(Reading time: 35 - 69 minutes)

விவன் மீது கோபத்தோடே தூங்கத் தொடங்கிய ரியா கனவுக்குள் சரிய…… அங்கே அவளுக்கு காத்திருந்தான் அந்த சேனாதிபதி….

இடமும் வலமுமாய் மெல்லத்தான் எனினும் லயத்தோடும் லயமின்றியுமாய் ஆடிக் கொண்டிருந்தது அந்த மரக்கலம். மசூலிப்பட்டிணத்திலிருந்து புறப்பட்டு வங்க கடலில் தென்மேற்காய் பிரயாணித்து பாண்டிய துறைமுகம் குலசேகரபட்டிணத்தில் இவர்கள் கரை இறங்குவதாக ஏற்பாடு.

இவர்களுக்கு அனுகூலமாக சாவகத்திலிருந்து மேலைக் காற்று வீச தொடங்கி இருந்ததால் பருத்து புடைத்தபடி அந்த மரக்கலத்தின் பாய்மரங்கள் கலத்தை சிரமமின்றியே பாண்டிய கடற்கரை நோக்கி செலுத்திவிடும்.

கலத்தின் கீழ் தளத்தில் அவர்களுக்காக மரகலதலைவன் அளித்திருந்த அந்த அறையை பாண்டிய படைத்தலைவனோடு பார்வையிட்டுக் கொண்டிருந்தாள் ருயம்மா.

கோலகொண்டாவில் அன்றொருநாள் இரவில் இரண்டாம் ஜாமத்தில் ருயமருத்ரனாய் ஆண் வேடத்தில்“நீங்கள்  பாண்டிய தேசம் அழைத்துப் போவதாக சொன்னீரல்லவா….?” என இவள் பாண்டிய சேனாதிபதியிடம் விண்ணப்பம் வைத்தாளே அப்பொழுது அவன்

“நிச்சயமாக பாண்டிய நாடு  சென்று வரலாம்… அதற்கான முழு பொறுப்பும் என்னுடையது…. இவ்விவாஹத்தில் விருப்பம் இல்லை எனும் போதும், நீர் எனை இம்மட்டுமாய் நம்பி உடன்வர கோரியதால், உமை பாதுகப்பதையும் பத்திரமாய் பாண்டியம் கூட்டி சென்று திரும்ப அனுப்புவதையும் எனது முதல் கடமையாய் ஏற்கிறேன்…..இது பாண்டிய படைத்தலைவனின் வாக்கு அல்ல….தனி மனிதன் மானகவசனின் வாக்கு…. பதவியில் இருந்தாலும் இல்லையெனினும் இவ்வாக்கிற்கு என்றும் அடியவன் நான்..” என  வாக்குதத்தம் கொடுத்ததின் விளைவாக அவனோடு கிளம்பி இருந்தவளை காகதீயத்தின் துறைமுகமான மசூலிப்பட்டிணம் அழைத்து வந்திருந்தான் மானகவசன்.

அங்கிருந்து கடல் மார்க்கமாக பாண்டிய தேசம் செல்வது அவனது திட்டம். அதற்கேற்றபடி குலசேகரபட்டிணம் வழியாய் பிரயாணிக்க இருக்கும் ஒரு மரகலத்தில் இன்று பயணத்தை துவங்கி இருக்கின்றனர்.

தன்னுடன் வந்திருந்த படைப் பிரிவை மானகவசன் தங்களோடு கடல் பயணத்திற்கு அழைத்து வரவில்லை. அவர்கள் தரை மார்க்கமாக தங்களது தேச எல்லைக்கு சென்று கொள்வார்களாம்.

ருயமருத்ரன் வேடத்தில் ருயம்மாதேவியும், பாண்டிய வரதுங்கனும், இம்மானகவசனும் தவிர இன்னும் நான்கே வீரர்கள் இவர்களுடன்…. இவர்களும் அரச கோலம் கொள்ளாமல் வணிகர்களின் உடையில் பயணித்தனர்.

மரகலத்தலைவனிடம் பயண பணம் செலுத்தியதும் அவன் இவர்களை அக்கலத்தின் இவ்வறைக்கு அழைத்து வந்திருந்தவன்…..

“பிரபு  கலத்தின் மிகசிறந்த அறை இதுதான். இது முகவாயில்…..இதை கடந்து நான் உட்பட மரகல பணியாளார்களே கூட நுழைய மாட்டோம்…..உள்ளிருக்கும் உங்கள் உடமைக்கு வெளியிலிருந்து எவ்வாபத்தும் வராது. “ அந்த அறையின் குறுகிய நுழைவு வாயிலின் உட்புறம்  மூன்றாம் அடியில் காணப்பட்ட மற்றுமொரு வாசலை சுட்டிபடி சொன்னான் அவன்…அந்த முகவாயில் சற்று அகன்று காணப்பட்டது.

“அடுத்திருக்கும் இந்த விஸ்தார அறையை உங்களவர் அனைவரும்  சயன அறையாக பயன்படுத்திக் கொள்ளலாம்.” என முகவாயின் வழியாய நுழையவும் காணப்பட்ட  அறையை காண்பித்தான்.  ஒரு புறம் வரிசையாக சில சிறு மஞ்சங்கள். மறுபுறம் அகன்ற சாளரம் ஒன்றும் சிறு மேஜை நாற்காலியும் காணகிடைத்தன. அனைத்தும் கல ஓட்டத்தில் இடம் பெயர்ந்துவிடா வண்ணம் தரையோடு தரையாக இணைக்கப் பட்டிருந்தன.

அறை முழுவதும் மரத்தால் மாத்திரமே கட்டப் பட்டிருந்தாலும்….அறையின் விஸ்தாரத்தின் நிமித்தம் ஆங்காங்கு தாங்கு தூண்கள் நின்று கொண்டிருந்தாலும் சௌகரியத்திற்கொன்றும் அங்கு குறை இருப்பதாய் படவில்லை…..

“ இன்னுமாய் உள்ளே தெரிகிறதே அது இன்னுமே விஷேஷித்த வசதிகள் கொண்டது….தலைவருக்கு பொருந்தும்….” முகவாயிலும் விஸ்தார அறையும் தாண்டி உள்ளே தெரிந்த அடுத்த வாசலை குறிப்பிட்ட மரகலதலைவன் இப்போது சேனாதிபதியைப் பார்த்தான்.

மரகலத்தின் அவ்வறைகளை பார்வையால் ஒரு முறை துழாவிய மானகவசன்….

“நன்றி மரகலத் தலைவரே…” என அந்த மரகலதலைவரை வழி அனுப்பி வைத்துவிட்டு ருயம்மாவிடம்

“ருயமரே….நீர் விருந்தினர்…..ஆக பிரதான அறையை உமக்குத்தான் கொடுக்க வேண்டும்…… நீர் அவ்வறையில் தங்கிக் கொள்ளும்” என விஷேசித்த அறையாய் மரகலதலைவன் பிரஸ்தாபித்த அறையை இவளுக்கு சுட்டிக் காண்பித்தான்.

மறுக்கும் மனநிலையில் ருயம்மாவும் இல்லை. இவ்வறையை மறுத்தால் அவள் மற்ற ஐந்து ஆடவருடன் அந்த பொது சயன அறையில் அல்லவா தங்க நேரிடும்….?

ஆக அடுத்த வார்த்தை எதுவும் எழும் முன் “நன்றி பிரபு” என்றபடி அந்த  குறிப்பிட்ட அறைக்குள் நுழைந்து கொண்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.