(Reading time: 28 - 55 minutes)

கார் கீயை எடுத்து வாசலுக்கு வந்தவன், திரும்பி, “என்னதான் கோபம் இருந்தாலும் பிடிக்காத புருஷனா இருந்தாலும், என்னை பட்டினி போடலையே மதிரா நீ… சமைச்சு எனக்குப் பரிமாற தான செஞ்ச… உன் மனசுல அப்போ ஒரு ஓரத்துலயாவது நான் இருக்கேன் தான?..” என அவன் கண்ணடித்துக்கூற, “மண்ணாங்கட்டி… நினைப்பு தான் பொழப்பை கெடுக்குமாம்… போய் வேலையைப் பாருங்க…” என்றவளிடம், “ஹ்ம்ம்… மதிரா இப்போ சொன்னீயே அதென்னவோ உண்மைதான்… உன் நினைப்பு என் மனசை மட்டுமில்ல, என் வேலையையும் கொஞ்சம்…” என இழுக்க, “நான்சென்ஸ்…” என்றபடி அங்கிருந்து அகன்றாள் அவள்…

அடுத்த வாரத்தில் ஒருநாள், அவன் வேலைக்குச் சென்ற நேரத்தில், காலிங்க்பெல் சத்தம் கேட்க, யார் என்று போய் பார்த்தபோது, “விரேன் தம்பி?...” என ஒரு வயதான பெண்மணி கேட்க, “ஆமா அவர் வீடு தான்… நீங்க?...” என அவள் விசாரிக்க, “என் பேரு வசந்தி… பக்கத்துல இருக்குற ஹோமில் இருந்து வரேன்… நேத்து தம்பி அங்க வந்தப்போ இந்த பர்சை விட்டுட்டு வந்துடுச்சு… பர்சில் இந்த அட்ரஸ் இருந்துச்சு… அதான் கொடுக்கலாம் என்று வந்தேன்…” என அவர் சொன்னதும், அவர் கையில் வைத்திருந்த பர்சை பார்த்தவள் அது அவன் உபயோகிக்கும் பர்ஸ் தான் என உறுதி செய்து கொண்டாள் அதிலிருந்த எஸ்.எம் என்ற எழுத்துக்களுடன் ஹார்ட்டினும் பக்கத்தில் இருந்ததை வைத்து… ஏனெனில் ஒருமுறை இந்த பர்ஸில் இருக்கும் எஸ்.எம் என்ற எழுத்துக்கு அர்த்தம் என்ன தெரியுமா?... என அவன் கேட்ட போது அவள் கண்டு கொள்ளாமல் இருந்ததையும் பெரிது பண்ணாமல், என்னொட ஸ்ரீமதிரா ன்னு அர்த்தம்… என்று சொன்ன போது, தனக்கு எதுவும் கேட்கவில்லை… என சொல்லி சிரித்து சென்ற நினைவுகள் வந்தது அவளுக்கு…

“உள்ளே வாங்க…” என அவள் அழைத்ததும், “பரவாயில்லைம்மா.. உன்னைப் பத்தி கூட தம்பி நிறைய சொல்லிருக்கு… என் மதிரா மாதிரி வருமா?... ன்னு தலை மேல தூக்கி வச்சு கொண்டாடும்…” என சிரித்தவர், “உண்மையிலேயே நீ கிடைச்சதுக்கு அதிர்ஷ்டம் பண்ணியிருக்கேன்னு தம்பி சொல்லும்… ஆனா, தம்பி மாதிரி ஒரு புருஷன் கிடைச்சதுக்கு நிஜமா நீ தான் கண்ணு அதிர்ஷ்டம் பண்ணியிருக்கணும்…” என்றவர், தனக்கும் விரேன் வயதில் ஒரு மகன் இருப்பதாகவும், இப்போது அவனின் புண்ணியத்தால் இந்த ஹோமில் இருப்பதாகவும் சொன்னவர், அஞ்சு வருஷமா நான் பெத்த பிள்ளை என்னை எட்டி வந்து கூட பார்க்கலை…”

“ஆனா வாரம் தவறாம விரேன் தம்பி எங்க எல்லாரையும் பார்க்க ஹோமுக்கு வந்துடும், எங்களுக்கு வேண்டிய உதவிகளை இப்ப வர செய்யுது தம்பி… கல்யாணம்னு பத்திரிக்கை கொடுக்க வந்தப்போ கூட அது முகத்துல கொள்ளை சந்தோஷம்… அப்ப என் வீட்டுக்கு வந்த மாதிரி மருமக, தம்பி வீட்டுக்கும் வந்திட கூடாதுன்னு நான் கவலைப்பட்டேன்… ஆனா கல்யாணத்தப்போ உன்னைப் பார்த்ததும் தம்பி வாழ்க்கை நிச்சயம் அப்படி இருக்காதுன்னு நான் தெரிஞ்சிகிட்டேன்… அதுபோக, தம்பி அங்கே வரும் போது உன்னைப் பத்தி சொன்னதை எல்லாம் வச்சி பார்த்தப்போ மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு… ஆனா உன்னை இங்க இப்ப பார்த்ததும், ரொம்பவே நிறைவா இருக்கும்மா… நான் வரேன்…” என்றவர் சென்றதும், அவளுக்கு அவனிடம் இப்படி கூட நல்ல குணங்கள் இருக்கிறதா என்ற வியப்பு வந்திருந்தது…

ஆனால் அதெல்லாமே, அவன் வீட்டுக்கு வரும் வரை தான்… அவன் வந்ததும், “நான் கூட உங்களை என்னவோ நினைச்சேன்… ஆனா இப்போதான் புரியுது உங்களைப் பத்தி ரொம்ப நல்லா…” என அவள் சொன்னதும்,

“என்ன மதிரா சொல்லுற?... என்னைப் பத்தி என்ன நினைச்ச?..” என அவன் கனிவாக கேட்க

“இந்தாங்க உங்க பர்ஸ்…” என அவனின் முன் அவள் நீட்ட, “ஹேய் இது எப்படி உன் கைக்கு கிடைச்சது?... இதைத் தான் காணும்னு நான் தேடிட்டிருந்தேன்…” என அவனும் அதை வாங்க கை நீட்ட, அவனின் கையில் பர்ஸை திணித்தவள், “வாரே வா… என்ன ஒரு நடிப்பு… நீங்களே ஹோமில் இருக்குற வசந்தி அம்மா கிட்ட கொடுத்துட்டு, இங்க எங்கிட்ட வந்து உங்க அருமை பெருமை எல்லாம் சொல்லி என் மனசை மாத்த ஸ்கிரிப்ட் எல்லாம் எழுதியும் கொடுத்துட்டு ஒன்னுமே தெரியாத மாதிரி நடிச்சா நான் நம்பிடுவேன்னு நினைக்குறீங்களா?... நெவர்… சும்மா இருந்தா கூட நான் பேசாம இருப்பேன்… ஆனா இப்படி எல்லாம் நீங்க கேவலமா நடந்துக்கும்போது தான் உங்க மேல இருக்குற வெறுப்பு கூடிட்டே போகுது…. சே…” என வாய்க்கு வந்ததை திட்டி விட்டு அவள் போக, அவனோ, அவளை ஒரு பெருமூச்சுடன் பார்த்தான்…

வன் அலுவலகத்தில் ஒரு பிசினெஸ் பார்ட்டி அரேஞ்ச் செய்திருப்பதாகவும், அதற்கு நீயும் வர வேண்டும் எனவும் அவன் கூற, முதலில் மறுத்தாலும் பின்னர் சம்மதித்தாள்… ஏனெனில் வீட்டிற்குள் தான் அவள் அவன் மேல் எரிந்து விழுவாளே தவிர, வெளியிடங்களில் அவனது மனைவி போல் நடந்து கொள்வதற்கு அவள் தயங்கியதில்லை… அதை மனதில் வைத்தே அவனும் அழைக்க, அவளும் சரி என்று தயாராக சென்றாள்…

ஓரிரண்டு நகைகள், மல்லிகைப்பூ, பட்டுப்புடவை என அசத்தலாக வந்தவளின் மேல் இருந்து கண்களை எடுக்க அவன் திணறித்தான் போனான்… “ஹலோ… போகலாமா?...” என அவள் சொடக்கு போட்டு, அவனை நனவுலகுக்கு வர செய்ய, “மதிரா… எப்பவும் நீ அழகுதான்… ஆனா இன்னைக்கு செம அழகா இருக்குற…” என அவன் சொன்னதும், “பின்ன என் அப்பா போட்ட நகை… அவர் எனக்கு சீதனமா கொடுத்த பட்டு புடவை… அப்போ எல்லாம் சேர்ந்து அழகா தான தெரியும்…” என குத்தலாக சொல்லிவிட்டு முன்னே நடக்க, அவனுக்கோ, உள்ளம் வலித்தது…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.