(Reading time: 44 - 87 minutes)

னக்கு என்ன அண்ணா குறைச்சல்… கண்ணுக்கு நிறைஞ்ச புருஷன், தோளுக்கு மேல வளர்ந்த என் பிள்ளை குரு… இது போதும் அண்ணா எனக்கு… நான் சந்தோஷமா இருப்பேன்…” என சொல்ல,

“நீ சொல்லுற வார்த்தை உண்மைன்னா, அவளுக்கு செஞ்சு கொடுத்த சத்தியத்தை உதறி தள்ளிட்டு என்னோட அருளோட வாழப்பாரு…” என மாதவன் உறுதியாய் சொல்ல

“அண்ணா……………..” என துடித்தேப் போனார் காவேரி…

“என் வயித்துல சுமக்கலைன்னாலும் குரு என் பிள்ளை தாண்ணா… என் ஆனந்தோட மகன்… அவன் மேல செஞ்ச சத்தியத்தை மீற என்னால முடியாது அண்ணா… இது தான் என்னோட முடிவு…. எனக்கு இந்த வாழ்க்கை போதும்… இதுவே கடவுள் எனக்கு கொடுத்த மிகப்பெரிய வரம்னு தான் நான் சொல்லுவேன்…” என அதோடு அந்த பேச்சு வார்த்தைக்கு முடிவு கட்டினார் காவேரி…

மாதவனுக்குத்தான் மனசே சரி இல்லாது போனது… தானே காவேரியின் வாழ்க்கையை கெடுத்துவிட்டோமோ என்ற குற்ற உணர்ச்சியே அவரை வருடக்கணக்காக கொல்லாது கொன்று கொண்டிருந்த நேரத்தில், காவேரி வீட்டை விட்டு வெளியேற்றப்பட வேண்டும் என்ற குருமூர்த்தியின் வார்த்தையைப் பிடித்துக்கொண்டு காவேரியை தன் சொந்த நிலத்தில் தங்க வைத்தார் மாதவன்…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

ஜோஷினியின் "ஹேய்... சண்டக்காரா" - இது ஒரு காதல் சடுகுடு...

படிக்க தவறாதீர்கள்...

காவேரி அங்கே தனியாக இருப்பதை பார்த்து மனம் நொந்த மாதவன், வாழ வேண்டிய வயதில் அவள் வாழ்க்கை இப்படி ஆகிப்போனதே என்று வருந்திக்கொண்டிருந்த தருணத்தில் அவரின் மகளும், மருமகனும் விபத்தில் இறந்துவிட, எல்லாம் காவேரியை இந்த சிக்கலில் கொண்டு வந்து நிறுத்திய பாவம் தான் என்றெண்ணிய அவர், தன் பேரப்பிள்ளையை காவேரியிடம் ஒப்படைத்துவிட்டு, அவனுக்கென்று எந்த வித சொத்துக்களையும் எழுதாது, அனைத்தையும் காவேரியின் பெயரில் எழுதி வைத்துவிட்டு, அந்த நிலத்தையும், அருள் இல்லம் என்ற பெயரில் பத்திரமாக காவேரியின் கைகளில் கொடுத்துவிட்டு, தனது பேரக்குழந்தைக்கு மகத்ரு சகி என்ற பெயரையும், தன் கழுத்தில் கிடந்த அந்த சங்கிலியினை கழட்டி, அவனுக்கென்று ஒரு வயது வரும் போது இதை அவனிடம் கொடு எனவும் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றவர், நேரே பார்க்கச் சென்றது சதாசிவத்தையும், பார்வதியினையும்…

அவர்களிடம் நடந்து முடிந்ததை சொல்லிவிட்டு, குருமூர்த்தியின் நடவடிக்கைகளை கண்காணித்து அவனிடம் இருந்து காவேரியை காப்பாற்றி அவளுடன் இருங்கள் என்ற வேண்டுகோளோடு சில பத்திரங்களையும் அவர்களின் கைகளில் கொடுத்துவிட்டு

“நான் எப்படி என் அருளுக்கு ஆதரவா இருந்தேனோ, அதே போல என் பேரன் காவேரிக்கு ஆதரவா இருக்கணும்… அவ வார்த்தைகளை அவன் தட்டக்கூடாது… அவளோட குழந்தை பாசத்தை மொத்தமா இப்போ குழந்தையா இருக்குற மகத் தீர்க்கட்டும்… சகி என்ற பெயரை நான் அவனுக்கு வச்சதுக்கு காரணமே எப்பவும், காவேரிக்கு அவன் துணையா இருக்கணும்னு தான்… என் தங்கை போன்ற காவேரிக்கு என்னைக்கும் அன்போட உறுதுணையா இருக்கணும் மகத்…. இருப்பான்… என சொல்லிவிட்டு சென்றவர் தான் அதன் பின் திரும்பவே இல்லை மாதவன்…

“அப்படி மொத்தத்தையும் தன் நண்பனுக்காகவும், தன் தங்கை போன்ற காவேரிக்கும் கொடுத்து தன் பேரப்பிள்ளையா கூட இருந்து வளர்க்காம காவேரிக்கு தாய்ப்பாசம் கிடைக்கணும்னு தூக்கி கொடுத்துட்டு போனவண்டா என் மாதவன்… அவன் பேரனை பார்த்து அநாதை சொல்லுவீயா நீ?... இன்னொரு தரம் சொல்லிப்பாரு… உன்னை கொன்னே போட்டிருவேன் ராஸ்கல்… உன் அப்பா அதான் அருள், கடைசி நேரத்துல உனக்காக எவ்வளவு ஏங்கினான்னு தெரியுமா?... அந்த நேரத்துல காவேரியோட வார்த்தைகள் மட்டும் தான் அவனுக்கு ஆதரவா இருந்துச்சு… பெற்ற தகப்பன்னு அவனை நீ மதிச்சா தான, உனக்காக தன் வாழ்க்கையையே தியாகம் பண்ணின காவேரியை நீ புரிஞ்சிக்கிறதுக்கு…. உனக்கு பணம் மட்டும் தான குறிக்கோள்… ஆனா அத வச்சும் உன்னால என்ன பண்ண முடிஞ்சது?... நீ பெத்த மகளோட இழந்த வாழ்க்கையை உன்னால திருப்பி தர முடிஞ்சதா?... இப்போ உன் மகளுக்கு அந்த வாழ்க்கையும் என் மாதவன் பேரனால தான் கிடைச்சது… அன்னைக்கு என் மாதவன் உங்க குடும்பத்துக்கு நல்லது செஞ்சான்… இன்னைக்கு மகத் அதே நல்லதை திரும்பவும் செய்யுறான் எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காம… இதெல்லாம் புரிஞ்சிக்காம நடுத்தர வர்க்கம், அநாதைன்னு நீ மறுபடியும் உளறிட்டே இருந்தா, அப்படியே இரு…. ஆனா ஒன்னு மட்டும் புரிஞ்சிக்கோ, பெத்த பிள்ளைமேல கூட இந்த காலத்துல அவ்வளவு பாசம் வச்சிருக்கமாட்டாங்க… ஆனா காவேரி வச்சா உன் மேல… நீ சொல்லுவீயே அவளை அடிக்கடி ஊர் பேர் தெரியாத ஏழைன்னு… அந்த ஏழை தான் உன்னை வாழவைக்க தன்னை, தன் சந்தோஷத்தை தியாகம் பண்ணினது… உன்னை பெத்த கோதாவரி உனக்கு நஞ்சை மட்டும் தான் விதைச்சா… ஆனா காவேரி தான் உனக்கு இப்பவும் நல்லது நினைக்குறா… உன் பொண்ணு மேலயும் உயிரையே வச்சிருக்குறா… நீ பெத்த வாரிசு… தன் பேத்தின்னு… அருள் இல்லாட்டாலும், அருள் ஏற்படுத்திக்கொடுத்த உறவுகளோட இருக்குற அவ அநாதை இல்லடா… உறவுகள் இருந்தும் இப்படி தனியா இருக்குறீயே, நீதான் அநாதை…” என்றதும்,

“என் பையனை என் முன்னாடியே அப்படி சொல்லாதீங்கண்ணா… ப்ளீஸ்….” என்று கையெடுத்து கும்பிட்ட காவேரியைப் பார்த்த குருமூர்த்திக்கு அடிமனதை யாரோ இறுக பிசைவது போல் இருந்தது…

“பார்த்துக்கோ… உன்னை ஒரு வார்த்தை சொல்ல விடமாட்டிக்குறா… இதுதாண்டா தாய்ப்பாசம்…. அது உனக்கு இன்னமும் புரியலைன்னா, நீ எல்லாம்….” என்றவர் அதற்கு மேல் எதுவும் பேசாமல் இருந்து விட்டார்….

“அவர் பேசினதை நீ மனசுல வச்சிக்காதப்பா… உன் அம்மா வாழ்க்கையை நான் பங்குப்போட்டுக்க நினைக்கலை… எல்லாரும் சேர்ந்து என்னை சம்மதிக்க வச்சாங்க… உங்க அப்பாவை எனக்கு பிடிச்சிருந்தாலும் உன்னை வளர்க்குறதுக்காகவே சரின்னு சொன்னேன்… என் வாழ்க்கையில சந்தோஷம் கொடுத்த ஆன்ந்த் பையன் சந்தோஷமா வளரணும்னு நான் நினைச்சு உனக்கு அம்மாவானேன் மனசளவில… உன் பொண்ணு வாழ்க்கையையும் நான் கெடுக்கலை… உன் வாழ்க்கையும் உன் அம்மா வாழ்க்கையையும் நான் கெடுக்கலை… அதை மட்டும் நீ புரிஞ்சிகிட்டா போதும் குரு….” என இரு கை கூப்பி கெஞ்சியவரை பார்க்க ஏனோ குருவால் அதற்கும் மேல் முடியவில்லை…

யாரிடமும் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து மெதுவாக வெளியேறினார் அவர்…

நாட்களும் வேகமாக கழிய, முதலில் விஜய்க்கும், பவித்ராவிற்கும் திருமணம் இனிதே நடந்தேறியது…

மனம் மாறிய குருமூர்த்தி அனைவரிடத்திலும் வந்து மன்னிப்பு கேட்டுக்கொண்டு காவேரியிடம் பேசி மனதை கரைத்து கொஞ்ச நாட்கள் தன்னுடன் வந்து தங்கும்படி கேட்டுக்கொள்ள, மகத் அவரை வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்தான் குருமூர்த்தி வீட்டுக்கு…

கோகிலவாணி, கேசவன், வைஜெயந்தி, கன்யா, ஜித், நதிகா, துருவன், விஜய், பவித்ரா என அனைவரும் ஒரே வீட்டினில் மகிழ்ச்சியுடன் வாழ ஆரம்பித்திருந்தனர்… இரண்டு வருடங்களும் வேகமாக உருண்டோடியது…

ஆனால் அதற்கும் முன் இருந்த நாட்களில்,

“முடியவே முடியாது… இதுக்கு மேலேயும் உங்களை விட்டு என்னால இருக்க முடியாது… ப்ளீஸ் சகி… புரிஞ்சிக்கோங்க…” என கெஞ்சிக்கொண்டிருந்தவளை பார்க்க பாவமாக இருந்த போதும், மெதுவாக அவளின் முன் வந்து,

“என் கிருஷ்ணா நான் சொன்னா கேட்பாதான?...” என்று அவன் கேட்க

“போங்க சகி… பேசாதீங்க….” என்றபடி கோபம் கொண்டாள் அவள்…

“என்னடா கிருஷ்ணா….” என்றபடி அவளிடம் பேசியவன்,

“நான் உன் நல்லதுக்குத்தான சொல்லுறேன்… புரிஞ்சிக்கோம்மா… என் கிருஷ்ணால்ல… ப்ளீஸ்டா….” என அவன் கெஞ்ச, மெல்ல தூக்கி வைத்துக்கொண்ட முகத்தினை திருப்பி, அவனை பார்த்தவள்,

“இப்போ இது ரொம்ப அவசியம் தானா?...” எனக் கேட்க அவளை முறைத்தான் அவன்…

“சரி சரி… செய்யுறேன்… முறைக்காதீங்க…” என அவளும் உதட்டினை குவித்து ஒதுக்கிக்கொள்ள அவன் சிரித்தான்…

“இது போதும்டா எனக்கு….” என சொல்லி சிரித்தவனை,

“ஆனா எனக்கு இது போதாது….” என்றவள், அவன் அசந்த நேரம் பார்த்து அவன் முகம் பற்றி இரு கன்னங்களிலும் முத்தமிட, அவன் அவளிடமிருந்து விலக எத்தனித்தான்… ஹ்ம்ம்…. ஹூம்… அவள் விடவே இல்லை…

“கிருஷ்………….ணா…………..” என்றபடி அவன் இழுக்க,

“நான் இப்படி எல்லாம் செஞ்சிடக்கூடாதுன்னு தான, என்னை இப்படி மறுபடியும் பாதியில நிறுத்தின படிப்பை படிக்கணும்னு சொல்லுறீங்க… ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம், நான் நல்லா படிக்கவும் செய்வேன்… உங்களை இப்படி படுத்தவும் செய்வேன்….” என்றவள், கோபமாக அவனை விட்டு விலகி விட்டு இரண்டடி எடுத்து வைத்தவள், மீண்டும் அவனிடம் வந்து,

“கல்யாணம் மட்டும் முடியட்டும்… அப்போ இருக்கு உங்களுக்கு….” என பழிப்புகாட்டி விட்டு பொய் கோபமும் கொண்டு விட்டு செல்ல, தன்னையும் அறியாமல் சிரித்தான் மகத்…

இப்போது இரண்டு வருடங்களும் கழிந்திருக்க, இன்னும் ஒரு வருடமே அவர்களின் திருமணத்திற்கு இருந்திருந்த நிலையில், பவித்ரா தாயானாள்… ஆம்… அழகான பெண் குழந்தையை அவள் பெற்றெடுக்க, பிரபுவும், மகத்தும் நிறைவான ஆனந்தம் கொண்டனர்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.