(Reading time: 27 - 54 minutes)
Akal vilakku - Mu. Varataracanar
Akal vilakku - Mu. Varataracanar

"இவன் எப்படி இருந்தாலும் இவனுடைய அம்மா, அப்பா அத்தை எல்லாரும் நல்லவர்கள். குடும்பமே நல்ல குடும்பம். இவனும் என்னிடம் மிகமிக அன்பாக இருந்தான். இருவரும் ஓர் உயிர் போல் மூன்று ஆண்டுகள் கழித்தோம்" என்றேன்.

  

"சந்திரனுடைய ஊர் எது?" என்றான்.

  

ஊர் முதலியவற்றை எல்லாம் விரிவாகக் கூறினேன். அன்றுதான் மாலனும் தன் ஊரைப் பற்றியும் குடும்பத்தைப் பற்றியும் விரிவாகக் கூறினான். சிறிது நேரம் வரையில் அக்கறையோடு கேட்டுக்கொண்டிருந்தேன். பிறகு சந்திரனைப் பற்றிய எண்ணம் வந்துவிட்டது. மாலனை உட்காரவைத்து விட்டே எழுந்து போய்ப் பக்கத்து அறையைப் பார்த்தேன். பழையபடியே கதவு பூட்டியிருந்தது. திரும்பி வந்தேன்.

  

"இன்னும் வந்திருக்க மாட்டான்" என்றான்.

  

"வரவில்லை" என்றேன்.

  

"சரி, சரி படி நம் கடமையைச் செய்யவேண்டும்" என்று அவன் எழுந்து சென்றான்.

  

நேரம் ஆக ஆக என் கவலை மிகுதியாயிற்று. என் அறையின் வாயிற்படியிலேயே நின்றேன். கால் நோகவே, உள்ளே நாற்காலியைச் சன்னல் பக்கமாக இழுத்துப் போட்டுக்கொண்டு, வழியில் போவோரை எல்லாம் பார்த்திருந்தேன். மணி ஒன்பது அடிக்கும் வரையில் அவ்வாறே இருந்தேன்.

  

ஒருகால் இமாவதியையே தேடிக்கொண்டு போய் விட்டானோ? திருமண ஏற்பாடு உண்மைதானா என்று கேட்டு வருவதற்காகப் போனானோ? அல்லது வேறு யார் வீட்டுக்காவது போயிருப்பானோ? அவனுக்கு இந்த ஊரில் யார் நண்பர்கள்? யாரும் இருப்பதாகத் தெரியவில்லையே. உணவுக் கூடத்துக்குப் போய் உண்ட பிறகு, தனியே இருப்பதற்குப் பிடிக்காமல், அங்கிருந்து யாரேனும் ஒரு நண்பனுடைய அறைக்குப் போயிருக்கலாம் என்று எண்ணினேன். உடனே எல்லா அறையையும் பார்த்துவர வேண்டும் என்று மனம் தூண்டியது. எழுந்து அறையைப் பூட்டி விட்டு மெல்ல எல்லாப் பக்கத்தையும் சுற்றி வந்தேன். மாலனின்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.