(Reading time: 8 - 15 minutes)
Irulum oliyum
Irulum oliyum

அத்தானிடம் ஏதாவது வலுவில் பேசி அவன் மனப் புண்ணைக் கிளறக்கூடாது என்று ஸரஸ்வதி மௌனமாகவே இருந்துவிட்டாள். இந்த அசாதாரணமான சாந்தம் அவன் நெஞ்சைப்பிடித்து உலுக்கியது. ஏன் ஒருவரும் தன்னுடன் பேசவில்லை - என்று அவனுக்கு வியப்பாகவும் இருந்தது. ஒரு வேளை சாவித்திரியை அடித்தது ஒரு மாபெரும் குற்றம் என்று எல்லோரும் கருதுகிறார்களோ? குற்றமாக இருந்தாலும், பிறகு அவளை எவ்வளவு முறை சமாதானப்படுத்த முயன்றான்? ’மனைவியின் கைகளைப் பிடித்துக் கொண்டு நான் கெஞ்சினேன்' என்று ஒருவனுக்கு பெற்ற தாயிடம் மட்டும் சொல்லிக்கொள்ள லஜ்ஜையாக இராதா என்ன? உடன் பிறந்தவளைப்போல் ஸரஸ்வதி பழகினாலும் இந்த விஷயங்களையெல்லாம் அவளிடம் வாய்விட்டுச் சொல்ல முடியுமா? ' ஒருவனுக்கு ஏற்படும் சில உணர்ச்சிகளைப் பகிர்ந்து கொள்வதற்கு 'அந்த ஒருத்தி' தான் தேவையாகவிருக்கிறது.

தாயாக இருந்தாலும், உடன் பிறப்பாக இருந்தாலும், தோழனாக இருந்தாலும் மற்றவர்களால் பகிர்ந்து கொள்ள முடியாத சில உணர்ச்சிகளை சகதர்மிணி ஒருத்தியால்தான் வாழ்க்கையில் பகிர்ந்துகொள்ள முடியும். இதையொட்டித்தான் பெரியவர்கள் மனைவியைச் 'சகதர்மிணி' என்று பெயரிட்டு அழைக்கிறார்களோ' என்று நினைத்து ரகுபதி மனம் வருந்தினான்.

இப்படியே நாலைந்து தினங்கள் ஓடிவிட்டன. பிள்ளையின் இந்த அசாதாரணமான மௌனத்தைப் பொறுக்க முடியாமல் ஸ்வர்ணம் ரகுபதியைப் பார்த்து. "ஏண்டா! சாவித்திரி எப்பொழுது வருகிறேன் என்று சொன்னாளடா? கேட்டாயோ அவளை?" என்று கவலையுடன் விசாரித்தாள். இந்த நாலைந்து தினங்களுக்குள்ளாகவே ஊரில், சாவித்திரி திடீரென்று பிறந்தகம் சென்றதைப்பற்றியே பேச்சாக இருந்தது.

"நேற்றுக்கூட ஸ்வர்ணத்தைக் கோவிலில் பார்த்தேன். நாட்டுப்பெண் ஊருக்குப் போகிறதைப்பற்றி ஒன்றுமே சொல்ல வில்லையே" என்று அவயம் ஆச்சரியப்பட்டாள்.

"வர வர ஸ்வர்ணம் முன்னைப்போல் இல்லையடி. எந்த விஷயத்தையும் பூட்டிப் பூட்டி வைத்துக்கொள்கிறாளே பத்திரமாக!" என்று பாகீரதி அம்மாமி முகத்தைத் தோளில் இடித்துக் கொண்டு அவயம் கூறியதை அப்படியே ஆமோதித்தாள். இப்படி கோவிலிலும், குளக்கரையிலும், நடுக்கூடங்களிலும் ஸ்திரி ரத்தினங்கள் பேசுவதை அரை குறையாகக் கேட்ட ஸ்வர்ணம், மனக்கஷ்டம் தாங்காமல் பிள்ளையை மேற்கூறியவிதம் விசாரித்தாள்.

"எப்படிப் போனாளோ அப்படி வந்து சேருகிறாள். இங்கே யாராவது அவளைப் போகச்சொன்னோமா என்ன?” என்று தாயின் மீது சீறிவிழுந்தான் ரகுபதி.

"அவள் தான் முரடாக இருக்கிறாள் என்றால் நீயாவது தணிந்து போகமாட்டாயா அப்பா? ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மூலையைப் பார்த்துக்கொண்டு நின்றால் நன்றாக இருக்குமா?" என்றாள் ஸ்வர்ணம்.

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.