(Reading time: 13 - 26 minutes)
Thazhampoo - Su Samuthiram
Thazhampoo - Su Samuthiram

மேலும் ஐந்து தேங்காய்களையும் பையினுள் போட்டுக் கொண்டு, கைக்கு எட்டிய ஒரு கொய்யாப் பழத்தைப் பறித்து அணில் மாதிரி கொரித்துக் கொண்டு வெளியேறப் போனாள். அந்தச் சடை நாய் எம்பி எம்பிக் குலைத்தது. உடனே, இவள் உள்ளே கிடந்த தேங்காயை எடுத்து அதன் மேல் எறியப் போவதுபோல் பாவலா செய்தாள். அது நிசமாகவே ஒரு 'சடைதான்'; உடனே பம்மிக் கொண்டு, வாலாட்டியது.

   

சரோசா, அந்த இரண்டாவது குறுக்குத் தெருவில் தெற்காக நடந்து, கிழக்காகத் திரும்பி நின்றாள். ஒரு குண்டுகுழி காலிமனை, தாலி மாதிரியான வேலிச் சுவரோடு வெறிச்சோடிக் கிடந்தது. அந்தப் பக்கமாகப் போனாள். வேலிச் சுவரைப் பிடித்தபடி எட்டிப் பார்த்தாள். இரண்டாவது குறுக்குத் தெருவில், ஆள் அரவம் தெரியவில்லை. பகல் ஒரு மணி என்பதால், அதையே நள்ளிரவாக அனுமானித்து, பங்களாக்காரிகள் தூங்குகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டாள்.

   

காலிமனைச் சுவரில் வேல் வடிவத்திலும் சுண்ணாம்பு டப்பா வடிவத்திலும் குத்தி வைக்கப்பட்டிருந்த கண்ணாடிச் சிதறல்களை கையை வைத்து ஆட்டி ஆட்டி எடுத்துப் போட்டாள். பிறகு, இரும்புக் கம்பியால் கண்ணாடிச் சிதறல்களை குத்திக் குத்தி சிதறடித்தாள். கோணிப் பை சுவரில் தாவி லாவகமாக நின்றாள். அவளைப் போலவே நின்ற ஒரு பூனை, அவள் வாயில் தொங்கிய கோணிப்பையை மிகப் பெரிய கோரப்பல்லாக அனுமானித்து, அவள் தன்னைத்தான் பிடித்துத் தின்ன நிற்கிறாள் என்று பயந்து கீழே குதிக்க, அந்தப் பூனை தன்னைப் பிடிக்கத்தான் தாவுகிறது என்று ஒரு மைனா குருவி ஆகாயத்தில் பறக்க, சரோசா எதிர் வீட்டுப் பங்களாவை பார்த்துவிட்டு 'அடடே மயிலு' என்று வாய்விட்டுப் பேசினாள். பிறகு, தப்புக்குத் தண்டனை கொடுப்பது போல தலையில் லேசாய் அடித்துக் கொண்டு தன்பாட்டுக்குப் பேசினாள்:

   

"அட கண்றாவியே.. பங்களாம்மா வீட்டு பச்சைப் புடவையை ஏதோவொரு 'குடச' வேலைக்காரி தோய்ச்சு, மாடிச் சுவர்ல போட்டிருக்காள். அது இன்னாடான்னா, தென்ன ஓல இடுக்கு வழியாய் பார்த்தால், மயிலு மாதிரி கீது. வாழ்வும் இது மாதிரி தானோ? அடடே! நான் கூட சினிமாவுக்கு வசனம் எழுதலாம்போல - சீ.. அந்தப் பொழப்பு சொதப்புற பொழப்பு... எவனாவது காலுல, கையில விழுந்தா, நடிக்கறதப்பத்தி யோசிக்கலாம். இன்னும் ரஜினிகாந்த் மாதிரி பொம்மனாட்டிங்க யாரும் வரலியே.."

   

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.