(Reading time: 5 - 10 minutes)
Arumbu ambugal
Arumbu ambugal

Flexi Classics தொடர்கதை - அரும்பு அம்புகள் - 30 - அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி

அத்தியாயம் 30 -- துயர அலைகள்!

  

மலா காய்கறிப் பையுடன் வீட்டின் படியேறியபோது உள்ளே பெற்றோர் ஏதோ விவாதத்தில் ஈடுபட்டிருப்பது கேட்டது. தன் பெயரும் அடிபடவே கமலா சற்றுத் தயங்கினாள். ஒட்டுக் கேட்பது தவறு என்று மனம் இடித்துக் காட்டினாலும் அவளால் ஆவலை அடக்கிக் கொள்ள முடியவில்லை. ஜன்னல் ஓரமாக நின்றாள்.

  

"அந்த மனுஷன் ரங்கநாதன் பாலைக் கொடுத்துக் கோலையும் காட்டுகிற மாதிரி நடந்து கொண்டார் பார்த்தியா?" என்றார் மாசிலாமணி. "பத்தாயிரம் பெறுமானம் உள்ள அட்டிகையை உன் கரத்திலே வைத்து விட்டு, ஐந்து நிமிஷம் ஆவதற்குள் வாடகையும் முன் பணமாக முன்நூறு ரூபாய் அனுப்பச் சொன்னாரே. அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?"

  

"தெரியாம என்ன? 'உங்க பெண்ணை எனக்குக் கட்டிக்கொடுத்தால் எப்பேர்ப்பட்ட ஐசுவரியங்கள் காத்திருக்கின்றன என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். கூடவே உங்களுடைய ஏழைமை நிலையையும் புரிந்து கொள்ளுங்கள்' என்று சுட்டிக் காட்டினார்..... வாடகை கொடுக்க வக்கில்லாமல்தானே, இருக்கிறோம்.

  

"என்னதான் இருந்தாலும் பதினாறு வயதுப் பெண்ணை அறுபது வயசுக் கிழவனுக்கு எப்படி மணம் செய்து கொடுக்கிறது? ஊரிலே நாலு பேர் என்ன சொல்லுவாங்க?"

  

"ஊர்க்காரர்களுக்கு என்ன, எதை வேணுமானாலும் பேசுவாங்க. நாம் இப்படிக் கஷ்டப்படுகிறோமே ஊர்க்காரங்க வந்து ஒத்தாசை செய்கிறதுதானே?

  

நான் சொல்கிறேன் கேளுங்க. மூணு வயசிலே கமலாவை எடுத்து வளர்க்க ஆரம்பிச்சோம். பதின்மூன்று வருஷங்களாக அவளுக்காக நாம் படாத கஷ்ட நஷ்டங்களா? இப்போது நமக்குக் கஷ்ட காலம் வந்துவிட்டது. தினம் போது விடிந்தால் இன்றையச் சாப்பாட்டுக்கு என்ன வழி என்று யோசனை. அவ கஷ்டப்படாம நாம் வளர்த்தோம். இப்போ நம் கஷ்டம் அவளால் தீரணும்னு இருந்தால் தீரட்டுமே? ஆறு வீடு, நூறு காணி நிலம். பாங்கில் ரொக்கமாக மூன்று லட்சம்..... ஏங்க பணத்தையெல்லாம் ஒரே பாங்கியிலே போட்டு வைக்கிறாரே? திடீர்னு பாங்கு மூழிகிப் போயிடுச்சுன்னா?"

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.