(Reading time: 13 - 25 minutes)
Thulasi maadam - Naa.Parthasarathy
Thulasi maadam - Naa.Parthasarathy

கமலி சர்மா முதலியோருக்கு வாதிகள் உரிய செலவுத் தொகையைத் தரவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது - எதிர்பார்த்ததுதான் என்றாலும் வேணு மாமா உற்சாகமாக முகமலர்ந்து, "பார்த்தீரா? இந்தத் தீர்ப்பைத்தான் நான் எதிர்பார்த்தேன்" என்றார் சர்மாவிடம். ரவி ஓடிவந்து வேணு மாமாவைப் பாராட்டிக் கை குலுக்கினான். கமலி மனப்பூர்வமாக நன்றி சொன்னாள். அன்றைய மாலைச் செய்தித் தாள்களுக்கும் அடுத்த நாள் காலைச் செய்தித் தாள்களுக்கும் இதுதான் தலைப்புச் செய்தியாக இருந்தது. சீமாவையர் கோஷ்டி, தீர்ப்பைக் கேட்டபின், "கலி முத்திப் போச்சு! உலகம் நாசமாத்தான் போகப் போறது. உருப்படப் போறதில்லை" - என்று வயிற்றெரிச்சலோடு சொல்லத் தொடங்கியிருந்தது. பழிவாங்கும் வேலை, கமலி-ரவி கல்யாணத்துக்குப் புரோகிதர், சமையற்காரர்கள் கிடைக்காதபடி செய்வது ஆகிய சில்லரைக் குறும்புகளில் உடனே ஈடுபட்டார் சீமாவையர். புரோகிதர்களை எல்லாம் அவரால் தடுத்துவிட முடிந்தது.

   

"ஓய் ஜம்புநாத சாஸ்திரி! இன்னிக்கு வேணு மாமா பணத்தை வாரிக் குடுக்கப் போறார்னு சாஸ்த்ரோக்தமா அங்கீகரிக்கப்படாத கல்யாணத்துக்கெல்லாம் புரோகிதரா போய் உட்கார்ந்து நீர் அதை நடத்திக் குடுத்துடறது சுலபம். நிறைய வருமானமும் கிடைக்கும். ஆனால் இதுக்கப்புறமும் நாளைப் பின்னே ஊர்லே நாலுபேர் உம்மை மதிச்சு நல்லது கெட்டதுக்கு வாத்தியாரா ஏத்துப்பாளாங்கறதை யோசியும்" என்று புரோகிதரைக் கூப்பிட்டுக் கலைத்தார் சீமாவையர்.

   

புரோகிதர் ஜம்புநாத சாஸ்திரி தயங்கினார். பயப்பட்டார். திடீரென்று காசி யாத்திரை போவதாகச் சொல்லிக் கொண்டு ஊரை விட்டுத் தலைமறைவாகி விட்டார்.

   

"கலியாணத்துலேதான் காசியாத்திரை வரும். ஆனா அதுக்கு முன்னாடி இவரே காசியாத்திரை புறப்பட்டுவிட்டாரோ?" என்று அதைப்பற்றிக் கேலியாகச் சர்மாவிடம் கூறிவிட்டுச் சீமாவையர் போன்றவர்களுக்குப் பயப்படவும் தயங்கவும் செய்யாத நகர்ப்புறப் புரோகிதர் ஒருவரைத் தந்தி கொடுத்து வரவழைத்தார் வேணு மாமா. புரோகிதரிடம் பலித்ததுபோல் உள்ளூர்ச் சமையற்காரரிடம் சீமாவையரின் ஜம்பம் சாயவில்லை. சமையல்காரச் சங்கரையர், "நான் பத்தாளை வச்சுண்டு எப்படா கலியாணங்கார்த்திகை நல்லது கெட்டது வரப்போறதுன்னு தேடி அலைஞ்சிண்டு காத்திண்டிருக்கேன். வர்ற வேலையை உமக்காக என்னாலே விட முடியாது. அதுவும் அபூர்வமாக நாலுநாள் கல்யாணம். முன்னே ஒருநாள்; பின்னே ஒருநாள்னு சமையல்காராளுக்கு ஆறு நாள் வேலை. பேசாமே உம்ம வேலையைப் பார்த்திண்டுபோம். 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.