(Reading time: 28 - 55 minutes)

திரா…” என தாபம் கொண்ட குரலில் அவன் அழைக்க, சற்றே தடுமாறியவள், அவன் கையை சட்டென உதறிவிட்டு, “அன்னைக்கே சொன்னேன் தான என்னை தொட முயற்சி செய்யாதீங்கன்னு…” என வீணான கோபத்தை அவள் வேண்டுமென்றே உருவாக்கி கூற,

“இல்லடா மதிரா… நான்…” என சொல்லியவாறே அவளின் இருகை விரல்களையும் சேர்த்து பிடித்தவன், “ஒரு விஷ் மட்டும் செஞ்சிடுடா… திட்டிகிட்டேன்னாலும் பரவாயில்லை… ப்ளீஸ்…” என கெஞ்ச, அவனின் கெஞ்சுதலில் அவன் பக்கம் சட்டென சாய இருந்த மனதை இழுத்துப்பிடித்து, “தொட்டா செத்துப்போயிடுவேன்னு சொன்னதை கூட மறந்துட்டு இப்போ என்னை தொடுறீங்கன்னா உங்களுக்கு என் மனசு முக்கியமில்லை… என் உடம்பு தான முக்கியமா படுது?... சீ…. இவ்வளவு கேவலமானவனா நீங்க?... பணத்தாசை தான் உங்களை பிடிச்சு ஆட்டுதுன்னா, இப்போ சீ சொல்லவே வாய் கூசுது…” என அவள் முகம் திருப்பிக்கொண்டு,

“உங்களையும் நம்பி என்னைப் பெத்தவங்க உங்களுக்கு கட்டி வச்சிருக்காங்க பாருங்க… எல்லாம் என் தலை எழுத்து… விருப்பம் இல்லைன்னு சொல்லுறேன்… ஆனாலும் உங்களுக்கு உங்க வெறி தான முக்கியமா படுது… ஒன்னு செய்யுங்க… என்னை கொன்னுட்டு உங்க வெறியை தணிச்சிக்கோங்க… வாங்க…” என சொல்லியது தான் தாமதம் என்பது போல் அவளைப் பிடித்திருந்த கையை நெருப்பு பட்டது போல் உதறிவிட்டு, அவளை வெறித்தான் முகமெங்கும் வேதனை ரேகைகளோடு…

“என்ன மதிரா சொன்ன?... சத்தியமா நீ இப்படி ஒரு வார்த்தையை சொல்லுவன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை… உங்கூட இதே வீட்டுல இத்தனை நாள் இருந்திருக்கேன்… ஒருநாள் ஒரு பொழுது உங்கிட்ட தப்பா ஒரு வார்த்தை பார்த்திருப்பனா, ஒரு வார்த்தை பேசிருப்பேனா?... நீ எங்கிட்ட சண்டை போட்டு மூஞ்சியை தூக்கி வச்சிகிட்டாலும் உன்னை குழந்தையா தாண்டீ நான் நினைச்சேன்… உன் கண்ணுல இப்போ கொஞ்ச நாளா நான் எனக்கான தேடலை உணர்ந்தேண்டீ… அதனால தான் இன்னைக்கு உன் விரல் பிடிச்சேன் நீ ஏங்கி போயிடக்கூடாதுன்னு…. எனக்கான உன்னோட காதல் நீ தராவிட்டாலும், உனக்கான என்னோட காதல் நீ கேட்குறதுக்கு முன்னாடியே உன் விழி பார்த்து கொடுத்திடணும்னு ஏங்கி தவிக்கிறேண்டீ ஒவ்வொரு செகண்டும்… ஆனா உனக்கு அது புரியாது… உனக்கு என்னையே புரியலையே… அப்புறம் எப்படிடா என் காதல் மட்டும் புரியும்… இப்போ கூட நான் சொல்லுற எந்த வார்த்தையும் உன்னை காயப்படுத்திடக்கூடாதுன்னு பார்த்து பார்த்து பேசுறேண்டீ… என் மதிராக்காக… என் மதிராக்காக மட்டும்…” என சொல்லிவிட்டு அவன் நகன்ற போது,

அவள் விழிகள் கலங்கி இருந்தது… கலங்கிய அந்த விழிகள் அவனிடம் பேச முடியாது திணறி நிற்க, அவளருகே வந்தவன், “வாழணும்ன்ற தவிப்பு உன் கண்ணுல என்னால பார்க்க முடியுது மதிரா… உன் மனசுல போட்டு உன்னை நீயே கஷ்டப்படுத்திட்டிருக்குற விஷயத்தை தூக்கி வச்சிட்டு பாரு உன்னை கண்ணாடியில… அப்போ உணர்ந்துப்ப நீ எவ்வளவு ஆசையோடு என்னோட வாழ இருக்குறேன்னு….” என்றவன் விருட்டென்று காரை எடுத்துக்கொண்டு பறந்துவிட்டான்…

அவன் பேசின வார்த்தைகளே, மீண்டும் மீண்டும் அவள் காதுகளில் ரீங்காரமிட, அவள் அதை உதறி தள்ளிவிட்டு எழுந்தாள்… அப்போது அவனது செல்போன் ஒலிக்க, டிஸ்ப்ளேயில் அவளின் தந்தை எண் வந்தது…

அப்பா எதுக்கு இவருக்கு பண்ணுறார்?... என்ற தயக்கத்துடனே எடுத்து அதை காதினில் வைத்தவள், “மாப்பிள்ளை ஒரு சந்தோஷமான விஷயம்… நீங்க முதல் போட்டு ஆரம்பிச்சு வச்ச என்னோட புது பிசினெஸ்க்கு ஒரு பெரிய ஆர்டர் கிடைச்சிருக்கு… அதுக்கு கூட நீங்க தான் காரணம்னு மேனேஜர் சொன்னார் எங்கிட்ட… உங்களுக்கு எப்படி நன்றி சொல்லுறதுன்னே எனக்கு தெரியலை மாப்பிள்ளை… எத்தனை உதவி செஞ்சிருக்கீங்க… காலம் முழுக்க இதை நான் மறக்க மாட்டேன் மாப்பிள்ளை… உங்க வீட்டை சேர்ந்தவங்க வரதட்சணை கேட்டது தெரிஞ்சு அவங்க கேட்ட அத்தனைக்கும் சேர்த்து பணத்தை என் கையில திணிச்சு என் வீட்டுல உள்ளவங்க உங்ககிட்ட வரதட்சனை கேட்டதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்னு சொல்லி என் மதிராவுக்கு எல்லாமே இனி நான் சம்பாதிச்ச காசுல தான் வாங்குவேன்னு வைராக்கியத்தோட, அவ உங்க வீட்டுக்கு வரும்போது, நீங்க கொடுத்த பணத்துல வந்த நகையோடும், புடவையோடும் தான் வந்தா…”

“எனக்கு இப்போ நினைச்சாலும் பிரமிப்பா இருக்கு… இதை என் பொண்ணுகிட்ட சொல்லுறேன்னு நான் சொன்னப்போ கூட சொல்லக்கூடாதுன்னு சொல்லிட்டீங்க… அப்பா கஷ்டப்பட்டு அப்படி நீங்க எனக்கு கல்யாணம் பண்ணனுமான்னு என் பொண்ணு எங்கிட்ட கேட்டா முன்னாடி... அதுக்காகவாது முக்கியமா மதிகிட்ட சொல்லிடணும்னு நான் நினைச்சேன் உங்க குணத்தைப் பத்தி… ஆனா நீங்க தான் சொல்ல விடல…” என்றவர் பேசிக்கொண்டிருக்கையில், “என்னங்க, இங்க வாங்க…” என்ற மதியின் அம்மா குரல் கேட்க, மதியின் அப்பா, “சரி மாப்பிள்ளை அப்புறம் பேசுறேன்… உங்க அத்தை கூப்பிடுறா… இந்த வாரம் வீட்டுக்கு வாங்க நீங்களும், மதியும்…” என்ற அன்பான வேண்டுகோளோடு அவர் போனை வைக்க, இங்கே மதிராவின் நிலையை கேட்கவே வேண்டாம்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.