ஆட்டி வைக்கிறாள் மாமனாரையும், சங்கரனையும்! அவனானால் வீட்டை, வாசலை விட்டு விட்டு எங்கோ கண் காணாத சீமையில் போய்க் கிடக்கிறான்! இந்தப் பீடை அவன் பங்கையும் சேர்த்துச் சாப்பிட்டு விட்டு நீலி வேஷம் போடுகிறாளே?"
பஞ்சுப் பொதியில் நெருப்பு பிடித்தது போல் புடவை விஷயம் வீடு பூராவும் ஒரு நொடியில் பரவியது. "தலைக்குத் தலை நாட்டாண்மையா?" என்று கறுவிக் கொண்டு மீனாட்சி அம்மாள் ஆத்திரத்தோடு வந்தாள் புடவையைப் பார்க்க! 'த்சூ' என்று சூள் கொட்டிவிட்டு, வழக்கத்தை விடச் சீக்கிரமாகவே நீலா தன் மாடி அறைக்குச் சென்று விட்டாள்.
'சங்கரா! நீ புத்திசாலி அப்பா. வீட்டிற்கு வாழ வந்த பெண்ணை மனம் நோக வைக்காமல் சுமாரான விலையிலாவது புடவை வாங்கி வந்தாயே?" என்று சர்மா பிள்ளையிடம் கூறிச் சந்தோஷப்பட்டுக் கொண்டார். ஆனால், மாடி அறையில் புயல் அடிக்கப் போகிறது என்று அவருக்குத் தெரியுமா என்ன?
இரவு சாப்பாட்டுக்கு அப்புறம் அம்மா வாங்கி இருந்த புடவையுடன் மாடி அறைக்குச் சென்றான் சங்கரன். நீல விளக்கொளியில் பிரித்த ஆங்கிலப் புஸ்தகம் ஒன்றை மார்பின் மீது வைத்துக் கொண்டு ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள் நீலா. விவாகமான ஒன்றரை வருஷங்களுக்கு அப்புறம், என்றுமில்லாத ஆசையுடன், காதலுடன் தன் மனைவியை நெருங்கி அவள் நெற்றியில் அன்பாகக் கை வைத்து அவளையே உற்றுப் பார்த்தான் சங்கரன். அவன் கரஸ்பரிசம் பட்டதும் நீலா விழித்துக் கொண்டாள். எரியும் நெருப்பிலிருந்து சிதறி விழுந்த இரண்டு நெருப்புத் துண்டுகளைப் போல் அவள் கண்கள் கதகத வென்று கோபத்தில் பிரகாசித்தன. அவன் கையை உதறிவிட்டுச் சடக்கென்று படுக்கையில் எழுந்து உட்கார்ந்தாள். "என்னை நீங்கள் ஒன்றும் தொட வேண்டாம்!" என வெடுக்கென்று கூறிவிட்டு, ஜன்னல் ஓரம் போய் நின்றாள் நீலா.
"ஏன் இந்த மாதிரி மகாராணி உத்தரவு போடு கிறாளோ?" என்று நாடக பாணியில் கேட்டுச் சிரித்தான் சங்கரன்.
"நான் ராணியுமில்லை. நீங்கள் ராஜாவும் இல்லை நான் ஒரு ஏமாந்தவள். நீங்கள் ஏமாற்றியவர்!" என்று அழுத்தமாகக் கூறிவிட்டு, மறுபடியும் தகிக்கும் பார்வையில் அவனைச் சுட்டெரித்து விடுவது போல் பார்த்தாள்.