(Reading time: 44 - 87 minutes)

ருபுறம் பெற்ற மகன், இன்னொரு புறம் தன்னை தாய்க்கு தாயாய், தோழியாய், பார்த்துக்கொள்ளும் மனைவி, என அவர் தவித்திருக்க, அந்த நேரத்தில் தானே முன் வந்து வீட்டை விட்டு வெளியேறுவதாக காவேரி கூற, மனம் நொந்து போனார் அருளானந்தம்…

இதை எப்படி சரி செய்ய என்று அவர் வேதனையில் தவித்த போது, அவருக்கு கைகொடுத்து உதவ வந்தார் மாதவன்…

தனது நிலம் ஒன்று திருச்சியில் இருப்பதாகவும், அங்கு சென்று காவேரி இருக்கட்டும் எனவும் மாதவன் கூற, யோசித்தார் அருளானந்தம்… பிறகு ஒரு முடிவுடன் சம்மதம் தெரிவிக்க, வீட்டை விட்டு வெளியேறினார் காவேரி அருளானந்தத்தை விட்டு பிரிய முடியாது கண்களில் கோர்த்த நீரோடு… அந்த நீரை புன்னகையுடன் கண்டார் குருமூர்த்தி…. மகனின் அந்த புன்னகை அவரின் நெஞ்சில் அமிலத்தை உமிழ்ந்தது…

அதன் பிறகு குருமூர்த்தியின் திருமண ஏற்பாடுகள் வேகமாய் நடக்க, விடிந்தால் திருமணம் என்ற நிலையில், மண்டபத்துக்கு வந்த காவேரியை அனைவரின் முன்னிலும் இவள் வெளியே சென்றால் தான் நான் தாலியே கட்டுவேன் என பிடிவாதம் பிடித்த மகனை வெறுப்புடன் ஏறிட்டார் அருளானந்தம்…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

ராசுவின் "பேசும் தெய்வம்" - அன்பென்றாலே அம்மா...

படிக்க தவறாதீர்கள்...

பெற்றெடுக்காவிட்டாலும், வளர்த்த பாசம் காவேரியினை உலுக்க, மகனின் கல்யாணத்தை கண் குளிர பார்த்து ரசிக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் மனதை ஒருபுறம் அழுத்த, நான் போயிடுறேன்ப்பா… என கண்களின் வேதனையை உதட்டினில் பூத்த சிறு புன்னகை கீற்றில் மறைத்து அருளானந்தத்தினைப் பார்த்து தலையசைத்துவிட்டு அந்த மண்டபத்தை விட்டு வெளியேறினார் காவேரி…

அந்த நேரம், மாதவனின் மகளும், மருமகனும் சென்ற கார் விபத்திற்குள்ளாக இரண்டு மாத கைக்குழந்தையான தன் பேரப்பிள்ளை பெற்றவர்களை இழந்து தனியாக நிற்க, அந்த நேரத்தில், அண்ணா, குழந்தையை எங்கிட்ட கொடுங்க, என்று அப்பச்சிளங்குழந்தையை வளர்க்கும் பொறுப்பை தான் ஏற்றுக்கொண்டார் காவேரி…

அடுத்த சில நாட்களிலேயே மாதவன், இனி இந்த குழந்தை உனது பொறுப்பு, நீயே இவனுக்கு சகலமும், என்ற வார்த்தைகளோடு அங்கிருந்து சென்றுவிட்டார் அவர்… எவ்வளவோ தடுத்துப்பார்த்தனர் காவேரியும், அருளானந்தமும்… ஹ்ம்ம்.. ஹூம்… மறுத்தே விட்டார் அவர்…

அதன் பின்னர், குருமூர்த்தியின் மகிழ்ச்சிகரமான மணவாழ்க்கையை அறிந்து கொண்ட அருளானந்தம், மகனிடம் சொல்லாமல் கொள்ளாமல் திருச்சிக்கு வந்தார்…

தகப்பனை காணாது தேடி அலைந்தவர், கடைசியில் ஒரு முடிவுடன் திருச்சிக்கு வர, அங்கிருந்த அருள் இல்லம் என்ற பெயர்ப்பலகை, ஆதரவற்ற குழந்தைகள் சிலர், என அனைத்துமே அவரை திகைக்க வைக்க, அதுபற்றி குருமூர்த்தி தகப்பனிடம் கேட்ட போது,

“உனக்கும் கல்யாணம் முடிஞ்சிட்டு… இனி உன் வாழ்க்கை, உன் மனைவி, உன் குடும்பம்னு எல்லாம் மாறிடும்… என்னோட கடைசி காலத்தை இங்க நான் காவேரியோட சேர்ந்து இந்த குழந்தைகளோடு கழிக்க ஆசைப்படுறேன்… நீ உன் தொழிலைப் பார்த்துகிட்டு சந்தோஷமா இரு… எப்பவாச்சும், என்னைப் பார்க்கணும்னு தோணினா இங்க வந்துட்டு போ… என்றவர், காவேரியினை அழைத்தார்…

பத்திரங்களோடு வந்த காவேரியினைக் கண்டதும், என்ன நடக்கிறது இங்கே என்ற பாவனையில் இருந்த குருமூர்த்தியிடம், “இந்தாப்பா… உனக்கு சேர வேண்டிய சொத்துக்கள் எல்லாமே இதுல இருக்கு… நான் சம்பாதிச்ச சொத்து எல்லாத்தையும் உன் பேரில் எழுதி வச்சிட்டேன்… மிச்சம் இருக்குறது இந்த இடம் ஒன்னு தான்… இதுல நான் வாழ்ந்துட்டு போறேன்… நீ போயிட்டு வா…” என சொல்லிவிட்டு தள்ளாடியபடி காவேரியின் அருகில் நடந்து சென்ற தகப்பனை முறைத்து பார்த்துவிட்டு அங்கிருந்து அகன்றார் குருமூர்த்தி…

ஒரு வருடத்திற்குள்ளேயே அருளானந்தம் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட, குருமூர்த்தியும் திருச்சிக்கு வருவதை அறவே நிறுத்திக்கொண்டார்…

சில வருடங்களுக்குப் பிறகு, குருமூர்த்தியின் மனைவி கர்ப்பம் தரித்திருப்பதை அறிந்து அவரைப் பார்க்க வந்த காவேரியினை வீட்டு வாசல் படியினை கூட மிதிக்க விடவில்லை குருமூர்த்தி…

பிரசவத்தில் இறந்துவிட்ட மருமகளை பார்த்து கதறிய காவேரியிடம், அங்கிருந்த சிலர், இப்படி பச்ச மண்ணை அநாதையாக்கிட்டு போயிட்டாளேம்மா உங்க மருமக… என கண் கூட திறந்திருக்காத அந்த சிசுவை காவேரியின் கைகளில் கொடுக்க, அப்படியே பூரித்து போனார் காவேரி… பின்னே, அது அவர் மகனின் வாரிசு இல்லையா….

குருமூர்த்திக்கும் மகளை தனியாக வளர்க்க கஷ்டமாக இருக்க, காவேரி அவருக்கு உதவியாய் கன்யாவினை வளர்க்க, அவர் எதுவும் பேசவில்லை… அந்த நேரத்தில் இன்னொரு திருமணம் என்று நெருங்கிய உறவினரை எரிப்பது போல் பார்த்த குருமூர்த்தி,

“என்னையும் மற்றவர்களைப் போல் அடுத்தவர் குடியை கெடுப்பவர் என்று நினைத்தீர்களா?...” என கேட்க, அந்த உறவினர் வந்த வழியே சென்று விட்டார்… அவர் சென்றதும் காவேரியினை ஒரு வித ஏளனத்தோடும் உதாசீனத்தோடும் பார்த்தார் குருமூர்த்தி…

அன்றைக்கு அவர் பார்த்த அதே பார்வையை, இன்று சதாசிவம் குருமூர்த்தியை பார்த்தபடி, “உன் அம்மாவுக்காக காவேரியை வெறுத்தீயே, உன் அம்மா என்ன காரியம் செஞ்சிட்டு போனாங்கன்னு உனக்கு தெரியுமாடா?... முதலில்?...” என்று கேட்க, காவேரி அதிர்ந்து பார்த்தார் சதாசிவத்தை…

“இதுக்கு மேலயும் நான் மூடி வச்சிருந்தேன்னா, அப்புறம் நான் மனுஷனே கிடையாது….” என்றவர்,

“உன் அப்பாவை கல்யாணம் பண்ணி உன் அம்மா வாழ்க்கையை காவேரி கெடுத்துட்டான்னு தான இத்தனை நாள் அவளை விரோதியா நீ பார்க்குற… ஆனா அவ வாழ்க்கையை உன் அம்மா கெடுத்தாளே அது உனக்கு தெரியுமா?...” எனக் கேட்க, குருமூர்த்தியின் பார்வை கூர்மையாகியது…

“அண்ணே… சும்மா இருங்க… குரு… நீ வீட்டுக்குப் போ… முதலில்…” என காவேரி குருமூர்த்தியை அங்கிருந்து அனுப்ப முற்பட, அவர் அசையவில்லை…

“நீ சும்மா இரும்மா… இன்னைக்கு சொன்னாதான் எல்லாமே ஒரு முடிவுக்கு வரும்…” என்றவர் அன்றைக்கு காவேரிக்கும் அருளுக்கும் திருமணம் பேசி முடித்த தினத்தை நினைவுக்கு கொண்டு வந்தார்…

நடக்கப்போற கல்யாணத்தை நம்மாள இனி நிறுத்த முடியாது… நிலைமையும் கை மீறி போயிட்டு… அடுத்து என்ன செய்ய என்று யோசித்த கோதாவரி ஒரு முடிவுடன் காவேரியை அழைத்து பேசினார்… அடுத்த சில நாளில் கோதாவரியின் முன்னிலையில் காவேரியின் கழுத்தில் தாலியைக் கட்டினார் அருளானந்தம்… அதைப் பார்த்த கோதாவரியின் முகத்தில் இகழ்ச்சியும், ஏளனமும் ஆனந்த தாண்டவமாடியது… அதை மற்றவர்கள் கவனித்தனரோ என்னவோ மாதவன் கவனித்தார்…

அதுபற்றி மாதவன் காவேரியிடம் கேட்க, எதுவுமே தனக்கு தெரியாது என்று சாதித்தார் காவேரி… என்னாயிற்று இந்த காவேரிக்கு என்ற யோசனையுடன் அங்கிருந்து அவர் நகர்ந்து வெளியே வந்த அந்த நேரத்தில் அங்கு அந்த கோதாவரி, மாதவனிடம், “என்ன உன் சொந்தக்காரப்பொண்ணு எதுவும் சொல்லாம போறாளேன்னு வருத்தமா இருக்கா?...” எனக் கேட்க அமைதியாக இருந்தார் மாதவன்…

“இதுக்கே வருத்தப்பட்டா எப்படி?... நான் சொல்லப்போற விஷயத்தைக் கேட்டா அப்போ இடிஞ்சி போய் உட்கார்ந்துடுவ போலயே….” என கேட்டதும், கோதாவரியை ஒருவித கோபத்துடன் மாதவன் பார்க்க,

“வேற ஒன்னுமில்லை… என் புருஷனை நீ கல்யாணம் பண்ணிக்கோ… ஆனா அவரோட நீ வாழமட்டும் கூடாதுன்னுன்னு சத்தியம் வாங்கியிருக்கேன் காவேரிக்கிட்ட… அதும் என் பையன் குருமூர்த்தி மேல சத்தியம் வாங்கியிருக்கேன்… அவளுக்கு குருன்னா ரொம்ப இஷ்டம்னு அவ இங்க வந்த நாளிலேயே நான் தெரிஞ்சிக்கிட்டேன்… என் புள்ளை மேல அவ பாசமா இருக்குறது எனக்கு சந்தோஷம் தான்… ஆனா அதே பாசம் என் புருஷனையும் அவ பக்கம் இழுத்திட கூடாது இல்லையா?... அதுக்குத்தான் இந்த சத்தியம்… அவ பாசம் என் புள்ளையையும் நெருங்காது… அதே நேரத்துல அவ செஞ்சு கொடுத்த சத்தியம் என் புருஷனையும் அவ கூட வாழ அனுமதிக்காது… என்னை மொத்தமா அனுப்பி வச்சிட்டு ஊர்பேர் தெரியாத அநாதையை என் புருஷனுக்கு முறைப்பொண்ணுன்னு சொல்லி நீ சொன்னா மத்தவங்க வேணும்னா நம்பலாம்… ஆனா நான் செத்தாலும் நம்பமாட்டேன்… காவேரி மேல எனக்கு இருக்குற அதே குரோதம், வெறி, என் புள்ளைக்கு ஒரு நாளும் நான் தணியவும் விடமாட்டேன்… நான் வாழ வேண்டிய இடத்துல இனி அவ செத்தாலும் வாழ்ந்துக்க மாட்டா…. இனி நான் செத்தாலும் நிம்மதியா சாவேன்… இதோ உன் முகத்துல பார்த்த இந்த வேதனை நிம்மதி போதும்… எனக்கு….” என மாதவனின் மனதை கொன்றுவிட்டு சென்றுவிட்டார் கோதாவரி…

காவேரியிடம் சென்று அதுபற்றி அவர் கேட்ட போது, “எனக்கு என் ஆனந்தைப் பிடிச்சிருக்கு அண்ணா… அவரோட உடலளவுல வாழ்ந்தா தான் வாழ்க்கையா?... அவர் பக்கத்துல இருந்து நான் அவரைப் பார்த்துக்கிட்டாலே போதும் அண்ணா… அவர் என் வாழ்க்கையில வந்தது நான் எந்த ஜென்மத்துல செஞ்ச புண்ணியமோ தெரியலை அண்ணா…” என காவேரி சொல்ல, மாதவனின் மனதோ சமாதானம் அடைய மறுத்தது…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.