(Reading time: 41 - 82 minutes)

மெச்சுதலான புன்னகை பெரியவர் முகத்தில்.

“இத்தனை வயசாச்சி...இது எனக்கு தோனுனது இல்லப்பா....நான் சொல்றதுக்கெல்லாம் முறுமுறுத்தாலும் நான் சொல்றத செய்துங்களே என் பிள்ளைங்க அது பாசம் இல்லாம என்னவாம்....? அதுங்க சேர்ந்து முறுமுறுக்கிறது மட்டும்தான் இவ்ளவு நாள் என் கண்ல பட்டு இருக்குது....இன்னைக்கும் அப்படித்தான் அந்த கோபத்துலதான் கதவ வெளிய பூட்டிட்டு போய்ட்டேன்....”

சின்னதாய் சிரித்துக்கொண்டான் தேவ்.

“வயசு வித்யாசம் பார்க்காம மனசுவிட்டு பேசிக்கிறது முக்கியம்னு புரிய வச்சுடீங்க...மாப்ள டாக்டர்னு சொன்னாங்க....மனசுக்கும் வைத்தியம் பாப்பீங்களோ.....?” பூரிப்பாய் கேட்டார் பாலம்மா.

“கல்யாணத்துக்கு சம்மதிச்சதுக்கு தேங்க்ஸ்...பாட்டிமா....” அவர் கன்னத்தில் முத்தம் வைத்தான் தேவ்.

6 வருடங்களுக்கு பிறகு:

திர் பார்த்தது எதிர் பாராதது எல்லாம் நடந்து இப்பொழுது மூன்று சகோதரர்களும் மூன்று சகோதரிகளையே மணந்திருந்தனர். ஆம் ஆனந்திக்கும் ஜீவனுக்கும்கூட திருமணமாகி இருந்தது.

தேவ், கிருபா தம்பதியருக்கு 5 வயதில் ஒரு மகன். தேவ் ராணுவ மருத்துவமனையில் பணி செய்தான் எனில் கிருபா ராணுவ பள்ளியில். அதே பள்ளியில் யூகேஜியில் அவர்கள் மகன் விஷேஷ்.

இன்று காலையிலிருந்து எதோ ஒரு இனம் புரியாத படபடப்பு கிருபாவிற்கு. மூன்றாம் முறையாக ரெஸ்ட் ரூம் சென்றுவிட்டு வெளியில் வர கதவைத் திறந்தாள். அப்பொழுதுதான் கதவை கடந்து காரிடாரில் யாரோ இருவர் சென்றனர்.

திறக்க தொடங்கிய கதவின் இடைவெளியில் தெறிந்தது அவர்கள் கையிலிருந்த நீண்ட ரைபிள்ஸ்.

பள்ளிக்குள் இது இயல்பு இல்லையே. பதறியவள் மூளையில் முதலில் ஞாபகம் வந்தது மகன் விஷேஷின் முகம்.

தெய்வமே.!!!

சத்தமின்றி கதவை முழுதாக திறந்து அவர்களைப் பார்த்தாள். அவர்கள் ராணுவ வீரர்கள் இல்லை. கறுப்பு உடையும் கறுப்பு தாடியுமாக....

வகுப்புகள்  நடந்து கொண்டிருந்ததால் யாரும் காரிடாரில் இலை. ஆனால் எந்த வகுப்பிற்குள் அவர்கள் நுழைந்த நொடியும் இவளைப் போன்ற எத்தனையோ அம்மாக்களின்  விஷேஷ்...கள் ........?????

தெய்வமே அதற்கு மேல் அவளால் நினைத்துப் பார்க்க முடியவில்லை கிருபாவிற்கு. பள்ளிக்கு சைரன் உண்டு அதை அமிழ்த்தினால் உடனடி உதவி வரும்.

இதே காரிடாரின் இடது புறம் 200 மீட்டரில் சைரன் இருக்கும். அந்த தடியர்களின் கண்ணில் இவள் பட்டால் இவள் சைரைனை அடையும் முன்பாகவே இவள் உயிர் பிரிந்திருக்கும். அதற்கு அவர்கள் கையில் இருக்கும் ரைஃபிள் பொறுப்பு.

ஆனால் பொறுக்க முடியாது. நொடிகள் பிள்ளைகளின் ஆயிட்காலத்தை முடிவு செய்யும்.

சைரனை குறிவைத்து, மின்னலை மிஞ்சும் வேகத்தில் பறந்தாள் கிருபா காரிடாரில். சத்தம் கேட்டு திரும்பி பார்த்த அந்த தடியனில் ஒருவன் இவளை நோக்கி சுடத்தொடங்கினான். மற்றவன் வேகமாக அருகிலிருந்த வகுப்பைப் பார்த்து முன்னேறினான்.

நேர் காரிடாரில் இடம் வலம், வலம் இடம் என  வளைந்து வளைந்து ஓடினாள் கிருபா. ஒவ்வொரு முறையும் தோட்டாக்கள் வலபுறமும் இடபுறமும் விர்ர்ர்ர்ர்ர்ர்ர் விர்ர்ர்ர்ர்ர்ர்.

ஓடிய வேகத்தில் அவளை விட சற்று உயரத்தில் இருந்த சைரனை ஒரு குதியில் தட்டி அலறவிட்டவள் தொடர்ந்து காரிடாரில் நேராக ஓடாமல் அடுத்து இருந்த இடதுபுற வளைவில் வளைந்தாள்.

பின்னால் வந்தவன் இன்னும் ஆக்ரோஷமாக வந்தான். அவ்ளவுதான் என் உயிர் இப்ப போயிடும்....கிருபா நினைத்த நொடி விஷேஷ் மனகண்ணில். நோ...இப்ப நான் சாக கூடாது....

நிமிர்த்திய விழியில் தெரிந்தது சுவரில் கண்ணாடி கேஸில் வைக்கபட்டிருந்த அந்த இரு வாள்களும் கேடயமும். அலங்காரத்திற்குரியது என்றாலும் வெண்கலம்..... இதை வைத்து வருகிறவனை அடித்தால் மயக்கமாவது அவனுக்கு வராதா....???

மயக்கம்!!! புரிந்துவிட்டது அவளுக்கு என்ன செய்ய வேண்டுமென்று.

ருகிலிருந்த மாடிப்படியில் வேகமாக ஏறி ஓடினாள். அவன் இவளை துரத்துவது புரிந்தது.

ஐயோ மற்றொருவன் இதற்குள் எத்தனை விஷேஷ்களை கொன்று குவித்தானோ,,,???? எப்படி வலித்ததோ என் பிள்ளைகளுக்கு...??? வெறி வந்தது அவளுக்கு. மனோவேகத்தில் பறந்தாள்.

முதல் தளத்தில் முதல் அறை கெமிஸ்ட்ரி லேப். லேபிற்குள் சென்றவள் உள்ளிருந்த கெமிக்கல் அறைக்குள் சென்று கையிலெடுத்தது க்ளொரஃபாம்.

துரத்தியவன் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே லேபிற்குள் உள்வருவதை அவளால் உணர முடிந்தது. எப்பொழுது வேண்டுமானாலும் இவள் இருக்கும் கெமிக்கல் அறைக்குள் அவன் வருவான்.

அவசர அவசரமாக அருகிலிருந்த செல்ஃபில் ஏறி, லாஃப்டை அடைந்து, வாசலுக்கு நேர் மேலாக அவனுக்காக காத்திருந்தாள். மூச்சு விடவில்லை.

அவன் உள்வந்த நொடி அவன் முகத்தில் க்ளோரஃபாம் அபிஷேகம். மயங்கி சரிந்தான் அவன்.

துப்பட்டாவால் தன் மூக்கை மறைத்து கட்டிக்கொண்டு, மூச்சு விடாமல் லாஃப்டிலிருந்து கீழே குதித்தவளுக்கு அடுத்தவனின் துப்பாக்கி சத்தம் லேபிற்குள் கேட்டது. ஆக முன்னவனைத் தேடி அடுத்தவன் இங்கு வந்திருக்கிறான்.

நன்றி தெய்வமே...பிள்ளைகளை தேடி போகாமல் என்னை தேடி வந்தானே...!!!

அவன் இந்த அறைக்குள் உள்ளே வரவேண்டும். உள்ளே வந்து மூச்சு விட்டால் போதும். மயக்கம் நிச்சயம். அவன் மயக்கம் தெளிவதற்குள் உதவி வந்துவிடும்.

ஆனால் அவன் மயங்க எடுக்கும் நேரத்திற்குள் இவள் சரீரம் சல்லடையாகிவிடும். அவன் கையிலிருக்கும் ரைஃபிள் சும்மா இருக்காதே.

இப்பொழுதே இவள் வேளியே போய் தப்ப முயற்சிக்கலாம்...ஆனால் அவன் இங்கு உள்ளே வராமலே இவளை துரத்த தொடங்குவானே!!

விஷேஷ் மன கண்ணில் வந்தான்.

என் பிள்ள.....!!!

இங்கிருந்து இவள் தப்ப முயன்று, மகனை காக்க இருக்கும் ஒரே வாய்ப்பை இழக்க அவள் தயாரில்லை.

இருட்டு அறையின் ஓரத்தில் சென்று தரையில் படுத்துக்கொண்டாள். மூச்சுவிடாமல் இன்னும் எத்தனை நேரம் இவளால் இங்கு தாங்க முடியும்???

எதிர்பார்த்தபடியே வந்தவன் சுட்டுக்கொண்டேதான் வந்தான். வாசலுக்கு எதிரில் அவன் சகா விழுந்து கிடந்த விதத்தை பார்த்ததும் இவள் எதிர்பார்த்தது போல் உள்ளே நுழைந்ததும் லாஃப்டைத்தான் தோட்டாக்களால் அபிஷேகித்தான். இவள் யூகம் சரியே. லாஃப்டில்  இருந்திருந்தால் இன்நேரம் இவள் நூல் நூலாய் பிரிந்திருப்பாள்.

உள்ளே  வந்தவன் இன்னும் தடுமாறக் கூட காணோம்.

இனி வேறுவழி இல்லை.  நேரடிப் போராட்டம் தான் முடிவு.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.