(Reading time: 7 - 13 minutes)
Irulum oliyum
Irulum oliyum

Flexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 04 - சு. சமுத்திரம்

ந்தி முடிந்து, பெரும்பாலானவர்கள், ‘ஐந்தோ பத்தோ’ மொய் எழுதிவிட்டுப் போய்விட்டார்கள். மணமக்களும், பார்வதியும், பெருமாளும், இந்தப் பிள்ளைகளும், அந்த ‘முக்கு வீட்டுக்குள்’ உட்கார்ந்து இருந்தார்கள்.

சின்ன அறை. சிக்கலான அறை. தட்டுமுட்டுச் சாமான்கள் மறைத்த இடம் போக, மற்ற இடத்தில் மூன்று ஆழ்வார்கள் பாடியது போல, அந்த மூவரும் உட்கார்ந்து இருந்த திண்ணையைப் போல, ‘மூவர் நிற்க, இருவர் உட்கார, ஒருவர் படுக்கும்படியான’ இடம். போதாக் குறைக்கு, அன்றைக்கு மழை பலமாகப் பெய்வது போல் தோன்றியது. வெளியே படுக்க முடியாது. எல்லோரும் உள்ளேதான் படுக்க வேண்டும். அப்படியானால், முதலிரவை எங்கே வைப்பது? மாப்பிள்ளை வீட்டிலும் வைக்க முடியாது. அங்கேயும், இதே மழை பெய்யும். இதே மாதிரியான சின்ன அறைதான்! இதே மாதிரியான குழந்தை குட்டிகள். போதாக்குறைக்கு, கிழடு கட்டைகள்.

பெருமாள், மோவாயைப் பிடித்து யோசித்துக் கொண்டு இருந்தார். மூத்த மகளின் திருமணத்தை நடத்தி விட்ட திருப்தி, அந்த முகத்தில் இல்லை. ஒன்றும் இல்லாத அவருக்கு, அவரைப் போலவே ஏழையாய் உள்ள, ரத்த உறவு இல்லாத நண்பர்கள், ரேஸ் சகாக்கள், பட்டைச் சாராயப் பங்காளிகள் வந்து ஆயிரம் ரூபாய்க்கு மேலேயே மொய் எழுதியிருக்கிறார்கள். இருந்தும் அவர் மனதில் தெம்போ, திராணியோ இல்லை. அந்தச் சமயத்தில் மட்டும், தன் கடந்த காலத்தைத் திரும்பிப் பார்த்தார்.

எப்படியெல்லாம் வாழ்ந்தேன்... ஒரு வீட்டுக்கு மூன்று வீடு வைத்திருந்தேன். மோட்டார் பைக் ஓட்டினேன். சொந்த மோட்டார் பைக்... எண்ணூரில் பத்து ஏக்கர் நிலம்... எல்லாம் கிண்டிக் குதிரை மாதிரி ஓடிட்டு. என்னோட முதலிரவு வெல்வெட் மெத்தை போட்ட கட்டிலில், பங்களா மாதிரி இருந்த வீட்டில் நடந்தது. ஆனால், என் பொண்ணுக்கு, கட்டிலுக்குப் பதிலாக வெறும் பாய்தான். பாயாவது பரவாயில்லை - அந்தப் பாய் விரிக்க இடம் இல்லையே என்ன செய்யலாம்? - கையில் ரூபாய் இருக்கு. ஓர் ஏர்கண்டிஷன் லாட்ஜ் பார்க்கலாமா? சீச்சீ! இந்த சின்னஞ்சிறுசுகளுக்கு அங்கே நடக்கிற விவரங்கள் தெரியக்கூடாது.

பெருமாள் தலையைப் பிடிக்காத குறையாக, சிந்தித்துக் கொண்டு இருந்தார். மணமகனை ரசித்துக் கொண்டு இருந்த சந்திரா, திடீரென்று ஏதோ நினைவில் பட்டவளாய் வெளியே வந்து, ஒரு நாற்காலியில் உட்கார்ந்து... மாடிப் போர்ஷனில் டி.வி. காட்சியாக வாழும் வீட்டுக்கார அம்மாவுடன் பேசிக் கொண்டு இருந்த மல்லிகாவின் கையைப் பிடித்து வலுக்கட்டாயமாக எழுப்பி, வீட்டுக்குள் வந்தாள். வீட்டுக்கார அம்மா ‘என்கிட்ட பேசிக்கிட்டு இருந்த படித்த ‘ரீசண்டான’ பொண்ணையா, முகத்துல அடிக்கறது மாதிரி கூட்டிக்கினு போற... இரு இரு...

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.