இருந்தது. அடுப்பில் இட்டிலிப் பாத்திரத்தை வைத்துவிட்டு காமு கொல்லையிலிருந்து பறித்து வந்திருந்த கனகாம்பர மலர்களைச் செண்டாகக் கட்டிக் கொண்டிருந்தாள். நொடிப் பொழுதில் பூமாலையும் தொடுத்தாயிற்று. காலையில் வந்து போனவர் திரும்பவும் வதவதற்குள் தலை பின்னிப் பூவைச் சூட்டிக் கொள்ள. வேண்டும் என்கிற ஆசையும் அவளுக்கு ஏற்பட்டது. கும்மட்டி அடுப்பில் காபிக்காக தண்ணீர் வைத்து விட்டுக் காமரா அரைக்குள் சென்று தலை பின்னிக் கொள்ள ஆரம்பித்தாள்.
காமு தலை பின்னிக் கொண்டு வெளியே வருவதும் அவளுடைய தாயார் விசாலாட்சி அப்பளக் கச்சேரியிலிருந்து திரும்பி வருவதும் சரியாக இருந்தது. கூடத்தில் ஊஞ்சலில் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருக்கும் தன் கணவரைப் பார்த்ததும் அவளுக்கு ஆத்திரமும், கோபமும் ஏற்பட்டன. விடு விடு என்று சமையலறைக்குச் சென்று குடத்திலிருந்து ஒரு டம்ளர் குளிர்ந்த தண்ணீர் சாப்பிட்டு விட்டு. ஆயாசத்துடன் காலை நீட்டிக் கொண்டு உட்கார்ந்தாள்.
"ஏண்டி இதற்குள் அடுப்பு மூட்டி விட்டாய்? இப்போ என்ன அவசரம்?" என்று இரைந்து கேட்டாள் விசாலாட்சி.
"யாரோ அப்பாவுக்குத் தெரிந்தவர்கள் வருகிறார்கலாம் அம்மா!" என்று கூறிவிட்டு காமு அடுப்பு வேலையைக் கவனிக்க முனைந்தாள்.
"ஆமாம். வேறே வேலை என்ன உன் அப்பாவுக்கு? தை பிறக்கப் போகிறது. வழி பிறந்தால் தான் தேவலையே! கன்யாகுமரி மாதிரி இன்னும் எத்தனை நாளைக்கு நிற்கப் போறியோ?''
காமுவுக்குத் தாயாரின் கடுமையான வார்த்தைகள் புதியவையல்ல. தினம் பொழுது விடிந்து பொழுது போகும் வரையில் ஓயாமல் விசாலாட்சி ஏதாவது சொல்லிக் கொண்டுதான் இருப்பாள். மாறி மாறிக் கணவனையும் பெண்ணையும் ஏதாவது சொல்லாமல் அவளால் இருக்க முடியாது.
ஊஞ்சலில் தூங்கிக் கொண்டிருந்த ராமபத்திரய்யர். விழித்துக் கொண்டார். சமையலறையில் தாய்க்கும் மகளுக்கும் நடந்த பேச்சைக் கவனித்தார். வயசு வந்த பெண்ணிடம், வர வர விசாலாட்சி மனம் நோகும்படி நடந்து கொள்வது அவருக்கு மிக வருத்தத்தை அளித்தது. காமுவுக்குச் சிறு வயதிலிருந்த கலகலப்பான சுபாவமும், குறும்புத்தனமும் மறைந்து போய்