(Reading time: 23 - 46 minutes)

மேலியாவின் வேதனையை உணர்ந்து கொண்டாள் மாப்பிள்ளையின் தாய். "நீங்க வெளிய போங்க" என்று தன் மகள்களை பார்த்து கூறினார்.

"ஏன் அம்மா நாங்கள் இருந்தால் என்ன?"

"வெளிய போங்கனு சொன்னேன்" இம்முறை தாயிடம் கடுமை.

சகோதரிகள் வெளியே சென்று விட்டனர்.

மாப்பிள்ளையின் அம்மா புன்சிரிப்போடு அமேலியாவின் அருகில் சென்று அவள் தலையை வருடி நெற்றியில் முத்தம் பதித்தாள் அவளது நினைவுகள் பின்னோக்கி நகர்ந்தன.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

கிருத்திகாவின் "வசந்த காலம்" - குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

தன் மகனின் திருமணத்திற்கு, பக்குவமில்லாத வயதில் வந்த அதே அமேலியா இன்றும் அப்படியே இருக்கிறாள். அந்த இளம் தளிருக்கா அதே மணமகனோடு திருமணம்! நினைக்கவே வேதனையாக இருந்தது  ஐந்து வருடத்திற்கு முன் பித்து பிடித்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தன் மருமகளை எண்ணிப் பார்த்தாள்.

மறுதிருமணம் செய்துகொள்ள எவ்வளவோ வற்புறுத்தியும் முடியாது என்று சொன்ன தன் மகன் அமேலியாவை கண்டபின்பு மறுமணத்திற்கு சம்மதம் சொன்னது ஆச்சர்யத்தைத் தந்தது. இருந்தும் இவ்வளவு வயது குறைந்த பெண் தேவையா? வேறு பெண் பார்க்கலாமே என்று தான் வைத்த கோரிக்கையை தன் மகன் எற்றுக்கொள்ளாதது அவளுக்கு வருத்தமே,

"உனக்கு இந்த திருமணத்துல விருப்பம் இல்லையா?" என்று அமேலியாவின் கையில் மருதாணியை வைத்தபடி கேட்டார் மாப்பிள்ளையின் தாய் .

அமேலியா தயங்கினாள். பதில் பேசவில்லை.

"உனக்கு விருப்பம் இல்லன்னா சொல்லு. திருமணத்தை நிறுத்திடலாம்"

"அப்பா வருத்தப்படுவாரு" சிறு குழந்தையை போல் சொன்னாள் அமேலியா. பஹீரவை தன் நெஞ்சோடு அணைத்தபடி திருமணம் நின்றால் எவ்வளவு நன்றாக இருக்கும் என சிந்தித்தாள்.

"என் மகனுக்கு இரண்டு பசங்க, பெரியவன் பேரு சப்ராஸ் கான் சின்னவன் பேரு மன்சூர் அலி. ரொம்ப சேட்டை பண்ணுவானுங்க. ஆனா நீ அவங்களை விட குழந்தையா இருக்கியே" என்றார் வேதனையோடு.

"உங்க கிட்ட ஒண்ணு கேக்கலாமா"

"சொல்லும்மா"

"கல்யாணமானதுக்கு அப்புறம் நான் துபாய் போய்டுவேனா?"

"ஆமா "

"அப்பா அம்மாவை எப்படி பாக்குறது? நான் திரும்பி வருவேனா ?" என்று கேட்டாள் அதே சிறு குழந்தைத்தனத்தோடு.

"போதும்டி குழந்தை. என்னை வேதனைப்படுத்தாத"  என்று அமேலியாவை தன் நெஞ்சில் சாய்த்துக்கொண்டார்.

மாப்பிள்ளையின் அம்மாவிற்கு திருமணத்தை நிறுத்தவேண்டும் போலிருந்தது. ஆனால், வேதனைப்படுவதைத் தவிர தன் கணவரையும் மகனையும் மீறி அவரால் வேறெதுவும் செய்யமுடியாது.

அமேலியா அவர் நெஞ்சில் சாய்ந்தபடி தான் வரைந்த ஓவியத்தை பார்த்தாள். தன் வாழ்வு நரகப் பாதையில் சென்று கொண்டிருப்பதைப் போலிருந்தது. மாப்பிள்ளையின் முன்னாள் மனைவி போல் தானும் தூக்கில் தொங்கிவிடுவோமோ என்ற பயத்தில்தான், அதே போல் ஓவியத்தை அவள் வரைந்தாள்.

அலங்காரம் முடித்து அமேலியா வெளியே வந்தாள்.  மாப்பிள்ளை வீட்டாரும் பெண் வீட்டாரும் அங்கே இருந்தனர். மாப்பிள்ளை மட்டும் அங்கே இல்லை. திருமணம் முடியும் வரை மாப்பிள்ளையும் பெண்ணும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளக்கூடாது என்பது அவர்களின் சம்பிரதாயம்.

அமேலியா மஞ்சள் நிற ஆடையில் தேவதையென வந்து நின்றாள். பால் போன்ற முகம்; பவளக்கற்காளால் இழைத்த தேகமென அவள் காட்சியளிக்கனைவரும் வாய் பிளந்து பார்த்தபடி இருந்தார்கள். சம்பிரதாய சடங்குகள் முடிந்தது.  அனைவரும் கலைந்து சென்றார்கள். மாப்பிள்ளை வீட்டாரும் சென்றுவிட்டனர். அக்கம் பக்கத்துக்கு வீட்டினர் மட்டும் அவர்களுடன் இருந்தார்கள்.

வந்தவர்களுக்கு நன்றி கூறி வாசல் வரை சென்று வழி அனுப்பிய முகம்மது யூசுப் வானை நோக்கினார். கோரமான கார் மேகங்கள் நாலாபக்கமும் சூழ்ந்து மாமழைக்கு அடித்தளம் இட்டன.

"யூசுப் இங்க வா" பக்கத்துக்கு வீட்டு பெரியவர் அழைத்தார். அவர் மேல் யூசுப்பிற்கு நல்ல மரியாதை உண்டு. அவரருகே சென்றார் யூசுப்

"இன்னைக்கு பெரிய மழை வர போகுது போல" என்றார் பெரியவர்.

"ஆமாங்க ஐயா ரொம்ப நாள் கழிச்சு மழை வர போகுது"

"இது சந்தோசமான மழைன்னு நினைக்கிறியா?"

"நீங்க சொல்றது புரியலைங்க அய்யா"

"மாப்பிள்ளை உன் உறவுக்காரனா?"

"ஆமாங்க ஐயா"

"மாப்பிள்ளைக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி முதல் மனைவி இறந்துவிட்டதாகவும் அவங்களுக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறதாகவும் கேள்விப்பட்டேன். அது மட்டும் இல்லாம அவனுக்கு வயசும் அதிகமாமே ?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.