(Reading time: 21 - 41 minutes)

“நான் சொன்னனா? இப்போவே கல்யாணம்னு நான் சொன்னனா?” என்றவர் மைத்ரீயை முறைத்தார்.

“பின்ன, இந்த ஏற்பாட்டுக்கு என்னம்மா அர்த்தம்? அதுவும் அவங்க வீட்டுக்கே வரனும்னு என்ன அவசியம்? ஆதர்ஷும் ப்ரியாவும் மீட் பண்ண மாதிரியும் இல்லாம, அவங்க வீட்டுக்கே வராங்கனு சொல்லுறது...” என்று இழுத்தான்.

“முதல் முறையா ஒருத்தவங்க பொண்ணை பார்க்க வீட்டுக்கு வரோம்னு சொல்லும்போது, அதை தட்டமுடியல.  ஆதர்ஷ் விஷயமே வேற... ப்ரியாவை நாங்க வீட்டுக்கு வந்து பார்க்குறோம்னு கேட்கவே இல்லை.  ஆனா இவங்க அப்படியில்லயே” கணவரிடம் திரும்பியவர்

“என்னங்க சும்மா பார்த்திட்டிருங்கீங்க? சொல்லுங்க.. ஆதர்ஷ் விஷயத்துல நாம என்ன நினைச்சோம்? கல்யாண பண்ணிக்க போறவங்களுக்கு பிடிச்சிருந்தா, மேல பேசலாம்னு முடிவெடுத்தோம்.  ஆனா இப்போ அப்படியில்ல.  அவங்க வீட்டுக்கு வரேனு சொல்றாங்க.  மாப்பிள்ளையை கூட நான் இன்னும் பார்க்கலை” என்றவர் மேலும் தொடர்ந்தார்

“காலைலிருந்து உங்கப்பா, ஆதர்ஷ், பிரியானு எல்லாருக்கும் சொல்லிட்ட.  இப்போ உனக்காக திருப்ப சொல்ற.  இவளுக்கு வர முதல் வரனை, வீட்டுக்கு வராதீங்கனு சொல்லி, அந்த சொல்லே நாளைக்கு இவளோட வாழ்க்கைல பிரச்சனையாகிடுமோனு பயமாயிருக்கு, ஜெய்.  நீயாவது இவளுக்கு எடுத்து சொல்லு! அவங்க வீட்டுக்கு வரப்போராங்க.. அவ்வளவுதா! வேற எதுவுமில்ல.  நீ சொன்ன மாதிரி இன்னும் ரெண்டு வருஷ படிப்பு முடியட்டும்னு சொல்லிட்டா போச்சு”

பெற்ற தாயாக வடிவிற்கு மைத்ரீ வாழ்கையின் மீதிருந்த அக்கறையை ஜெய்யால் புரிந்து கொள்ள முடிந்தது.  வடிவின் பயம் தேவையற்றது என்பது புரிந்தாலும், ஒரு தாயின் உள்ளம் தன் மகளைப் பற்றி பதறுவதும், எந்த அசம்பாவிதமும் இல்லாமல் மகளின் வாழ்கை சுமுகமாக அமைய வேண்டுமென துடிப்பதும் நன்றாக விளங்கியது.

“என்ன யோசனை ஜெய்?” வடிவின் உள்ளத்தில், இவன் மகளை சம்மதிக்க வைத்திடனும் என்ற வேண்டுதல் இருந்தது.

சற்று முன், ஃபோனில் கேட்ட மைத்ரீயின் உடைந்த குரல் நினைவுக்கு வந்தது.  இவளை எப்படி சமாளிப்பது என்ற நினைப்பே மலைப்பாக இருந்தது.

“ஒன்னுமில்லம்மா! எனக்கு கொஞ்ச டைம் கொடுங்க, நான் மைதிட்ட பேசுற” என்று சொல்லிவிட்டு மைத்ரீயை நிமிர்ந்து பார்த்தான்.

முகத்தை திருப்பிக் கொண்டு தன் அறையை நோக்கி ஓடினாள் மைத்ரீ.

“மைதி! நான் சொல்றத கேளு” என்றபடி அவள் பின்னே விரைந்தவன் கதவில் முட்டிக் கொண்டான்.

அதற்குள் அறையின் கதவை அடைத்திருந்தாள் மைத்ரீ.

எல்லோரும் பதறிப்போய் அவள் அறையின் முன் கூடினர்.

“அம்மா, நான் எத்தனை முறை சொன்ன! நீங்க கேட்டீங்களா?” என்று வடிவை கோபித்தான் ஆதர்ஷ்.

வடிவு, மைத்ரீயிடம் பெண் பார்க்க தயாராக சொன்னதிலிருந்து அப்பா, அண்ணன், அண்ணி என்று எல்லாரிடமும் தனக்காக தாயிடம் பேசி எப்படியாவது வீட்டுக்கு வரவிருப்பவர்களை தடுப்பதற்காக செயல்பட்டாள்.  ஆனால் யார் பேச்சும் வடிவிடம் எடுபடவில்லை.  இப்போது மைத்ரீ, கோபமாக சென்று கதவை அடைத்தது பொறுக்க முடியாது, தாயிடம் பாய்ந்தான் ஆதர்ஷ். 

என்னதான் பிடிவாதமாக பேசி மகளை சம்மதிக்க வைக்க போராடினாலும், இப்போது மைத்ரீயின் செயலில் மனதிலெழுந்த பயத்தோடு ஆதர்ஷின் பேச்சு வடிவை அச்சுறுத்தியது.  மகளின் நலனென்று நினைத்து அவளை தவறான முடிவை நோக்கி செல்ல தூண்டிவிட்டோமோ என்ற நினைப்பில் தொண்டை அடைத்து கொண்டு வந்தது; கண்களில் நீரேற்றம்.

“அத்தைட்ட எதுக்காக கத்துறீங்க, தர்ஷ்? மைத்ரீக்கு நல்லது செய்ய நினைச்சது தப்புனு நீங்க சொல்றது சரியில்லை.  அவள் உங்களுக்கு தங்கச்சினா, அத்தைக்கு அவங்க பெத்த பொண்ணு.  உங்களை விட அவங்களுக்கு பொண்ணு மேல அக்கறை அதிகமாவே இருக்கு.  நீங்க இதை பத்தி காலைல பேசினப்போ கூட என்ன சொன்னாங்க? முத முதல்ல வர வரனை நாமலே வேணான்னு சொல்ல வேணாம்னுதானே சொன்னாங்க... உடனே கல்யாணம்னா சொன்னாங்க? மைத்ரீதா சின்ன பொண்ணு, புரிஞ்சிக்காம ஏதோ கோபத்துல இப்படி செய்றானா... நீங்களுமா?” என்று பொரிந்து தள்ளினாள் ப்ரியா.

தனக்காக கணவனை கடிந்து கொண்ட மருமகளின் செயலில், தவித்து கொண்டிருந்த மனதில் சிறு சந்தோஷ சாரல்.  தன்னுடைய மனதையும், மைத்ரீயின் மீதான அக்கறையையும், ப்ரியா புரிந்து கொண்டதில் நிம்மதியும், இதை ஏன் மகளான மைத்ரீயால் புரிந்து கொள்ள முடியவில்லை என்ற வருத்தமும் ஒருசேர தோன்றவும் மனதின் பாரம் கூடியது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.