(Reading time: 44 - 87 minutes)

னைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த குட்டி துருவ், ருணதியின் அருகே வந்து, “அம்மா… நம்ம அப்பா தான் திகாவோட அப்பாவுமா?... ஐ ஜாலி… இல்ல அம்மா….” என கேட்டு கைத்தட்டியவன்,

அவளிடம், “ம்மா… கொஞ்ச நேரம் முன்னாடி என்னை அவங்க தான தூக்கி முத்தம் கொடுத்தாங்க… அப்போ அவங்க யாரு எனக்கு?...” என கன்யாவை கை காட்டி அவன் கேட்க, இப்போது அதிர்வது ருணதியின் முறையானது….

“துருவ் கண்ணா… ஜித் அப்பா, நதிகா, கோகி பாட்டி, விஜய் சித்தப்பா, கேசவன் தாத்தா, வைஜெயந்தி பாட்டி, அப்புறம் கன்யா…. இனி எல்லாரும் ஒரே வீட்டுல தான் இருப்பீங்க… உனக்கு ஹேப்பி தானே?...” என்று கேட்க

சற்று நேரம் யோசித்தவன், “ஹேப்பி தான்ம்மா… ஆனா உன்னை சொல்லலையே நீ….” என சொல்ல, வார்த்தைகளை தொண்டைக்குள் விழுங்கியவள், அசையாது நின்றாள்…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

சகியின் "சதி என்று சரணடைந்தேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

அவளின் நிலையைக் கண்ட கன்யா, துருவனின் அருகில் வந்து, “துருவ் கண்ணா, நான் தான் உன்னைப் பெத்த அம்மா, அம்மாவுக்கு கொஞ்சம் வேலை இருந்ததால நான் உன்னை ருணதிகிட்ட கொடுத்து வளர்க்க சொல்லிட்டு போயிட்டேன்… அப்பா கொஞ்சம் வேலை முடிஞ்சதும் உன்னை பார்க்க வந்துட்டார்… அம்மாக்கு வேலை இப்போதான் முடிஞ்சது… அதான் அம்மா உன்னை லேட்டா பார்க்க வந்துட்டேன்… சாரி கண்ணா… அம்மாகிட்ட வருவீயா நீ?...” என கேட்க அவன் ருணதியின் முந்தானையின் பின் ஒளிந்து கொண்டான்…

“இல்ல நான் வரமாட்டேன்… இதான் என் அம்மா…..” என ருணதியின் முந்தானையைப் பிடித்து சொல்லியவன், ருணதியிடம், “நான் உன்னை விட்டு போகமாட்டேன்ம்மா… அப்பா வேண்டாம்… அப்பாவ போக சொல்லு… எனக்கு நீ மட்டும் போதும்மா….” என அழ ஆரம்பிக்க,

அவனின் முன் மண்டியிட்டவள், “துருவ் கண்ணா, அம்மா சொன்னா கேட்பதான?...” என கலங்கிய விழிகளோடு கேட்க,

“கேட்பேன்ம்மா… ஆனா நீ மட்டும் அழாதம்மா… நீ அழுதா எனக்கும் அழுகை வந்துடும்மா… நானும் அழுவேன்….” என அவளின் நெஞ்சில் அவன் சாய்ந்து கொள்ள, மகனின் முதுகை ஆதரவாக வருடியவள், அவனின் முகம் நிமிர்த்தி, தன் முந்தானை கொண்டு அவன் முகம் துடைத்து விட்டவள், அவனது தலை கோதி, “கன்யா சொன்னது உண்மைதான் கண்ணா… அவங்க தான் உன் அம்மா… உன்னை வளர்க்க தான் எங்கிட்ட கொடுத்தாங்க… நானும் வளர்த்தேன்… இப்போ அவங்க வந்து கேட்கும்போது நான் உன்னை கொடுக்கலைன்னா என்னை திட்டுவாங்க தான… உன்னை வளர்த்த நானே உன்னை வச்சிகிட்டா, உன்னைப் பெத்த அம்மா மனசு கஷ்டப்படாதா?... பாவம் தான அவங்க?.. இத்தனை நாள் உன்னைப் பிரிஞ்சிருந்தாங்கள்ள… இப்பவும் நீ அவங்க கிட்ட போக மாட்டேன்னு அடம்பிடிச்சா அவங்க அழுவாங்கள்ள… அத பார்த்துட்டு பேசாம இருந்தா தப்பில்லையா கண்ணா?... என் துருவ் கண்ணா புரிஞ்சி நடந்துப்பான் தானே… அவனை அப்படி தான இந்த ருணதி அம்மா வளர்த்திருக்கேன்…???...” என அவள் கேள்வியோடு அவனிடம் கேட்க,

“ஆமா….” என்ற பாவனையில் தலை அசைத்தவன், “ம்ம்ம்ம்ம்மா……….” என அவளின் கழுத்தைக் கட்டிக்கொண்டு, முகம் நிமிர்த்தி அவளைப் பார்க்க, அவள் கண்ணீர் கண்களை விட்டு வெளியே வந்திருந்தது…

“நீ அழாதம்மா… ப்ளீஸ்ம்மா… உன்னை யாரும் தப்பா சொல்ல நான் விடமாட்டேன்… நான் கன்யா அம்மாகூட போறேன்… ஆனா நீ மட்டும் அழாதம்மா… நானும் அழுதிடுவேன்…” என்றவனுக்கு அதற்கு மேல் ஏக்கம் மட்டுமே வர, அவளை யாருக்கும் தர மறுப்பவன் போல் அவளைக் கட்டிக்கொண்டு அவள் கன்னத்தினில் முத்தம் கொடுத்தான் அழுத்தமாக…

பின் மெல்ல அவளிடமிருந்து விலகியவன், கன்யாவை நோக்கி கைகளை நீட்ட, ஒரு கணம் கூட தாமதிக்காமல் குட்டி துருவனின் கைப்பிடித்து அவனை தூக்கி கொண்டாள் கன்யா…

பின்னர் பார்த்துக்கொண்டிருந்த அனைவரும் கண்களை துடைத்துக்கொண்டு உள்ளே சென்று பேசிக்கொண்டிருக்க, தனியாக அங்கிருந்த நீர்வீழ்ச்சியின் அருகே நின்றிருந்தான் மகத் அமைதியாக…

“இங்க என்ன பண்ணுறீங்க?...” என்ற தன்னவளின் குரலில் திரும்பியவன், முகத்தில் இருந்த கவலைக்கோடுகளை அகற்றிவிட்டு திரும்ப முனைவதற்குள், அவன் முன் வந்து விட்டிருந்தாள் அவள்…

“என்னாச்சு?.. உங்க முகமே சரி இல்லை…”

“எதுமில்லடா….” என அவன் ஒரு புன்னகையோடு சொல்லிவிட்டு அவளின் முகத்தினை ஆராய்ந்தான்…

கவலைகள் மொத்தமாக சுமந்திருந்த அந்த அழகு முகம் தன்னை சமாதானப்படுத்த தைரியத்துடன் குரலில் சோர்வில்லாது காட்டிக்கொண்டிருப்பதையும் அவன் அறிந்து கொள்ள,

“கிருஷ்ணா…..” என்றழைத்தான்…

அவனின் அந்த அழைப்பில் தான் என்ன இருந்ததோ, அவனிடமிருந்து பார்வையை திருப்பிக்கொண்டவள், “நதிகா எங்க போயிட போறா சகி?... உங்களுக்கு எப்ப எல்லாம் பார்க்கணும்னு தோணுதோ போய் உங்க பொண்ணை பார்த்துட்டு வாங்க… அவ்வளவுதான?...” என்றபடி திரும்பியவள், அவன் பார்வை அவள் முகத்தினில் இருப்பதை பார்த்துவிட்டு,

“அவ்வளவு தானா கிருஷ்ணா?...” என்று கேட்க, சட்டென முகம் மறைத்து அழ ஆரம்பித்தாள் அவள்…

“துருவ் என் தங்கச்சி பையன்ற உணர்வு கூட எனக்கில்லை… உங்களை நான் அவன் உருவத்துல தான் பார்த்தேன்… என் துருவ் நீங்க… என்னோட துருவ்… அப்படிதான் வளர்த்தேன்… இப்போ மொத்தமா தூக்கி கொடுத்துட்டேன்னு நினைச்சா தாங்க முடியலை சகி… தாங்க முடியலை… சின்ன பையன் அவன் மனசு எப்படி எல்லாம் கஷ்டப்பட்டிருக்கும்னு நினைச்சாலே வலிக்குது சகி…” என அவள் சொன்னதும்,

“இங்க பாரு கிருஷ்ணா…” என அழைத்து, “நீ சொல்லுறதை என்னால புரிஞ்சிக்க முடியுதுடா… உன்னைப் பிரிஞ்சிட்டேன்னு நதிகா எங்கூட இல்லாத நேரத்துல மட்டும் தான் உணர்ந்திருக்கேன்னு சொன்னா உன்னால நம்ப முடியுமா?... ஆனா அது தான் நிஜம்… நீ எப்படி துருவ் கிட்ட என்னைப் பார்த்தீயோ, அதே போல நதிகா கிட்ட நான் உன்னை தான் பார்த்தேன்… நாம பிரிஞ்சிருந்த காலத்துல நம்மளைப் பார்த்துக்க கடவுள் கொடுத்த வரப்பிரசாதங்கள் தான் அவங்க… இப்போ அவங்க வேலை முடிஞ்சது… நம்மளை சேர்த்து வச்சிட்டாங்க… இப்போ அந்த பிரசாதங்கள் சேர வேண்டியவங்க கைக்கு சேரத்தான வேணும்?... அதை நாமளே வச்சிக்கணும்னு நினைக்குறதுல எந்த நியாயமும் இல்லடா… நம்ம சந்தோஷத்தை திருப்பி கொடுத்தவங்க கிட்ட நாம இப்படி அழுகையும் கண்ணீரும் பரிசா கொடுத்தா நல்லா இருக்குமாடா?... நீ என்னை தேற்ற தான் சமாதானம் சொன்ன… அதே தான் இப்போ நான் நமக்கு சேர்த்து சொல்லுறேன்… அவங்க நம்மளை விட்டு எங்கயும் போகமாட்டாங்கடா… நமக்கு பார்க்கணும்னு தோணும்போது நாம போய் பார்த்துட்டு வரலாம்… அதுவும் எப்பவாச்சும் மட்டுமே இருக்கட்டும்… நாம ஒருவேளை அடிக்கடி போனா அவங்க நாம வர்ற அந்த நாளை எதிர்பார்க்க ஆரம்பிச்சிடுவாங்க… அதுவே அவங்க மனசுல ஒரு பாரத்தை ஏற்றிடும்… அதனால நாம போகாமலும் இருக்கக்கூடாது… அதே நேரத்துல போயிட்டேவும் இருக்கக்கூடாது… கொஞ்ச நாள் வரைக்கும்… அவங்க வளர்ந்து பெரியவங்களா ஆகுற வரைக்கும்… விவரம் நல்லா தெரியர வரைக்கும்…” என அவன் நிதானமாக எடுத்து சொல்ல, அவள் அழுத விழிகளோடு அவனை ஏறிட்டாள்…

“உனக்கு நான் சொன்னது புரிஞ்சதாடா?...” எனக் கேட்க, மெல்ல அவனின் அருகே வந்தவள், அவன் நெஞ்சில் மெதுவாக சாய்ந்து கொண்டு, “என் பாரத்தை நான் இங்க இறக்கி வச்சிட்டேன்… நீங்க வைக்கலை???...” என மெதுவாக முகம் நிமிர்த்தி அவன் விழி பார்க்க, அவள் விழிகளுக்குள் விழுந்தது அவனின் ஒற்றை கண்ணீர்த்துளி… அது சொல்லியது அவளுக்கு ஓராயிரம் கதைகளும், ஜென்ம ஜென்மமாய் அவளுக்காக காத்திருக்கும் அவனது தழுவலும்…

இன்னமும் கண்ணியம் காக்கும் தன்னவனை நினைத்து பூரித்தவள், “சரியான அழுத்தக்காரன் சகி நீங்க… இப்போ கூட இமோஷனல் ஃபீலிங்கில் என்னை கட்டிக்க மனசு என்ன ஐடியா கூட இல்ல?... அப்படித்தான?...” என அவளது வழக்கத்தொனியில் ஒரு புருவம் உயர்த்தி இடுப்பில் இரு கைவைத்து கேட்க, அவன் தானாக சிரித்துவிட்டிருந்தான்….

அவனின் சிரிப்பில் மனம் குளிர்ந்தவள், அவனை மேலும் குளிர வைக்க, அவனை சீண்ட விருப்பம் கொண்டு, “இங்க நான் கடுப்புல இருக்குறேன்… நீங்க சிரிக்குறீங்களா?...” என அவனை முறைத்தாள் அவள்…

“இல்லடா… அப்படி இல்லை…” என்றவனுக்கு இன்னமும் இதழில் புன்னகை ஒட்டிக்கொண்டிருக்க,

“உங்களை நான் சும்மாவிடமாட்டேன்…” என்றாள் அவள் கோபத்துடன்…

“கிருஷ்ணா… என்னடா இது… நான் சும்மாதான் சிரிச்சேன்…” என அவன் அவளை சமாதானம் செய்ய முயல,

“அப்படியா?....” என்றவள், சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, அவனின் தோளின் மேல் கைபோட்டு, அவனின் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் ஒன்றை கொடுத்துவிட்டு அவன் அப்படியே நிற்பதை பார்த்துவிட்டு,

“இதுவும் சும்மாதான் செஞ்சேன்…..” என்றபடி சிரிக்க, அவனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை….

“எப்படி?...” என அவள் தன் ஒற்றை புருவத்தை உயர்த்தி ஒய்யாரமாக கேட்க, அவன் அதில் வீழ்ந்தே போனான் மொத்தமாக….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.