(Reading time: 8 - 16 minutes)
Arumbu ambugal
Arumbu ambugal

இப்ப இறங்குங்க. இந்தப் பக்கமா முதலாளி ஐயா வந்தால் கோவிப்பார்" என்றான் வண்டிக்காரன்.

  

காமாட்சி அம்மாள் எல்லோருக்கும் முன்னதாக இறங்கி சாலையோரம் நின்றாள். சாமான்களைத் தகப்பனார் வண்டியிலிருந்தபடி எடுத்துத் தர கமலாவும் விசுவுமாகப் பிடித்து மெல்லக் கீழே இறக்கி வைத்தார்கள்.

  

வண்டிக்காரன், "தே, , உம், தே! எளூந்திருங்கறேன்!" என்று மாட்டை அதட்டியும் தாஜா பண்ணியும் பார்த்துக் கொண்டிருந்தான்.

  

காமாட்சி அம்மாளைத் தவிர மற்றவர்கள் காரியமாக இருந்ததால் நவநாகரிகமாக உடையணிந்த ஒரு பெண்மணி அந்த வழியாகப் போவதை அவர்கள் பார்க்கவில்லை. காமாட்சி அம்மாள் மட்டும் அவளை நிறுத்தி, "ஏண்டி பெண்ணே! இந்த ஊரில் இராத் தங்க இடம் கிடைக்குமா?" என்று கேட்டாள்.

  

அவள் குரல் ஒலித்ததும் மற்ற மூவரும் திரும்பிப் பார்த்தனர்.

  

அந்தப் பெண் மிகவும் அழகான யௌவன மங்கை என்பதை முதல் பார்வையிலேயே கண்டாள் கமலா. அடக்கமான ஆனால் நாகரிகமாகத் தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தாள். கையிலிருந்து தொங்கிய 'ஹாண்ட் பாக்' மடித்து வைத்திருந்த சிறு குடை, நீரோட்டம் போன்று நெளிநெளியான பட்டைக் கோடுகளை உடைய மெல்லிய ஆறு கெஜ சேலை. சிறிதளவு குதிகாலை உயுர்த்திக் காட்டிய ஸாண்டல்ஸ். இடது கரத்தில் கைக்கடிகாரம். வலக் கரத்தில் ஒரே ஒரு தங்க வளையல். கழுத்தில் டாலருடன் ஒற்றை வடச் சங்கிலி. காதில் நவீன மோஸ்தர் தோடு, பின்னிப் பிச்சோடா போட்ட கேசம். காதருகே சுருண்டு தொங்கிய மயிரிழைகள், பவுடர் பூசிப் பளிச்சென்ற முகம், நெற்றித் திலகம், மைதீட்டிய விழிகள், எடுப்பும் எழிலும் மிக்க தோற்றம் எல்லாவற்றையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்த்துக் கொண்ட கமலா, தன்னுடைய பயணக் களைப்பு மிக்க கசங்கிய கோலத்தையும் கர்நாடக பாணியையும் கூடவே எண்ணிப் பொருமினாள்.

  

'இவள் ஏதோ உத்தியோகத்தில் இருக்கிறாள்' என்பது உடனே புரிந்து போயிற்று கமலாவுக்கு. கரத்தில் அவள் மடித்துப் போட்டிருந்த கறுப்புக் கோட்டு அவளை ஒரு வக்கீல் என்று காட்டிக்

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.