(Reading time: 35 - 69 minutes)

வெண் மஞ்சம், வெண்ணிற பஞ்சணை, தும்பை நிற சாளர சீலைகள் என சற்று கலாநயத்துடன் இருந்தது அறை. அறையின் சுவரில் சில ஓவியங்கள் கூட தீட்டப் பட்டிருந்தன. சீன ஓவியங்கள். நின்று அவைகளை பார்வையிட கூட தோன்றாமல்  அங்கிருந்த படுக்கையில்  சென்று அமர்ந்து கொண்டாள் ருயம்மா.

கோலகோன்டாவிலிருந்து கிளம்பி, கார்காலத்தில் நெடும் தொலைவு புரவிப் பயணம் மேற்கொண்டு, மசூலிப்பட்டிணம் வந்திருந்த காரணத்தால் உடல் சற்று சோர்ந்திருக்கிறது போலும்….

அல்லது இது வேறு காரணமாயும் இருக்கலாம்…. மனம் தங்கையை நாடியது….

கடந்த நாட்களுக்குள் கடந்து போனாள் அவள்.

மானகவசன் பாண்டியம் அழைத்துச் செல்வதாக ஒப்புக் கொண்டதுமே, ருயம்மா தன் திட்டத்தை தன் தங்கையிடம் விவரித்திருந்தாள். தன் தற்கொலை முயற்சி வரை அனைத்தையும் அவளிடம் சொல்லி வைத்தாள்.

ருயம்மாவின் தைரியம் மற்றும் வீரம் பற்றி மும்மிக்கு நன்றாகவே தெரியும்….. அவளே இத்தகைய தற்கொலை முடிவிற்கு சென்றிருக்கிறாள் எனும் பட்சத்தில் ருயம்மாவிற்கு இவ்விவாஹம் எத்தனையாய் வெறுப்பாய் இருக்கிறது என்பது இளைய சகோதரிக்கு புரிகின்றது…..

அஃதோடு ருயம்மாவின் பிடிவாதமும் விடாமுயற்சியும் கூட பிரசித்தம்….. ஆக தமக்கையின் முயற்சியை தடுக்கும் வண்ணம் பெரிதாய் எதையும்  மும்மி பேசவில்லை…. தமக்கையின் பயணத்திற்கு தன்னாலான உபச்சாரம் அனைத்தையும் செய்து கொடுத்தாள்.

ருயம்மா தங்கையிடம் தன் திட்டம் பற்றி வெளியிட இரண்டு காரணங்கள்…. முதலாவதாக இவ்வாறு அந்நிய தேசம் செல்லும் தன் முடிவை தன்னை சார்ந்த ஒருவரிடம் கூட சொல்லாமல் செல்ல அவளுக்கு மனம் வரவில்லை….

செல்லும் வழியில் மரணம் கூட நேரிடலாம்……திரும்ப தாயகம் காண்போம் என எவ்வுறுதியும் இல்லையே….

அவ்வாறு அவள் வாழ்வு அயல் தேசத்தில் முடியக் கூடுமானால்….. நீண்ட நெடுங்காலம் அவள் திரும்பி வரவில்லையெனும்போது அதை உணர்ந்து, அவளது வாழ்வு முடிந்த கதையை அவளுக்காக வாடும் பெற்றோரிடம், மகள் ஒழுக்க மரபு எதையும் மீறவில்லை… மானம் காத்தே மாண்டாள் என அறிவிக்க அவளுக்கு தன் பயணம் குறித்த முழு செய்தியையும் சொல்லி செல்ல அவசியம் இருந்தது…

அஃதோடு இன்னொரு பெரும் தேவை ஒன்றும் இருந்தது..

பாண்டிய தேசம் ஒன்றும் அடுத்த ஐந்து கல் தொலைவில் இருக்கும் பட்டணம் கிடையாது….அங்கு சென்று திரும்ப பல திங்கள் தேவைப் படும்……அதுவரைக்கும் ருயம்மா அரண்மைனையில் இல்லை என்பதை தந்தை உட்பட யாருக்கும் தெரியாமல் காக்க வேண்டியது கடும் அவசியம்.

அதை செய்து தர சாதுர்யமும் சமயோசிதமும் கொண்ட முழுமைக்கும் நம்பத் தகுந்த நபர் தேவை…..அது முயம்மாவாய் மட்டுமே இருக்க இயலும்.

தமக்கையின் காரணங்கள் தங்கைக்கும் புரியாமல் இல்லை….

 ஆக இவர்களின் தந்தை பிரதாப ருத்ரர் இருதினங்களில் தன் தலை நகரான ஒரு கல்லுவை நோக்கி பிரயாணப் பட்டபோது, தமக்கையும் தங்கையும் தாங்கள் கோலகொண்டாவிலேயே தங்குவதாக தந்தையிடம் அனுமதி வாங்கிக் கொண்டனர்.

அந்தபுரத்தில் அதுவும் இளவரசிகளின் அறைக்குள் புகுந்து, அங்கு அவர்கள் இருக்கிறார்களா என பரிசோதிக்கும் உரிமையும் அதிகாரமும் மன்னருக்கும் இளவரசிகளின் தாயாருக்கும் தவிர யாருக்கும் இல்லை என்பதால் மும்மியை அங்குவிட்டு…..

தேவை ஏற்பட்டால் ருயம்மாவின் பணிப் பெண்ணை ருயம்மாவின் உடையை உடுத்தி அவ்வப்பொழுது அந்தபுர தோட்டத்தில் உலவ செய்து……ருயம்மா அங்குதான் இருக்கிறாள் என்பது போல் ஒரு பிரம்மையை ஏற்படுத்தி சூழ்நிலையை சமாளித்துக் கொள்ளலாம் என பலவகை ஆயத்தங்களை தங்கைக்கு ஆலோசனையக அறிவுறித்துவிட்டு…..

மறுநாள் ருயம ருத்ரனாய் பாண்டிய படைத்தலைவனுடன்  பாண்டிய தலைநகர் செண்பகப்பொழில் நோக்கி தன் பயணத்தை துவக்கி இருந்தாள் ருயம்மா தேவி…..

இத்தனை தினம் கழித்து இன்று மரக்கலப் பயணம். இதோ இந்நாள் மட்டும் அவள் அன்னை தந்தைக்கு அறிவிக்காது பயணப் பட்டிருந்தாலும் அவள் கடந்து வந்தது காகதீய தேசம். ஆம் அவர்களது நாட்டின் எல்லைக்குள் இருந்தாள்.

ஆனால் இன்றோ தேச எல்லை கடக்கின்றன இவள் பாதங்கள். அதனாலா இச்சோர்வு…?

 கோட்டையிலிருந்து பயணம் துவக்கிய நாளிலிருந்து இன்றுவரைக்குமான நிகழ்வுகளில் மனதை செலுத்தினாள்…..எங்கும் எதிலும் மானகவசன்.

 இவள் சுயத்தில் தலையிடாத தலைவராய், சுகம் பேணும் ஒருவராய், பகுத்தறிவு வாதங்களில் ஞானியாய், கடிந்து கொள்ளும் நண்பராய், கடமை வீராரய், கடும் உழைப்பாளராய்…… இனிய துணைவராய்….

இவளுக்குத்தான் என்று இல்லை, உடன் பிரயாணித்த அவனது அத்தனை வீரர்களிடமும் அவரது அக்கறை தனித்துவம்தான்.

ஆனால் அவர்களிடம் குளிர்காய்விக்கும் நெருப்பாய் நெருங்கி,  அணைத்துக் கொண்டால் அழித்துவிடும் அக்கினியாய் விலகி நின்றவர், இவளிடம் இன்னொருவிதமாய் தன்னை நடத்திக் கொண்டார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.