வைத்திருக்கிறேன். சாப்பிடுங்களேன்!" என்று கூப்பிட்டாள் காமு.
ராமபத்திரய்யர் மோர் தீர்த்தத்தைப் பருகி விட்டு, களைப்பு நீங்கப் பட்டவராய், "என்னவோ சொல்ல வந்தாயே, அம்மா! என்ன விஷயம்? தபால் ஏதாவது வந்ததா?" என்று கேட்டார்.
"யாரோ நடேச சர்மாவின் பிள்ளையாம்; சங்கரன் என்று சொன்னார். உங்களைப் பார்ப்பதற்காக வந்திருந்தார். திரும்பவும் வருவதாகச் சொல்லிவிட்டுப் போய் இருக்கிறார்.”
"ஓஹோ! இருந்துவிட்டுப் போகச் சொல்லுகிறது தானே? அவன் அப்பாவும் நானும் பால்யத்தில் ஒன்றாகப் படித்தவர்கள் என்று அடிக்கடி சொல்லி இருக்கிறேனே?'
"அவரை இருந்து விட்டுத்தான் போகச் சொன்னேன். ஏதோ அவசர வேலை இருப்பதாகவும், மறுபடியும் கட்டாயம் வருவதாகவும் சொல்லி விட்டுப் போனார்" என்றாள் காமு.
இந்தப் பையனை நான் பத்து வருஷங்களுக்கு முன்பு பார்த்தது. பையன் ரொம்பவும் கெட்டிக்காரன். இப்போது அவனுக்குக் கல்யாணம் பண்ணுகிற வயசு. ஒருவேளை கல்யாணம் ஆகிவிட்டதோ என்னவோ!" என்று தமக்குத் தாமே சொல்லிக் கொண்டார் அவர். பிறகு ஏதோ நினைத்துக் கொண்டவர் போல், "அம்மா எங்கே போய் இருக்கிறாள்?" என்று கேட்டார்.
"கோபு அகத்திற்கு அப்பளம் இடுவதற்குப் போய் இருக்கிறாள், அப்பா. ஏன் கேட்கிறீர்கள்?"
"அந்தப் பிள்ளை வந்தால் ஏதாவது 'டிபன்' தயாரிக்க வேண்டாமா? தினம் தினம் அப்பளம் இடுவதற்கு இவள் கிளம்பி விடுகிறாளே?" என்று கோபித்துக் கொண்டார் அவர்.
"நான் செய்து விடுகிறேன் அப்பா. அம்மா வந்துதான் அதைச் செய்ய வேண்டுமா என்ன? இது ஒரு கஷ்டமும் இல்லை” என்று கூறிவிட்டுக் காமு சமையலறைக்குச் சென்றாள்.
ராமபத்திரய்யர் வெயிலில் நடந்து வந்த களைப்பால் ஊஞ்சலில் படுத்துக் கொண்டு ஆழ்ந்த நித்திரையில் ஆழ்ந்தார். சமையலறையில் இருந்த காமு அவசர அவசரமாக இட்டிலியும், சட்டினியும் செய்வதில் முனைந் திருந்தாள். ஆமை நகருவதுபோல் அவள் தாயார் விசாலாட்சி செய்யும் வேலைக்கும், காமு பரபரவென்று செய்யும் வேலைக்கும் மிகவும் வித்தியாசம்