(Reading time: 28 - 55 minutes)

மெல்ல தன்னறைக்குச் சென்று கட்டிலில் காலினை மடித்து நெற்றியை அதில் வைத்தபடி யோசித்தவளுக்கு இதுநாள் வரை அவள் செய்த தவறுகள் அனைத்துமே பட்டியலிட்டு அவள் முன்னே போட்டி போட்டுக்கொண்டே வர, அவளுக்கு அவள் மேலே கோபம் வந்தது மிக… தேடினாலும் கிடக்காத கணவனை இப்படி கண்டதையும் பேசி அவனை நோகடித்து விட்டோம் என்ற குற்ற உணர்ச்சியில் கண்ணீரை சரணடைந்தாள்… பல மணி நேரங்களுக்குப் பிறகு அழுகையினூடே நிமிர்ந்தவள் கண்ணில் கண்ணாடி தட்டுப்பட, அதைப் பார்த்ததும் அவன் சொன்ன வார்த்தைகள் நினைவு வர, அவனுடன் வாழ வேண்டும் என்ற தவிப்பு அவள் இதயமெங்கும் பரவி உயிர் வரை சென்று தாக்க, அவளால் அதற்கு மேலும் தாங்கமுடியவில்லை…

அந்நேரம் பார்த்து காலிங்க்பெல் சத்தம் கேட்க, வந்துட்டாரா?... ஆரத்… ஆரத்…. என சந்தோஷத்துடன் ஓடி வந்தவள் கால் இடறி படியில் விழ, கார் ஸ்டியரிங்கில் தலைவைத்து படுத்தவன் சட்டென பதறி மதிரா… மதிரா…. என அவன் எழ, தான் வீட்டை விட்டு வெகு தொலைவில் இருப்பது புரிந்தது அவனுக்கு… தாமதிக்காமல் அடுத்து உடனே காரை எடுத்தான்…

படியில் விழுந்தவள் சில நொடிகளிலேயே சுதாரித்து எழுந்து வலி இருந்தாலும் வேகமாக வந்து ஆரத் என கூக்குரலிட்டுக்கொண்டே கதவைத்திறந்தவள், அங்கே அவனின் அன்னை இருப்பதைப் பார்த்துவிட்டு ஏமாற்றத்துடன் வீட்டிற்குள் வர, அவர் அவளை வசைபாட தொடங்கினார்… வந்த மாமியாரை வா என்று கூட கேட்க முடியாதா என பொரிந்து கொண்டே என் மகன் எங்கே என கேட்க, அவள் தெரியாது என்றாள் அழுகையை அடக்கிக்கொண்டே…

தெரியாதா?... என் பையனை என்னடி செஞ்ச?... சதிகாரி.. வந்த சிலநாளிலேயே என் பையனை எங்கிட்ட இருந்து பிரிச்சிட்ட… சரி தூரத்துல இருந்தாலும் என் பையன் சந்தோஷமா இருக்குறான்னு நினைச்சேன்… இப்போ அதுக்கும் வழி இல்லாம செய்துட்டீயேடீ பாவி...” என குமுறியவர், அவளை நாள் முழுக்கத் திட்டிக்கொண்டே இருந்தார்… மறுநாள் இரவும் வந்துவிட அவரின் ஏச்சு பேச்சுக்கள் மட்டும் நிற்கவே இல்லை… அவளின் கண்ணீரும் தான்… “என் பையன் எங்க எங்கன்னு கேட்டுட்டிருக்கேன்… நீ பாட்டுக்கு இப்படி குத்துக்கல்லாட்டம் இருந்தா என்னடி அர்த்தம்?... என் பையன் இல்லாத வீட்டுல இனி உனக்கும் இடம் கிடையாது… போடீ வெளியே…” என அவர் அவளைப் பிடித்து தள்ள அவளை நெருங்கிய போது,

“அம்மா… என் மதிரா மேல எந்த தப்பும் இல்லை… இன்னொரு முறை அவளை திட்டக்கூட நினைச்சிடாதீங்க…” என பலத்த சத்தத்துடன் குரல் வந்த திசையைப் பார்த்த இருவரும் திகைத்து நின்றனர்… முதலில் சுதாரித்தது மதியின் மாமியார் தான்… உடல் முழுவதும் ஓய்ந்து, போட்டிருந்த உடை முழுவதும் சற்றே அழுக்காகவும் இருக்க, அவனது சிகையோ சுத்தமாய் மழித்து இருந்தது…

“என்னடா இது?... என்ன கோலம்?...” என பதறியபடி வந்த தாயிடம், “மதிராவுக்கு எதுவோ நடக்குறது போல தோணுச்சும்மா… அதான் அவளுக்கு எதுவும் ஆகக்கூடாதுன்னு வர்ற வழியில இருந்த இரண்டு மூணு கோவிலில் அங்கப்ரதக்ஷனம் செய்துட்டு, என் தலை முடியையும் அந்த பெருமாளுக்கு காணிக்கையாக்கிட்டு வந்தேன்… அவளை எதுவும் திட்டாதம்மா… அவ மேல எந்த தப்பும் இல்லை…” என அந்நேரத்தில் கூட அவளை விட்டு கொடுக்காமல் அவன் பேச, “நீ எல்லாம் திருந்தமாட்டடா… என்னமோ செய்…” என அவர் விருவிருவென்று அந்த வீட்டை விட்டு வெளியேறினார்….

மதிராவிற்கு அவனை அந்த கோலத்தில் பார்த்த அதிர்ச்சியும், அவன் வார்த்தைகளால் ஏற்பட்ட அதிர்ச்சியும் கலந்து இருக்க, தன்னையும் அறியாமல் அவள் விழிகள் நீர் கொண்டது மிக… ஏற்கனவே அழுது அழுது கரைந்தவள், இப்போது இன்னும் அழ, “இனியும் உன்னை நான் தொந்தரவு செய்ய மாட்டேன் மதிரா… உன் நிழலை கூட நான் இனி…” என சொல்லிக்கொண்டே போனவன் அவள் விழிகளைப் பார்க்க நேரிட, ஒருநிமிடம் அது சொன்ன சேதியில், அது கொண்ட வேதனையில், தன்னை நம்பாதவனாய் அவன் இருக்க, அவளின் நடுங்கும் இதழ்கள் அவன் பெயரை உச்சரிக்க முயன்று தோற்றுக்கொண்டிருந்தன…

“என்னை மன்னித்து உன்னவளாக நான் மாற அனுமதிப்பாயா?... என்னை ஏற்றுக்கொள்வாயா?...” என விழிகள் கெஞ்சலுடன் சொல்ல, அவள் இதழோ, “ஆரத்…” என விசும்பிக்கொண்டே அழைத்த போது, ஒரு கணம் கூட தாமதிக்காமல் இருகையை விரித்து கண்கள் எங்கும் காதலுடன், நெஞ்சம் எங்கும் உற்சாகத்துடன், முகம் எங்கும் பூரிப்புடன், தலை அசைத்து வா என அவன் அழைத்ததும் ஆரத்…. என்ற கேவலுடன் அவனின் மார்பில் தஞ்சம் புகுந்தாள் அவள்… “என்னை என்னை…” என அவள் இழுக்க, “ஷ்… வேண்டாம்டா மதிரா… விடு…. அழாத…” என சொல்ல சொல்லக்கேட்காமல் அவள் அழுது கொண்டே இருக்க, “இப்ப நீ அழறதை நிறுத்தலை நான் உன்னை…” என அவனை சொல்லவிடாமல், அவன் முகம் எங்கும் முத்தமழை பொழிந்தாள் அவள்… தன்னவளின் முத்தம் தந்த மயக்கத்தில் இருந்தவன் அவளை இறுக்கமாக கட்டி அணைக்க, அவன் முகம் பார்த்து ஏங்கி நின்றாள் அவள்… சட்டென அவள் இதழை சிறை செய்தவன், மனமே இல்லாமல் அவளை விடுவிக்க, மூடியிருந்த இமைகளை திறந்தவளின் விழிகள், அவன் மேல் கொண்ட காதலை சொல்ல, அவளின் அதரங்களோ என் ஆரத்…. என்றது மெல்ல..

This is entry #81 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest 

{kunena_discuss:926}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.