(Reading time: 23 - 46 minutes)

யூசுப் தன் தலையை தாழ்த்திக்கொண்டார்.

"அமேலியாவை ஏன் இப்படி ஒரு இடத்துல தள்ளி விடுற?"

யூசுப் பதறினார், "அய்யா உங்க வாயால அப்படி சொல்லாதிங்க .என் மகளுக்கு நான் நல்லதை தான் செய்வேன்"

"அப்போ எதுக்கு இந்த மாதிரி சம்மந்தம்?"

"இந்த இடத்தையும் ஊரையும் கொஞ்சம் பாருங்கையா. இது எல்லாம் சுடுகாடா மாறி எத்தனையோ நாளாச்சுங்க அய்யா .எனக்கு வேற இருதய நோய் இருக்கு  எப்போ வேணும்னாலும் அல்லா கிட்ட போய்டலாம். ஃபாத்திமாவும் அமேலியாவுக்கு எவ்வளவு நாள் துணையா இருந்திடுவா? எங்களுக்கு அப்புறம் அமேலியாவ யாரு பாத்துப்பா? அவளுக்கு இன்னைய வரைக்கும் உலகம்னா என்னனு கூட தெரியாதுங்க அய்யா. நாங்க இருக்கும் போதே ஒரு நல்ல இடத்துல அவளை கல்யாணம் பண்ணி குடுத்திடலாம்னு நெனச்சோம். அதனால தான் அய்யா இந்த முடிவு எடுத்தோம்  இதுவரைக்கும் என் பொண்ணு ஆசை பட்டத என்னால வாங்கி கொடுக்க முடியல. நான் ஆசைப்பட்டதும் என் பொண்ணுக்கு என்னால செய்ய முடியல. பையன் துபாய்ல பெரிய ஹோட்டல் வச்சிருக்கான். என் பொண்ணு நல்லபடியா வாழுவா  இந்த நரகத்துல அவளால நிம்மதியா வாழ முடியாது  திரும்ப ஈராக்கிற்கு அவ வர கூடாது  அவ சந்தோசமா வாழணும் . ஆரம்பத்துல என் பொண்ணுக்கு கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கும்  போக போக சரி ஆயிடும்"

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா V யின் "காதலை உணர்ந்தது உன்னிடமே..." - காதலை எப்போது சொல்வேன் உன்னிடமே 

படிக்க தவறாதீர்கள்...

"உன் நல்ல மனசுக்கு அல்லாஹ் நல்ல வழிய தான் காட்டுவாரு" என்று ஆறுதல் அளித்தார்  பெரியவர்.

பெருங்காற்று ஒன்று உருவாகி அலங்கார பந்தலை தூக்கி வீசி எறிந்தது .நீங்கள் நினைப்பது நடக்கவா போகின்றது என்பது போல சத்தம் போட்டு சிரித்தது இடி.

இடிக்கு பயந்த அமேலியா "அப்பா.." வென்று கத்தினாள்.

தன் மகளை தேற்ற வீட்டுக்குள் ஓடினார் யூசுப்.

காற்று பலமாக வீசி கருமேகங்களை வரவேற்றது. மழை கடுமையாக இருக்குமென எண்ணிய மக்கள் வீட்டுக்குள்ளேயே  இருந்தார்கள். சிறுமி மாலிகா மட்டும் தான் தங்கி இருக்கும் வீட்டை விட்டு வெளியே வந்து நின்று யாருக்காகவோ காத்திருந்தாள். சற்று  மனநலம் குன்றிய அவள் போலியோவால் பாதிக்கப்பட்டிருக்கும் தன் கால்களை நகர்த்தியபடி மெல்ல மெல்ல வீதியின் நடுவே நடந்து வந்தாள்.

காற்றின் பலம் அதிகரித்துக்கொண்டே சென்றது  அவள் அசரவில்லை  தன் வீட்டை விட்டு பாதி தூரத்தைக் கடந்து வந்துவிட்டாள்.அமெரிக்க இராணுவத்தினரின் ஜீப்புகள் அவளைக் கடந்து சர் சர்ரென சென்றன. ஒவ்வொரு ஜீப்பையும் ஏக்கத்தோடு பார்த்து நின்றாள்.

ஐந்தாறு ஜீப்புகள் இவ்வாறாக சென்றன. ஏமாற்றத்தோடு தன் வீட்டை நோக்கி நடந்தாள். அப்போது, அவளைக் கடந்த ராணுவ ஜீப் ஒன்று நின்றது. அதிலிருந்து ராணுவ வீரன் ஒருவன் இறங்கி வந்தான். அவனை கண்டதும் மாலிகா குதூகலித்தாள். அவளுக்கு தின்பண்டங்கள், சாக்லேட் கொடுத்த ராணுவ வீரன், அவளுடைய வீட்டில் அவளை ஒப்படைத்துவிட்டு தான் வந்த ஜீப்பில் ஏறி சென்றான் .

கண் தெரியாத அவளுடைய பாட்டி .இந்த நேரத்தில் எதுக்காக வெளியே சென்றாய் என அவளை திட்டிக்கொண்டே படுக்கையில் படுத்தாள். மாலிகா மீண்டும் வெளியே வந்து வீட்டுத் திண்ணையில் அமர்ந்து தின்பண்டங்களை மகிழ்ச்சியாக கொறிக்க ஆரம்பித்தாள்.

ராணுவ ஜீப்புகள் வேகமாக சென்று கொண்டிருந்தன  இரவு பன்னிரண்டு மணி அளவில் ராணுவக் கப்பல் ஈராக்கின் கடற்பகுதிக்கு வந்து சேர்ந்துவிடும்  அதற்கு பாதுகாப்புக்காக ராணுவ வீரர்கள் சென்றுகொண்டிருந்தார்கள்.

மாலிகாவுக்கு தின்பண்டங்களைக் கொடுத்த ராணுவ வீரன் ஜீப்பில் சென்றுகொண்டிருந்தான். அவனை சக வீரர்கள் ஆச்சர்யத்தோடு பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

"ஏன் அப்படி பார்க்கிறீர்கள்?" என்றான் ராணுவ வீரன்.

"ஜான்சன் நீ ரொம்ப வித்தியாசமானவன்"

"ஏன் அப்படி சொல்ற?"

"அன்னைக்கு அபப்டி தான் ஹகீம்னு ஒரு பையனுக்கு சாப்பாடு குடுக்கிற. அவன் உன்னை மதிக்ககூட மாட்றான்"

"அவன் அப்பா அம்மா இறப்புக்கு நான் தான காரணம் "

"அந்த சூழ்நிலைல வேறு என்ன பண்ண முடியும்? தீவிரவாதிகள் சண்டையில் தங்களுக்கு முன் அவர்களை நிறுத்துவார்கள் என்று யார் எண்ணி பார்த்தது? துப்பாக்கி குண்டுக்கு தெரியுமா நல்லவர்கள் யார் தீவிரவாதிகள் யார் என்று? .இது விதி ஜான்சன். இதுக்கு நீ பொறுப்பாக முடியாது. உன்னுடைய மனது வேதனைப்படலாம்  ஆனா அது அடிமை ஆகிட கூடாது" .என்று தனது நீண்ட அறிவுரையை கூறி முடித்தான் ராணுவ வீரன் ஒருவன்.

அவர்களுக்குள் ஆழ்ந்த நிசப்தம் நிலவியது

"அந்த சின்ன பொண்ண பார்க்கும்போது எல்லாம் ஏன் தின்பண்டங்கள் கொடுக்கிற?" என்றான் மற்றொரு ராணுவ வீரன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.