(Reading time: 23 - 46 minutes)

"னக்கும் புரியுது. அவ கிட்ட எதுவும் கேக்காத  இப்போ அவளுக்கு தனிமை ரொம்ப முக்கியம். அவளுக்குள்ள இருக்க பல கேள்விகளுக்கு தனிமை தான் விடை தரும்" என்றார் யூசுப்.

ஹகீமும் பஹீராவும் இரவு உணவினை  புசித்துக்கொண்டிருந்தார்கள்.

"அக்கா சாப்பிட்டியா" என்றாள் பஹீரா

பல கற்பனைகளில் மூழ்கியிருந்த அமேலியா பஹீராவை நோக்கினாள்.

"பஹீரா! அக்காவை தொந்தரவு செய்யாத" என்றான் ஹகீம்

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

VJ Gயின் "என் மனதை தொட்டு போனவளே..." - குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

மீண்டும் தனது கற்பனைக்குள் புகுந்த அமேலியா அவ்வப்போது தோன்றும் மின்னலை நோக்கியபடி இருந்தாள். அந்த வீட்டில் எல்லாரும் ஆளுக்கொரு மூலையில் அமைதியாக  அமர்ந்திருந்தனர். மழைத்துளிகள், இடி சப்தம் தவிர வேறு சப்தம் அங்கு இல்லை. அங்கு நிலவியது எல்லாம் அமைதி அமைதி அமைதி. சுமார் இரண்டு மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை சற்று குறைந்திருந்தது  காற்றும் லேசான தென்றலாக மாறி சில்லென்று வீசியது.

திடீரென யாரோ கதவு தட்டும் ஓசை கேட்டது. இந்நேரத்தில் யார் கதவை தட்டுவது? ஒருவேளை சோதனை என்ற பெயரில் அமெரிக்கர்கள் வந்திருக்கிறார்களா என்ற சிந்தனையோடு யோசித்தபடியே கதவைத் திறந்தார் யூசுப் .அந்த வீதியில் வசிக்கும் தனது நண்பர் தான் என தெரிந்ததும் யூசுப் நிம்மதி அடைந்தார்.

"இந்த நேரத்தில் எதுக்கு வந்திருக்கிங்க ஜாஃபர்?"

"ஒரு முக்கியமான விஷயம் யூசுப். பக்கத்துக்கு வீதில இருக்க அல் ஷீபா பாட்டி ரொம்ப முடியாம இருக்காங்க. அவங்க அமேலியாவ பாக்கணும்னு விரும்புறாங்க".

"காலைல அமேலியாவ அவங்ககிட்ட கூட்டிட்டு போறேன் ஜாஃபர்"

"அவங்க இப்போவே பாக்கனும்னு ஆசைப்படுறாங்க யூசுப் . அது மட்டுமில்லாம விடியிறதுக்குள்ள அவங்களுக்கு எது வேணும்னாலும் நடக்கலாம்" என்று கூறிய ஜாஃபர் அங்கிருந்து புறப்பட்டார்

அவர்களின் உரையாடலை கேட்டுக்கொண்டிருந்த அமேலியா எழுந்து நின்று தன் தந்தையைப் பார்த்தாள்.

"என்னம்மா"

"நான் பாட்டிய பாத்துட்டு வரேன்பா"

"சரி,வாம்மா நானும் கூட வரேன்"

"இல்லப்பா, நான் தனியா போயிட்டு வரேன்"

அமேலியா சொன்னதைக் கேட்டு யூசுப் அதிர்ச்சி அடைந்தார் .பக்கத்துக்கு வீட்டிற்கு சென்றாலும் பெற்றோர் துணையோடு சென்று பழகிய மகள் .முதன் முதலாய் தனியாக செல்கிறேன் என்று கூறியதைக் கேட்டு அவர் அதிர்ச்சி அடைந்தது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை.

"இல்லம்மா, இரவு நேரம் அமெரிக்ககாரங்க ரோந்து வருவாங்க நீ தனியா போனா நல்லா இருக்காது" .

"கல்யாணம் ஆகி நான் துபாய் போயிட்ட அப்புறம் இது போல நான் தனியா போற ஒரு சூழல் உருவானா அப்போ நீங்க வருவிங்களா அப்பா?"

அமேலியா வீசிய சொற்கள் அவர் இதயத்தை பலமாகத் தாக்கின

"சரிம்மா, அந்த இடத்தில என்னால வர முடியாம போகாலாம் .ஆன உன்ன கூட்டிட்டு போக ஒரு துணை இருக்கும்ல" என்று கூறிய யூசுப் ஹகீமை அழைத்தார்.

தன் மடியில் படுத்துறங்கிக்கொண்டிருந்த பஹீரவை கீழே படுக்கவைத்து, யூசுப்பின் அருகில் சென்றான் ஹகீம்.

"அக்காவ அல் ஷீபா பாட்டி வீட்டுக்கு அழச்சிட்டு போ"

அமேலியாவும் ஹகீமும் வீதியில் ஈரமான பாதையில் நடந்து சென்றனர். வானில் கருமேகம் நாலாபுறமும் சூழ்ந்து காட்சி அளித்தது. அக்காட்சியைப் பார்க்கும் பொழுது இதுவரை  பெய்த மழை சாதாரணம் என்பது போல் தெரிந்தது .

அல் ஷீபா பாட்டியைப் பற்றி நினைத்தபடியே  நடந்தாள் அமேலியா. தனக்கு ராஜகுமாரன் போல் மாப்பிள்ளை வருவான் என அடிக்கடி கூறும் அல் ஷீபா இப்பொழுது என்ன கூறுவார் என யோசித்தாள். பாவம், அவர் தான் என்ன செய்ய முடியும்? எனக்கான விதி அப்படி எழுதப்பட்டிருக்க, மற்றவர் கூறும் வார்த்தைகளில் இன்பத்தை தேடி பயன் என்ன?

அவர்கள் நடந்து செல்லும்போது சில அமெரிக்க ராணுவ ஜீப்புகள் கடந்து சென்றன. அதில் ஒரு ஜீப் அவர்களருகே நின்றது. அதில் ஒரு ராணுவ வீரன் ஹகீமின் முகத்தில் டார்ச் வெளிச்சத்தை அடித்து, "இருவரும் எங்கே செல்கிறீர்கள்?" என ஆங்கிலத்தில் விசாரித்தான். அமேலியா பர்தாவால் தன் முகத்தை மூடிக்கொண்டாள், ஹகீம் அவர்களை முறைத்தபடி அமைதியாக நின்றான். அமெரிக்கன் அமேலியாவின் மேல் வெளிச்சத்தை ஓடவிட்டான் .

"உன் முகத்தை காட்டு" என்று ஆங்கிலத்தில் சொன்னான் .அமேலியாவின் உடல் நடுங்கியது  அப்பொழுது அவ்வழியாக வந்த ஈராக்கியர்கள் அங்கிருக்கும் சூழலை உணர்ந்தார்கள் .ஹகீமிடம் என்னவென்று விசாரித்தார்கள் அவன் நடந்தவற்றை கூறினான். ஹகீம் கூறிய விவரத்தை வந்தவர்கள் அமெரிக்கர்களிடம் கூறினார்கள்

"சரி, அவளுடைய முகத்தை காட்ட சொல்" என்றான் அமெரிக்கன்

"அவள் மணப்பெண். கல்யாணம் முடியும் வரை வேறொரு ஆணுக்கு தன் முகத்தைக் காட்டமாட்டாள்  இது எங்களின் மரபு "என கூறினார்கள் அவர்கள்

அமேலியாவின் உடல் முழுதும் டார்ச் விளக்கின் வெளிச்சத்தை ஏற்றி இறக்கினான் அமெரிக்கன்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.