(Reading time: 23 - 46 minutes)

அமேலியா - 03 - சிவாஜிதாசன்

Ameliya

மேலியாவின் வீடே விழாக்கோலம் பூண்டிருந்தது. அக்கம் பக்கத்தினர், உற்றார் உறவினர்கள் எல்லோரும் வந்து வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். அவர்களுக்கு சுவையான உணவுகள் பரிமாறப்பட்டன. எங்கும் கலகலப்பே நிறைந்திருந்த அவ்வீட்டில் ஓரிடத்தில் மட்டும் ஆழ்ந்த அமைதி குடிகொண்டிருந்தது. பஹீரா உள்ளே வந்தது கூட தெரியாமல், துன்பம் நிறைந்த முகத்தோடும் சோகமான விழிகளோடும் தூக்குக் கயிற்றின் நடுவிலிருப்பது போன்ற தன் முகத்தை ஓவியமாய் தீட்டிக்கொண்டிருந்தாள் அமேலியா.

பஹீரா, அமேலியாவின் தத்ரூபமான ஓவியத்தைக் கண்ணிமைக்காமல் அதிசயமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள் அந்த ஓவியத்தின் சோகத்தை உணராத பஹீரா, "அக்கா, இந்த ஒவியத்தில நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க" என்றாள்.

பஹீராவின் குரலைக் கேட்டு அதிர்ந்த அமேலியா, தன் முகத்தில் படர்ந்திருந்த சோகத்தை மறைத்து புன்னகைத்தாள். பஹீராவை தன் மடியில் அமரவைத்து, "நான் பஹீரா செல்லத்தை விட அழகாவா இருக்கேன்?" என்று கூறிக்கொண்டே பஹீராவின் கன்னத்தில் தன் முத்தத்தைப் பதித்தாள் அமேலியா.

"உன் முகத்தைச் சுற்றி ஏன் வட்டத்தை வரஞ்சு வச்சிருக்க?"

"அது வட்டமில்லையே, மலர்கள் தானே இருக்கு"

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜெய்யின் "ஸ்ருங்கார சீண்டல்கள்... சில்லென்ற ஊடல்கள்..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

"மலர்களா? என் கண்ணுக்கு தெரியலியே"

"அவை மந்திர மலர்கள். என் கண்ணுக்கு மட்டும் தான் தெரியும்"

"அப்போ என்னால பாக்க முடியாதா?" என்று சோகமானாள் பஹீரா.

"நான் உனக்கு அந்த மலர்களை காட்டுறேன், நீ யார் கிட்டேயும் சொல்லக்கூடாது"

ஆர்வத்தோடு "சரி" என தலையசைத்தாள் பஹீரா.

ஓவியத்தில் இருந்த சுருக்குக் கயிற்றை மலர் மாலையாக மாற்றியமைத்தாள் அமேலியா. சோகமே வடிவாக இருந்த அந்த ஓவியம் இப்பொழுது பெண்மைக்குரிய நாணத்தின் சின்னமாக மாறியது.

"நான் மந்திர மலர்களைப் பார்த்துவிட்டேன்" என்று குதூகலித்தாள் பஹீரா.

அந்நேரத்தில் உள்ளே நுழைந்த அமேலியாவின் தாயார் ஃபாத்திமா அமேலியா அலங்காரம் செய்துகொள்ளாமல் பஹீராவுடன் கொஞ்சி விளையாடிக்கொண்டிருந்ததைக் கண்டு கோபமடைந்தார். "மாப்பிள்ளை வீட்டுகாரங்க வந்துட்டு இருக்காங்க. நீ இன்னும் அலங்காரம் பண்ணாம என்ன செஞ்சிட்டு இருக்க? சீக்கிரம் தயாராகு" என்று கூறிவிட்டு சென்றார்.

மேலியாவின் வீட்டின் முன் நான்கைந்து கார்கள் வந்து நின்றன. அதிலிருந்து மாப்பிள்ளை வீட்டார் இறங்கினர். அவர்களை வரவேற்ற அமேலியாவின் தந்தை காலதாமதமாக வந்ததற்கான காரணத்தைக் கேட்டறிந்தார். வரும் வழியில் அமெரிக்க ராணுவத்தினர் வாகனங்களை சோதனையிட்டதால் தாமதமானதாக கூறினார் மாப்பிள்ளையின் தந்தை,

"என்று தான் நம் மக்களுக்கு நிம்மதியும் தீர்வும் ஏற்படுமோ?" என்று தன் ஆதங்கத்தை வெளிபடுத்தினார் முகமது யூசுப்.

மாப்பிள்ளையின் தாய் மற்றும் அவருடைய சகோதரிகள் அமேலியாவை பார்க்க விருப்பம் தெரிவித்தனர்.

"அவள் உள்ளே அலங்கரித்து கொண்டிருக்கிறாள்" என்றார் அமேலியாவின் தாய் ஃபாத்திமா.

"எந்த அறையில் அலங்காரம் நடக்கிறது?" என்று கேட்டறிந்தாள் மாப்பிள்ளையின் சகோதரி.

ஃபாத்திமா ஒருவித தயக்கத்தோடு அமேலியா இருக்கும் அறையை நோக்கி கை காட்டினார்.

மாப்பிள்ளையின் அம்மாவும் சகோதரிகளும் அமேலியா அறையை நோக்கி சென்றனர் .

"அலங்காரம் முடித்து அவளே சிறிது நேரத்தில் வந்திடுவா" என்றார் ஃபாத்திமா.

"எங்க வீட்டுக்கு வர பொண்ண நாங்க அலங்காரம் செய்து தேவதையாய் கொண்டு வருகிறோம்" என்றார் மாப்பிள்ளையின் தாய்.

அறைக் கதவை திறந்து உள்ளே சென்றவர்களுக்கு அமேலியா எந்த அலங்காரமும் செய்துகொள்ளாமல் பஹீராவுடன் பேசிக்கொண்டிருந்தது ஆச்சர்யத்தை  ஏற்படுத்தியது. அவர்களைக் கண்ட அமேலியா ஒருவித அதிர்ச்சியில் எழுந்து நின்றாள். சில நொடிகள் ஆழ்ந்த நிசப்தம் அவர்களுக்குள் ஏற்பட்டன. அமேலியாவின் மனநிலையை அவர்கள் புரிந்துகொண்டு என்ன செய்வதென்றே புரியாமல் விழித்தார்கள்.

இன்னும் குழந்தைத்தனம் மாறாமல் இருக்கும் அமேலியாவை இப்போதே திருமணம் என்ற பேரில் இல்லற வாழ்வில் தள்ளிவிடுகிறோமோ என்று வேதனை அடைந்தார் மாப்பிள்ளையின் தாய்.

"நீ அலங்காரம் செய்துட்டு இருக்கன்னு உங்க அம்மா சொன்னாங்க. உன்ன பாத்தா அப்படி தெரியலையே" என்றாள் மாபிள்ளையின் சகோதரி

அமேலியா பதில் பேசவில்லை. நின்றபடி பஹீராவை அழுத்தமாக பிடித்துக்கொண்டாள். பஹீரா அறையை விட்டு வெளியேற துடித்தாள்  ஆனால், அமேலியாவின் பிடி அவளை தடுத்து நிறுத்தியது.

"உனக்கு பேச தெரியாதா?" என்று கிண்டலடித்தாள் மாப்பிள்ளையின் மற்றொரு சகோதரி.

மீண்டும் அமேலியாவிடம் மௌனம். தன் தலையைத் தாழ்த்திக் கொண்டாள்  அவள் உடல் நடுக்கம் கொண்டது. தாழ்வு மனப்பான்மையால் அவள் உள்ளம் துடித்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.