(Reading time: 7 - 13 minutes)
Muthu Sippi
Muthu Sippi

  

தாயும் மகனுமாக வீட்டை ஒழித்துத் துப்புரவு செய்தார்கள். பாத்திரம், பண்டங்களைப் பெட்டியில் போட்டுப் பூட்டி ஒரு சிறு அறையில் வைத்தார்கள். கூடத்திலே இருந்த படங்களை யெல்லாம் கழற்றித் துடைத்து வைத்தான் பாலு.

  

பவானி கூடத்துப் பக்கம் வந்தவள் சுவரை அண்ணாந்து பார்த்தாள். பார்த்தவள் திடுக்கிட்டு ”எங்கேயடா நடராஜரின் படம்?" என்று கேட்டாள். சுருட்டி வைத்திருந்த சாக்குப் பையிலிருந்து படத்தை எடுத்துக் கொடுத்தான் பாலு. பவானி அதை வாங்கி மார்புடன் அணைத்துக் கொண்டாள். ”இதை மட்டும் நாம் எடுத்துப் போகலாம் பாலு" என்று கூறிவிட்டுப் படத்தைப் பத்திரமாகத் தன் பெட்டியில் வைத்துப் பூட்டினாள்.

  

இதற்குள் மாலையும் நெருங்கி வந்தது. பவானியும் பாலுவும் ஊருக்குப் போவதால் அன்றும் மறு நாளும் தங்கள் வீட்டிலேயே சாப்பாடு என்று பார்வதி சொல்லி விட்டாள். சாமான்களைக் கட்டி வைத்த பிறகு பவானிக்கும் பொழுது போகவில்லை. தெருவிலே நின்று தூரத்தில் தெரியும் பசுபதி கோவிலைப் பார்த்துக் கொண்டிருந்தாள். மாலைக் கதிரவன் ஒளியில் குளித்துக் கொண்டிருந்தது கோபுரம்.

  

'நாளை இந்நேரம் சென்னையில் இருப்பேன்' என்கிற எண்ணம் அவள் மனத்தை வேதனையில் ஆழ்த்தியது. ஐந்தாறு வருஷங்களுக்கு மேலாகப் பழகிப் போயிருந்த அவ்வூரை விட்டுச் செல்ல அவளுக்கு வருத்தமாக இருந்தது.

  

முன்பு ஒருதரம் அவள் சென்னை போயிருந்தபோது எழும்பூரில் ரயிலை விட்டு இறங்கியதும் ஒரு பரிதாபமான காட்சியைக் கண்டாள். பரிதாபம் மட்டும் அல்ல. வெட்கப்படவும், அருவருப்படையவும் வேண்டிய காட்சி அது.

  

கர்ப்ப ஸ்திரீ ஒருத்தி தனக்குப் பிரசவ வேதனை கண்டிருப்பதாக முக்கி முனகிக் கொண்டிருந்தாள். அவளோடு இன்னும் இரண்டு குழந்தைகள் இருந்தார்கள். அவள் உண்மையான கர்ப்பஸ்திரீதான்! வயிற்றில் துணிகளைச் சுற்றிக் கொண்டிருக்க-வில்லை. ஆனால் அவளைப் பாசாங்குக்காரி என்று ஏசி பலர் உதாசீனம் செய்தனர். கேலியாகப் பேசினர். சிலர் இரக்கப்பட்டுப் பொருள் உதவியும் புரிந்தார்கள்.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.