகளை ஒரு முறை கண்டுவிட்டு ஜெய்யிடமே திரும்பியது.

“என்ன ஜெய்? அவளுக்கு நீ வக்காளத்தா?” கேலிப்புன்னகையோடு வடிவு கேட்கவும், மைத்ரீயின் கவலையை மிஞ்சியது கோபம்.

கோபத்தில் ஏதோ சொல்ல வந்தவளின் கையை அழுத்தி, ‘நான் பேசுற’ என்று கண்களால் மைத்ரீயிடம் சொன்னான்.

“ஜெய், உனக்கும்... அவளுக்கு சொன்ன அதே பதில்தா.  அவங்க பதினோரு மணிக்கு வராங்க.  அங்க எடுத்து வச்சிருக்க புடவையை கட்டிக்கிட்டு அவளை ரெடியாக சொல்லு!” இதுதான் முடிவு என்பதாக இருந்தது வடிவின் உறுதியானக் குரல். 

ஜெய்யின் தோளை அழுத்தினாள் மைத்ரீ.  நிமிர்ந்து அவளின் முகத்தை பார்த்தவனுக்கு வருத்தமாக இருந்தது. 

கண்களில் கலக்கமும், முகத்தில் தவிப்புமாக, செய்வதறியாது நின்றிருந்தாள் மைத்ரீ.

தன் தோளில் பதிந்திருந்த அவளின் கையை ஆதரவாக அழுத்திவிட்டு வடிவிடம் திரும்பினான்.

“மைதிக்கு இன்னும் ரெண்டு வருஷ படிப்பிருக்கும்மா.  இப்போ இவ கல்யாணத்துக்கு என்ன அவசரம்?” என்றான் ஜெய் காட்டமாக.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.