(Reading time: 7 - 14 minutes)
Irulum oliyum
Irulum oliyum

பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால், மகன் நல்வாழ்வு வாழவேண்டும் என்று எண்ணிய அன்னையின் உள்ளத்தில் அந்த ஆசை, சண்டை - பூசல்களுக் கிடையில் நிலைத்துத்தான் இருக்கும். அதன் முன்பு மற்றச் சிறு வியவகாரங்கள் மறைந்து போகின்றன; தெளிந்த கங்கையில் கழுவப்படும் மாசுமறுக்களைப்போல!

கீழே கூடத்தில் கலகலவென்று சிரித்துக்கொண்டே நாலைந்து பெண்கள் வந்தார்கள்.

"ஸரஸ்வதி! புது சங்கீத மண்டபத்தில் உன்னுடைய கச்சேரியாமே! என்ன பாட்டுகள் பாடப் போகிறாயடி?" என்று ஒருத்தி கேட்டாள்.

"அதெல்லாம் முன்னாடி சொல்லுவாளா? நாளைக்கே பெரிய பாடகியாகி 'தேசியநிகழ்ச்சியில் பாடினாலும் பாடுவாள். இப்பொழுது சாதாரண ஸரஸ்வதியாக இருக்கிறவள் அப்பொழுது கான ஸரஸ்வதியாகவோ, இசைக் குயிலாகவோ மாறிவிடுவாள் இல்லையா? 'நீ யார்? எந்த ஊர்?' என்று உன்னைப் பார்த்துக் கேட்டாலும் கேட்பாள். இல்லாவிடில் எல்லோருக்கும் பொதுவாக ஒரு 'நமஸ்காரம்' போட்டுவிட்டுக் காரில் போய் ஏறி உட்கார்ந்து காண்டாலும் கொள்வாள்!" என்றாள் இன்னொருத்தி.

அவள் பேசி முடித்ததும் எல்லோரும் 'கலி' ரென்று சிரித்தார்கள்.

"அப்படியெல்லாம் பண்ண மாட்டாள் ஸரஸ்வதி. இன்றைக்கு மாத்திரம் என்ன, அவள் பெரிய பாடகி ஆவதற்கு வேண்டிய தகுதி இல்லையா? குடத்துள் விளக்காக இருக்கிறாள். தன்னைப்பற்றி அதிகம் வெளியிலே சொல்லிக்கொள்ளவே அவளுக்கு வெட்கம்!" - முதலில் பேசிய பெண் ஸரஸ்வதிக்காகப் பரிந்து பேசினாள்.

இவர்கள் பேச்சுக்குப் பதில் கூறாமல் ஸரஸ்வதி புன்சிரிப்புடன் கம்பளத்தை எடுத்து விரித்து அவர்களை அதில் உட்கார்ந்து கொள்ளும்படி கேட்டுக் கொண்டாள். பிறகு, அங்கிருந்த பெண்கள் பூஜை அறையைக் கவனித்துவிட்டு, "இந்த வருஷம் ஏன் பொம்மைகளை அதிகமாகக் காணோம்? சாவித்திரி எப்பொழுது பிறந்தகத்திலிருந்து வருவாள்?" என்றெல்லாம் கேட்க ஆரம்பித்தார்கள். அங்கே நின்று பேசினால் மேலும் அவர்கள் ஏதாவது கேட்டுக்கொண்டே இருப்பார்கள் என்று நினைத்து, ஸரஸ்வதி பூஜை அறைக்குள் சென்று தட்டில் வெற்றிலை பாக்கு, பழத்துடன் வெளியே வந்தாள். வந்த பெண்கள் எல்லோரும் தாம்பூலம் பெற்றுக்கொண்டு வெளியே போய் விட்டார்கள்.

மாடியிலிருந்து அந்தப் பெண்கள் பேசியதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ரகுபதி நிதானமாகக் கீழே இறங்கி வந்தான். பூஜை அறை வாயிற்படியில் நின்றிருந்த ஸரஸ்வதியைப் பார்த்து, "சங்கீத மண்டபத்தில் உன்னுடைய கச்சேரிக்கு ஏற்பாடு ஆகி இருக்கிறதுபற்றி உனக்குத் தெரியுமா ஸரஸு? அதைப்பற்றி அழைப்பிதழ்களில் கூட வெளியிட்டிருக்கிறோமே! பத்திரிகைகளிலும் விளம்பரம் வந்திருக்கிறது" என்று சொன்னான்.

2 comments

  • இந்தமாதிரி கொடுமை எந்தக் குடும்பத்துக்கும் ஏற்படக்கூடாது! எல்லாம் ஒரு பெண்ணின் ஈகோவினால்!

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.