(Reading time: 35 - 69 minutes)

விருந்தோம்பல் எங்கள் மரபு என்பவர்…. எல்லாவற்றிலும் இவளுக்கு தனிக் கவனம் செலுத்தியதில் ஆச்சர்யம் ஏதுமில்லை.

தினந்தோறும் சிறிது நேரமாவது இவளுடன் ஒரு அளவளாவல். பேச்சின் வீச்சும் திசையும் வாயு போல் எந்நோக்கியும் நீளும்…. தாய்மொழி தமிழிலும், வட மொழியிலும் ஞானி அவர்…..சிறந்த கலா ரசிகர்….

சில முறை அவருடன் வாள் பயிற்சி கூட மேற்கொண்டிருக்கிறாள்……அதில் ஒரு தினம் ஏதோ ஒரு உரையாடல்….. அது குறித்து ஆசுகவியாய் அக்கணம் அவர் ஏதோ பாடல் புனைய என…. ஒரு நிகழ்வு…

அதிலிருந்து புலவரே என சில நேரங்களில் இவள் அழைப்பதுண்டு….சிரித்துக் கொள்வார்…

அவரது புரவி மிளகனுடன் தினந்தோறும் இரவு சற்று நேரமாவது சம்பாஷிப்பார்…. அந்நேரத்தில் ஏனோ அவர் மற்ற எந்த  வீரர்களையும் அவரது உற்ற நண்பர் வரதுங்கரையும் கூட அங்கு அனுமதிப்பதில்லை…….

இவளுக்கு மட்டும் விதிவிலக்கு….. மௌனமாகத்தான் பார்த்துக் கொண்டிருப்பாள்…….ஆனால் அது இவள் மனதுக்கு மிகவும் இனிமையான நேரங்களில் ஒன்று….

எண்ணிப் பார்க்கையில், இத்தனை தினங்களில் பாண்டிய சேனாதிபதி மீது அவளுக்கு மலையளவு நம்பிக்கையும் அபிமானமும் வளர்ந்திருக்கிறதேயன்றி சற்று கூட அவநம்பிக்கை தோன்ற எதுவுமே இல்லை….. அவரை மாத்திரம் நம்பி அவரோடு பயணப்படுவதில் ஆபத்திருப்பதாய் தோன்றவுமில்லை. பின் ஏன் சோர்வாம்…?

அவளது பருவ மனதுக்குள் சிறு நெருடல்…. பருவநிலை எல்லாம் அனுகூலமாய் இருப்பதால் வெகுவிரைவில் இவர்கள் பாண்டிய தேசம் சென்றடையப் போவதாய் கேள்வியுற்றதிலிருந்துதானா இந்த சோர்வு….? ஆனால் ஏன்?

ஒரு கணம் விழிகளை மூடிக் கொண்டாள். அங்கு அவள் மனதில் மந்தகாசமாய் புன்னகைத்தான் மானகவசன்.

அதை தாங்காது அவசரமாய் இவள் இமைகளை திறக்க எதிரிலும் அரைவாசலில் அவனே நின்றிருந்தான். புன்னகை மட்டும்தான் இல்லை.

 அக்கறை கலந்த ஊடுருவல் பார்வையொன்றை சுமந்திருந்தான் அவன்.

மஞ்சத்திலிருந்து வெகு வேகமாக எழுந்து கொண்டாள் இவள்.

 “தங்கள் தனிமையில் தலையிட்டமைக்காக மன்னியும் ருயமரே….” சம்பாஷணையை இவ்வாறு துவங்கினான் பாண்டிய சேனாதிபதி.

“இல்லை….” உடனடியாய் அதை மறுத்தவள்…. “ஏன் என்னவாயிற்று?” என அடுத்துமாய் வினவினாள்.

அவன் பார்வை மொழி இயல்பு போன்று இல்லை.

“நீர் வெகு நேரமாய் வெளியே வரவில்லை…. இரவு போஜன நேரம் கடந்து கொண்டிருக்கிறது….” அவன் சுட்டிக் காண்பிக்கவும்தான் இவள் அதில் கருத்தை செலுத்தினாள்.

எத்தனை நாழிகை இவள் இவ்வாறு அமர்ந்திருந்திருக்கிறாள் இந்த மானகவசரை எண்ணிக் கொண்டு….???!!!

சிறு அதிர்ச்சியுடன் அவள் அதை உள்வாங்க…

“ ஓய்வெடுக்கிறீர் என் எண்ணினேன்……ஆனால் அப்படி இல்லையோ என இப்போது தோன்றுகிறது….. கடல் பயணம் உமக்கு ஒத்துக் கொள்ளாதோ?? எதுவும் உபாதையாய் உணருகிறீரோ?” அவனோ நலம் விசாரித்தான்.

“அதெல்லாம் ஏதுமில்லை….நான் பூரண சுகம்…..முதன் முறையாய் என் நாட்டு எல்லை தாண்டுகின்றேன்….ஏதேதோ எண்ணங்கள்…” அவள் மனதில் உதித்ததை உரைக்க….

அம்மட்டும் அறைவாயிலில் நின்றிருந்தவன் சடுதியாய் வயில் நிலைப்படி தாண்டி உள்ளே வந்தான்.

பாண்டிய நாடு அழைத்துச் செல்வீரா என முன்பு அவள் கேட்டபொழுது அவனது பார்வை எவ்வாறு இருந்ததோ அதே பார்வை இப்போதும்….

அத்தனை அத்தனை கனிவும் காருண்யமும் அக்கறையும் அரவணைப்பும் ஆறுதலும் அன்பும் ஒன்று சேர உதித்து  ஊற்றெடுக்கிறது  அவனது அக்கண்களில்…

இவள் சுயம் கொல்லும் பேராயுதம் அது…

அவளது வெகு அருகில் நின்றிருந்தான் அவன்….

அவரே உலகோ? ஆழி என்றும் அவனி என்றும், வானென்றும் வையமென்றும் சொல்வதெல்லாம் பொய்யோ?!!

இவள் தன்னிலை இழந்து தலைமகன் விழிப்பாவைக்குள் பிரவேசித்துக் கொண்டிருந்தாள்….

ஸ்…. என்றபடி சிறு முக சுளிப்புடன் தன் தோளைத் தட்டிக் கொண்டு விலகினான் அவன்.

“என்னவாயிற்று….?”

இவள் கேட்டுக் கொண்டிருக்கும் போதே அவன் வதனத்தில் வலி  மறைக்கும் கவன பாவம்…

தன் மார்பும் முதுகும் மறைத்து சுற்றியிருந்த அவனது வஸ்திரத்தை வெகு கவனமாய் உதறினான்..

சொத் என சப்தமிட்டு மர தரையில் விழுந்தது அது…. பல பல கால்களுடன் இரு விரல்கிடை நீளத்தில் மென் பருமனாய் ஒரு உயிரினம்…இவள் பார்த்தறியா பூச்சி வகை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.