(Reading time: 28 - 55 minutes)

நாளும் வேகமாக கடந்து போக, அவன் அவளை தனது மனைவியாக தாலி கட்டி சொந்தமாக்கிக்கொண்டான் நிறைந்த சுப முகூர்த்தத்தில்… பிடித்தவளை திருமணம் செய்த மகிழ்ச்சியில் அவன் அவளுக்காக தனதறையில் காத்துக்கொண்டிருந்த போது அலட்சியமாக அங்கு வந்தவள், “ரொம்ப சந்தோஷமா இருக்குறீங்க போல… ஹ்ம்ம்… இருப்பீங்க… ஏன் இருக்க மாட்டீங்க… கஷ்டப்படுறது நானும் என் குடும்பமும் தான… நீங்களும் உங்க குடும்பமும் இல்லையே…” என அவள் பேசிக்கொண்டே போக, அவன் முகத்திலோ புரியாத தன்மை நிலவியது… அதை கவனித்தவள், “எதுவும் புரியாத மாதிரி நடிக்காதீங்க… சரியா?... சீ…. இப்படி எல்லாம் இருக்க எப்படித்தான் முடியுதோ உங்களால… நல்லவங்க மாதிரி பேசி சிரிச்சிட்டு, அப்புறம் உங்க சுயரூபத்தை காட்டிட்டீங்கல்ல, வெட்கமா இல்ல உங்களுக்கு?...” என அவள் முகத்தில் கோபத்தை விட ஆதங்கம் பல மடங்கு இருக்க,

“மதிரா என்ன நடந்துச்சு… கொஞ்சம் புரியும்படி சொல்லு…” என அவனும் தன்மையாகவே கேட்க

“என்ன நடக்கலை?... அதான் எவ்வளவு கஷ்டப்படுத்தணுமோ அவ்வளவு கஷ்டம் கொடுத்துட்டீங்களே என் அப்பா அம்மாவுக்கு… ஒரு பொண்ணை பெத்து வளர்த்து ஆளாக்கி படிக்க வைச்சு ஒருத்தன் கையில பிடிச்சு கொடுக்குற தகப்பனோட வலி என்னன்னு உங்களுக்கு தெரியுமா?... கொஞ்சம் கூட நாக்கூசாம இத்தனை பவுன் நகை, இவ்வளவு பணம், சீர்வரிசை, மாப்பிள்ளைக்கு செயின், மோதிரம், கார்னு ஏன் இப்படி பொண்ணை பெத்தவங்ககிட்ட பிச்சை கேட்குறீங்க?... அசிங்கமா இல்ல உங்களுக்கே இது?... கை கால் எல்லாம் நல்லா தான இருக்கு உங்களுக்கு… அப்புறம் எதுக்கு இப்படி கல்யாணம்ன்ற பேர்ல பொண்ணை பெத்தவங்க ரத்தத்தை உறிஞ்சி எடுக்குறீங்க… போடுறதை போடுங்கன்னு சொன்னாலே பொண்ணைப் பெத்தவங்க பூரிச்சு போய் தன் சக்திக்கு மீறி தான் செய்வாங்க… ஆனா ஏன் அந்த மனசு உங்களை மாதிரி பண வெறி பிடிச்ச ஆளுங்களுக்கு வர மாட்டிக்குது?...” என அவள் பேச பேச, எந்த உணர்ச்சிகளையும் அவன் முகத்தில் காட்டவில்லை…

“என் படிப்பை காரணம் காட்டி தான் நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கலைன்னு தப்பு கணக்குப் போடாதீங்க… என் அப்பா கடன் வாங்கி கல்யாணம் நடத்துறதுல விருப்பம் இல்லாம தான் நான் அன்னைக்கு உங்ககிட்ட இந்த கல்யாணம் வேண்டான்னு சொன்னேன்… என் அத்தைப் பையனை வச்சி கல்யாணத்தை நீங்களே நிறுத்திடவும் முயற்சி செஞ்சேன்… ஆனா, எதுவுமே நான் நினைச்ச மாதிரி நடக்கலை… கடைசியில உங்க எல்லாரோட பேராசையும் தான் ஜெயிச்சிருக்கு… பணத்தையும் கொடுத்து என்னையும் கொடுத்து அப்படி உங்களோட வாழணும்னு அவசியம் எனக்கு இல்லை… அப்படி நான் உங்களோட வாழுவேன்னும் கனவுல கூட நினைச்சிடாதீங்க… என் மேல உங்க விரல் பட்டா கூட நான் செத்துப்போயிடுவேன்…” என ஆத்திரமும், ஒரு பெண்ணாய் அவளுக்கு இருக்கும் வலியையும் வார்த்தைகளால் வெளிப்படுத்தியவள், அந்த அறையை ஒட்டி இருந்த இன்னொரு சிறு அறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்டாள்…

மூடிய கதவுக்குப் பின்னால் இருந்த அவளது முகம் அழுகையில் மூழ்கியது, தனக்காக கடன் வாங்கி திருமணம் நடத்திய தகப்பனை எண்ணி… அழுந்த மூடிய கதவு போலவே அவளது இதயமும் மூடப்பட்டுவிட்டது என்ற வலியுடன் கதவையே வெறித்தான் ஆரத்விரேன்…

அவனது அம்மா அவனை வேறு வீடு பார்த்து குடிவைத்தார் அவரது கணவரின் வற்புறுத்தலுக்கு இணங்கி… அதில் தனது மருமகள் மேல் கோபம் கொண்டார் விரேனின் அம்மா… கைகாரி வந்த இரண்டு நாளிலேயே என் பிள்ளையை என்னிடம் இருந்து பிரித்துவிட்டாளே… என பொறுமினார்…

“இது இனி உன்னோட வீடு… நாம இரண்டு பேர் மட்டும் வாழப்போற வீடு… உனக்குப் பிடிச்சிருக்கா?...” என அவன் காதலோடு கேட்டதற்கு, “என் அப்பாகிட்ட இருந்து வாங்கின பணத்துல தான இந்த வீடு வந்துச்சு… அப்போ சொன்னாலும் சொல்லாட்டியும் இது என் வீடு மட்டும் தான்… அப்புறம் ஒரு சின்ன கரெக்ஷன் நீங்க சொன்ன வார்த்தையில… நீங்க தனியா, நான் தனியா மட்டுமே வாழப்போற வீடு… அது என்னைக்கும் மனசுல இருக்கட்டும்…” என வேகமாக சொல்லிவிட்டு சென்றவள், மீண்டும் திரும்பி வந்து, உங்க அம்மா அப்பா கிட்ட இருந்து இங்க கூட்டிட்டு வந்துட்டா நான் மனசு மாறி உங்களை ஏத்துப்பேன்னும், அவங்களை மன்னிச்சிடுவேன்னும் தப்பு கணக்கு போட்டிருந்தா அதை இப்பவே அழிச்சிடுங்க… இல்ல அந்த எண்ணத்துல நான் பெட்ரோல் ஊத்தி கொளுத்திடுவேன்… அப்புறம் உங்களுக்கு தான் கஷ்டம்…” என அலட்சியமாக சொல்லிவிட்டு சென்றவளையே அவன் வேதனையுடன் பார்த்தான்…

றுநாள் அலுவலகத்திற்கு செல்லும் அவசரத்தில், “மதிரா… லன்ச் ரெடியா?... எனக்கு டைம் ஆகுதுடா…” என டைனிங்க் டேபிளின் மீது அமர்ந்து உள்ளே குரல் கொடுக்க, “நான் என்ன உங்க வீட்டு வேலைக்காரியா?... நீங்க கேட்டதும் எல்லா வேலையும் செய்யுறதுக்கு… இன்னும் கொஞ்ச நேரம் ஆகும்… வெயிட் பண்ண முடிஞ்சா பண்ணுங்க… இல்ல வெளியே போய் சாப்பிடுங்க…” என அவள் சர்வ சாதாரணமாக சொல்லிவிட்டு செல்ல, அவன் காத்திருந்தான் அவள் வரும் வரை… ஒருமணி நேரத்திற்கும் மேல் தாமதப்படுத்தியவளை சின்னதாய் ஒரு கோபமான பார்வை கூட பார்க்காது மாறாக புன்னகையை படரவிட்டுக்கொண்டே அவள் சமைத்ததை உண்டான் ஆசையுடன்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.